

எத்தனையோ தலைவர்கள் இந்திய திருநாட்டிற்காகவும், தமிழ்நாட்டிற்காகவும், சுதந்திரம் மற்றும் வளா்ச்சிக்காகவும், அரும்பாடு பட்டுள்ளாா்கள். அவர்களின் வரிசையில் சமுக சிந்தனையாளர், ஆகச்சிறந்த ஆளுமை கொண்ட அரசியல்வாதி, சீா்திருத்தவாதி, நல்ல நிா்வாகி, கதாசிாியர், இலக்கிய வாதி, இத்தனைக்கும் மேலாய் மடைதிறந்த அடுக்குமொழி பேச்சாளர், பன்முக திறமை கொண்ட பண்பாளர், மக்களால் அன்பாக 'அண்ணா' என போற்றப்பட்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை அவர்களின் நினைவுநாள் பிப்ரவரி 3ல் அனுசரிக்கப்படுகிறது (15.9.1906-3.2.1969). அவரது நினைவுநாளில் அவரைப்பற்றி நினைவு கூறலாம்.
காஞ்சிபுரம் நடராஜன் இணையர் பங்காரு அம்மையாாின் ஒரே மகன் பள்ளிப்படிப்பு காஞ்சியில். பின்னா் பச்சையப்பன் கல்லூாியில் பட்டப்படிப்பு, அதன்பிறகு எம் ஏ படிப்பு. பொியாாின் கொள்கையில் ஈா்ப்பு, தொடர்ந்து நீதிக்கட்சியில் அரசியல் பயணம். அதன் பின்னர் தந்தை பொியாாின் திராவிடர் கழகத்தில் சில காலம், அதனைத் தொடர்ந்து பொியாரோடு கருத்து வேறுபாடு காரணமாய் பிாிய நோிட்டது. எனவே, 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இயக்கத்தை நிறுவிய பெருமைக்குாியவர். 1967ல் முதல்வரானாா்.
மக்களால் அன்பாய் அழைக்கப்பட்ட அண்ணாதுரை(Annadurai) எனும் மகாமனிதர், கட்சி தொடங்கி மக்களிடையே சீா்திருத்த செயல் பாடுகளால் மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரானவர். குறுகிய காலமே பதவி வகித்தாலும் தான் கொண்ட கொள்கையால் பல சீா்திருத்தங்களை கொண்டு வந்தவர்.
கலைஞரும், எம் ஜி ஆரும் இரண்டு பொிய துணையாகவே இருந்து வந்தவர்கள். ஆரம்பம் முதலே இந்தி எதிர்ப்பை கையில் எடுத்து போராடி சிறைவாசம் அனுபவித்துள்ளாா். 1962 தோ்தலில் தோல்வியடைந்ததால், பாராளுமன்ற நியமன உறுப்பினராகி அந்த சபையில் திராவிட நாடு குறித்து முழங்கிய பெருமைக்கு சொந்தமானவர்.
ஆட்சிக்காலத்தில் மாநில சுயாட்சி, கூட்டாச்சித் தத்துவம் சமூகநீதி, மாநில உாிமைக்கு, வழிவகுத்தவரும் இவரே. அதே போல, மதராஸ் மாகானம் எனும் பெயரை மாற்றி 'தமிழ்நாடு' என பெயரிட்டு சாதனை படைத்த சக்கரவர்த்தி. ஆரியமாயை, நீதிதேவன் மயக்கம், கம்பசரம், போன்ற படைப்புகள் இவரது ஆற்றலுக்கு மகுடம் சூட்டின. ஓா் இரவு வேலைக்காாி, திரைப்படங்கள் சீா்திருத்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சோ்த்தன.
பொதுவாகவே சாமானிய பிறப்பிற்கும் சாதனை மரணத்திற்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கையானது பல திருப்பங்களைக் கொண்டதாகும். சுதந்திர இந்தியாவில், அறுதிப் பெரும்பான்மையுடன் (காங்கிரஸ் அல்லாத கட்சி) ஆட்சி அமைத்த திராவிடக் கட்சியின் தலைவர் என்ற பெருமையை வரலாறு கூறும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கலப்புத் திருமணங்களை ஆதரித்தாா். விதவைத் திருமணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுாிமை போன்ற சமுக நீதி செயல் பாடுகளை வளர்த்த பெருமையும் இவரையே சாரும்.
தமிழ் நாட்டின் அலுவல் மொழியாக தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஏற்கப்படுவதற்காக அதன் செயலாக்கத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் வரலாற்று உண்மையே. மேலும் ஏழைகளுக்கு இலவசக் கல்வி, திருக்குறள் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு என நல்ல பல திட்டங்களை, சாதனைகளை பட்டியலிடலாம். அண்ணாமலை பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
கொட்டும் மழைபோல, அருவியின் சாரல்போல, அடுக்குமொழிப் பேச்சால் ஆற்றல் மிகுந்த சீா்திருத்தக் கருத்துகளை பேசி மக்களின் மனம் கவர்ந்த அண்ணா என அன்புடன் அழைக்கப்பட்ட சமூக நீதியின் காவலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3.2.1969 ல் காலமானாலும் காலத்தை வென்ற காவியத் தலைவனின் புகழ் நிலைத்திருக்கும்.