ஆகஸ்ட் 12: அனைத்துலக இளையோர் நாள்! From Clicks to Progress - இளைஞர்களே, வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

International Youth Day
International Youth Day
Published on

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இளைஞர்கள் புதிய எண்ணிமப் படைப்புகளைக் கண்டறிய வேண்டும்.

அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12 ஆம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள், அனைத்துலக அளவில் இளைஞர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்குடன் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

அனைத்து நாடுகளிலும், இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பயிற்சிப் பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரசு மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம். ஐக்கிய நாடுகள் அவையினால் 1999 இல் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நவீனத் தொழில்நுட்பத்தில் எண்ணிமமயமாக்கல் (Digitalization) நமது உலகத்தையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. அலைபேசிகள், சேவைகள் மற்றும் புதிதாக வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எண்ணிமத் தொழில்நுட்பங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) எட்ட உதவுகின்றன. எண்ணிமத் தொடர்புகளிலிருந்து உருவாக்கப்படும் தரவுகள், ஆதாரம் சார்ந்து முடிவெடுப்பதை ஆதரிக்கின்றன.  பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களில் ஆழமான தாக்கத்துடன், எண்ணிமத் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளான 169 இலக்குகளில் குறைந்தது 70 சதவீதம் எனும் அளவில் பங்களிக்கின்றன. அதே வேளையில், இந்த இலக்குகளை அடைவதற்கான செலவை 55 டிரில்லியன் டாலர்கள் வரை குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது.

எண்ணிமப் பயன்பாடுகளில் இளைஞர்கள் முன்னணியில் உள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 15 முதல் 24 வயதுடையவர்களில் 75% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது மற்ற வயதினரை விட அதிகமாகும். இருப்பினும், ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மற்றும் இளம் பெண்களிடையே, அந்த நாட்டைச் சேர்ந்த ஆண்களுடன் ஒப்பிடும் போது, இணையம் மற்றும் எண்ணிமத் திறன்கள் குறைவாகவே உள்ளன. எண்ணிம உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை இருக்கும் போது, ​​​​ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தவும் தீர்வுகளை உருவாக்கவும் இளைஞர்களேப்  பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுகின்றனர். நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட காலக்கெடு ஆண்டான 2030 ஆம் ஆண்டை நெருங்கி வருவதால், உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இளைஞர்கள் எண்ணிமக் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தி, புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவது அவசியத் தேவையாக இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 12: உலக யானைகள் நாள் - மனிதனின் தலையீடால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் யானைகள்!
International Youth Day

எனவே, 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக இளையோர் நாள் கருத்துருவாக, “சொடுக்குகளிலிருந்து முன்னேற்றம்: நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு இளைஞர்களின் எண்ணிமப் பாதைகள்” (From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development) எனும் கருத்துரு ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதேப் போன்று, உலக இளையோர் நாள் (World Youth Day) என்பது இளைஞர்களுக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் நிகழ்வாகும். இது பெரும்பாலும் கத்தோலிக்கச் சமய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், அனைத்துலக இளைஞர்களும் இன, சமயப் பேதமின்றி பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். உலக இளையோர் நாள் பன்னாட்டு இளையோர் நாளிலிருந்து வேறுபட்டதாகும். உலக இளையோர் நாள் 1984 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முன்னெடுக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவில் இடம் பெறும். அதை விட, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டளவில் ஒரு வார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பெற்று வருகிறது. பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இயற்கைச் சீற்றம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்!
International Youth Day

நம் இந்தியாவில், இந்திய அரசு 1984 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் நாள், தேசிய இளைஞர் நாளாகக் (National Youth Day) கொண்டாட வேண்டுமென்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் முதன் முதலாக தேசிய இளைஞர் நாள் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கொண்டாடப்படுகிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com