
நவீன கட்டிடங்கள், பிரமாண்டமான சாலை அமைப்புக்கள், வித்தியாசமான பாலங்கள் போன்றவைகள் தான், ஒரு நாட்டிற்கு அழகு என்று நினைத்தால் அது தவறு. ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள், புராதான கட்டிடங்கள், சிற்பங்கள் போன்றவைகள் தான்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருவது மரபுரிமை சின்னங்களை பார்வையிடத் தானே தவிர வேறு எதற்கும் இல்லை. இன்றும் இந்திய நாட்டிற்கு அன்னிய செலாவணியை சுற்றுலா பயணிகள் தான் அதிகம் வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தாஜ்மகால், குதுப்மினார் போன்றவைகளையும். தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரம் சிற்பங்களை பார்ப்பதற்கும் தான் அதிகளவில் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தான் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்து அதனை கடைப்பிடித்து வருகிறது.
1972 ம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி நடந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது பற்றிய மாநாட்டில், உலக பாரம்பரிய தினம் பற்றிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக கொண்டாட முடிவு செய்தது.
உலகில் சிறந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியம் கொண்ட மரபுரிமை சின்னங்களை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் பண்பாட்டு சின்னங்களை இந்த அமைப்பு தேர்வு செய்துள்ளது. இதில் 745 கலாச்சார இடங்களாகும் ,183 இயற்கை பாரம்பரியம் கொண்ட இடங்களாகவும் உள்ளன. 29 இடங்கள் இரண்டும் சேர்ந்தவையாகும். உலகில் 36 மரபுரிமை சின்னங்கள் அழியும் நிலையில் உள்ளன.
உலகில் அதிக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தாஜ்மகால், பதேபூர் சிக்ரி, குதுப்மினார் போன்ற 29 இடங்கள் உலகின் மரபுரிமை சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை. இதில் 23 இடங்கள் இயற்கை பாரம்பரிய இடங்களாகவும் உள்ளன. இப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நீலகிரி மலை இரயில், மாமல்லபுரம் சிற்பங்கள், சோழர் கால கோவில்கள் இடம் பெற்றுள்ளன.
பிரிட்டனில் உள்ள இரும்பு பாலம் மற்றும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் போன்ற பாரம்பரிய சின்னங்கள் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
உலகின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புக்கள் முயற்சி செய்து வருகிறது. அதற்காக நிதி உதவிகளையும் செய்து வருகிறது. ஆனால் மற்ற நாடுகளில் உள்ள பாரம்பரிய சின்னங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மோசமாகவே பராமரிக்கப் படுகின்றன.
வரும் தலைமுறையினர் நாட்டின் வரலாற்று பெருமையை அறிந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்காக போதுமான நிதியை ஒதுக்கி நாட்டின் அடையாளமாக திகழும் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாமும் முடிந்தளவுக்கு உதவிட வேண்டும் என்பதே இந்நாளை கடைபிடிப்பதன் நோக்கம்.
சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டு மருத்துவர்கள் அந்நாட்டின் மன அழுத்த நோயாளிகள் மற்றும் நாள் பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டில் உள்ள மரபுரிமை சின்னங்கள் மற்றும் மியூசியங்களை பார்க்க பரிந்துரை செய்கிறார்கள். இதனால் அந் நோயாளிகளுக்கு நல்ல நிவாரணம் கிடைப்பதாக கண்டறிந்துள்ளனர். இதற்காக மருத்துவர்கள் அனுமதி கடிதங்களுடன் செல்லும் நோயாளிகளை இலவசமாக அனுமதிக்கிறார்கள் புராதன சின்னங்கள் கொண்ட அருங்காட்சியக நிர்வாகிகள்.