
சின்ன வெங்காயத்தை சமையலில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிக்கலாம். அதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கே, பி2, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலேட், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்தும் அதிகஅளவில் உள்ளது. வெங்காயத்தை சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் குறையும். இதில் உள்ள வைட்டமின்கள் புற ஊதா கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. நாம் உண்ணும் வெங்காயத்தை, ‘வேர்களின் ரோஜா’ என்கிறார்கள்.
வெங்காயத்தை சாப்பிடுவதால் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தின் நெடி சில தலைவலிகளை குறைக்கும். சின்ன வெங்காயம், ஃபீனால் கண்டன்ட் அதிகம் உள்ள உணவுப்பொருள். இதில் பாலிஃபினால்ஸ்சும் அதிகம் உள்ளது. இவை இரண்டுமே உடலுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது.
சின்ன வெங்காயத்தில் சட்னி அறைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பையும், இரத்தக் குழாயின் உள்ளே உள்ள அடைப்புகளையும் நீக்கும் திறன் கொண்டது. வெங்காயத்தின் பயன் நமக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்றால், அதை எண்ணெயில் அதிகம் வதக்கக் கூடாது. வெங்காயத்தின் முழு பலனும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால், அதன் பச்சைத்தன்மையுடன் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சின்ன வெங்காயத்தில் நிறைய ஆல்கிளாய்ட்ஸ் இருக்கிறது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். எந்தத் தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடிய ஆற்றல் மிக்கது.
அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இந்திய மக்கள் குடல் புற்றுநோய் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு வெங்காயமும், மஞ்சளும் முக்கியக் காரணம் ஆகும். வெங்காயம் சேர்த்து சமைக்கும் பழக்கம் இதற்கு உதவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரையை விட வெங்காயம், இரத்தம் உறைதலை தடுப்பதில் பல மடங்கு சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொண்டால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கலாம். வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. வெங்காயம் அன்டி ஆன்டிஹிஸ்டமைன் போல செயல்பட்டு, பூச்சிக்கடி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு வெங்காயம் ஒரு சிறந்த தீர்வாகும். தலைமுடியில், புழு வெட்டு, கிருமித் தொற்று இருந்தால், சின்ன வெங்காயம் சாறு தடவலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை, அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை அகற்றுதல், கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு சின்ன வெங்காயம் ஒரு அருமருந்தாக இருக்கிறது. அதேபோல, நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கிறது. ஹீமோகுளோபின் அளவு 8 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பெண்களூக்கு அனிமியா இருக்கிறது. இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய அலிசன் என்கிற பொருள், எலும்பு மஜ்ஜையில் இருந்து சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதில் உறுதுனையாக இருக்கிறது.
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று இருப்பவர்களுக்கும், குடலை சுத்தப்படுத்த வேண்டும் என்பவர்களுக்கும், இரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகள் நீங்குவதற்கும் சின்ன வெங்காயம் பயன் அளிக்கும். தைராய்டு பிரச்னைகளுக்கு சின்ன வெங்காயம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. சின்ன வெங்காயம் சாறு எடுத்து கொஞ்சமாக சுக்கு தூள், மஞ்சள் தூள் போட்டு தைராய்டு வீக்கம் இருக்கும் இடத்தின் மீது பத்து போட்டு வந்தால் விரைவில் சரியாகும்.
அண்டர் ஆர்ம்ஸ், தொடை இடுக்கு பகுதிகளில் தோல் அரிப்பு, பூஞ்சை தொற்று இருந்தால், சின்ன வெங்காயம் சாறு எடுத்து அருகம்புல் சாறில் கலந்து அதில் சிறிது அளவு மஞ்சள் தூள் கலந்து அந்த இடங்களில் தடவ வேண்டும். நாளடைவில் சரியாகிவிடும்.
பழங்காலத்தில் இருந்து சின்ன வெங்காயம் முடி உதிர்வுக்கு தீர்வாக இருந்து வருகின்றது. இது தலைக்குள் சென்று வேர் பகுதியை வலுப்படுத்தி முடி உதிர்வை தடுக்கிறது. அதில் இருக்கும் சல்பர் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அத்துடன் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கின்றது. வெங்காய சாறை தேங்காய் எண்ணெய்யில் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து அதன் பின்னர் அதனை தலைக்குத் தடவி மசாஜ் செய்தால் தலை முடி நன்றாக வளரும்.