ஆகஸ்ட் 20: உலகக் கொசு நாள் - கொசுக்கள் 75 மைல் தொலைவு வரை பயணிக்கக் கூடியவை என்பது தெரியுமா?

World Mosquito Day
World Mosquito Day
Published on

1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாளில் பிரித்தானியாவைச் சேர்ந்த சர் ரொனால்ட் ரோஸ் எனும் அறிவியலாளர், கொசுக்களில் பெண் கொசுக்களே மனிதனைக் கடித்து, இரத்தத்தைக் குடித்து மலேரியாவைப் பரப்புகின்றன என்றும், கியூலக்ஸ் எனும் கொசு ஜப்பானிய மூளைக் காய்ச்சலைப் பரப்புகிறது என்றும் கண்டறிந்து தெரிவித்தார். அன்றைய நாளை, உலகக் கொசு நாளாகக் கொண்டாட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் நாள், உலகக் கொசு நாள்  (World Mosquito Day) என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளை கொசு ஒழிப்புக்கான விழிப்புணர்வு நாளாக உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகின்றனர்.

உலகின் மிகக் கொடியத் தொற்று நோய்களின் பட்டியலில் காசநோய்க்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலிருக்கும் மலேரியா நோய் கொசுக்களாலேயேப் பரப்பப்படுகிறது. கொசுக்களில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான இனங்கள் இருப்பினும், அவற்றுள் ஒரு சில வகைக் கொசுக்களே கடுமையான நோயைப் பரப்பி, உயிரிழப்பு வரையிலான மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. 

ஆனோபெலஸ் எனப்படும் கொசு மனிதர்களுக்கு மலேரியா மற்றும் நிணநீர் வாதக் காய்ச்சல் நோயையும், ஏடிஸ் எனும் கொசு ஜிகா, டெங்கு, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் நிணநீர் வாதக் காய்ச்சல் போன்ற நோய்களையும், கியூலக்ஸ் எனும் கொசு ஜப்பானிய மூளைக்காய்ச்சல், நிணநீர் வாதக் காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோயையும் மனிதர்களுக்குக் கடத்துகின்றன. இவை தவிர, வேறு சில இனக் கொசுக்களும் மனிதர்களிடையேப் பல்வேறு விதமான நோய்களைப் பரப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. 

உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள், கடுமையான நோய் பரப்பும் கொசுக்கள் இருக்கும் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே, உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதம் பேரை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால், உலகம் முழுவதும் கொசுக்கள் என்றாலே பெரும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. 

கொசுக்களில் ஆண் கொசுக்கள் தாவரங்களின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் இரத்தங்களை உறிஞ்சுகின்றன. பெண் கொசுக்களுக்கும் ஆண் கொசுக்களைப் போன்று தாவரங்களின் சாறுகளே போதுமானது. இருப்பினும், அவை ஆண் கொசுக்களுடன் இணைந்த பிறகு, அதற்கான முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதச் சத்துக்களுக்காக மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. 

பொதுவாக, வீடுகள் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் கொசுக்கள் சுமார் ஆயிரம் அடி தொலைவுகளுக்குள்ளாகவே நடமாடும் தன்மையைக் கொண்டதாக இருக்கின்றன. எனவே, அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஒருவகை கொசுக்கள் இருக்கின்றன. அவை, கடற்கரை அருகிலுள்ள நீர்நிலைகளில் வாழ்கின்றன. அவை, முட்டையிடுவதற்குத் தேவையான புரதச் சத்தினைப் பெறுவதற்காக மனிதர்களையும், விலங்குகளையும் தேடி 75 மைல் தொலைவுகள் வரை பயணிக்கக் கூடியவை. 

பொதுவாக, ஆண் கொசுக்கள் ஒரு வாரம் மட்டுமே வாழ்கின்றன. ஆண் கொசுக்கள் முட்டையிலிருந்து வாழ்க்கை சுழற்சியின் மூலம் மூதுயிரியாக வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கின்றன. அதன் பிறகு, ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக் கொண்டு சில நாட்கள் வாழ்ந்து மறைகின்றன. ஆனால், பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதம் வரை உயிருடன் இருக்கின்றன. அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டு விடுகின்றன. அந்த முட்டைகள் 48 மணி நேரத்திற்குள்ளாகப் பொறிக்கப்பட்டு, குடம்பி (லார்வா புழு) ஆகின்றன. பின்னர் அது கூட்டுப்புழுவாக மாறி, அதனைத் தொடர்ந்து மூதுயிரியாக, கொசுவாகத் தோற்றம் பெறுகின்றன.    

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 19: உலக மனித நேய நாள் - அனைத்து சமயங்களும் வலியுறுத்தும் சீர்மிகு குணம் 'மனித நேயம்'!
World Mosquito Day

பெண் கொசுவானது ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகள் வரை இடுகிறது. இந்த வேகத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதால், ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியைத் தொட்டுவிடுகிறது. எனவே, கொசுக்களை முழுமையாக அழிப்பது என்பது இன்று வரை முடியாததாகவேத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

உலகம் முழுவதும் கொசுவின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் முயற்சிகளில் அரசுகளும், பல தன்னார்வ அமைப்புகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கொசுகளின் இனப்பெருக்கம், கொசுக்களின் மூலம் மனிதர்களுக்கு கடத்தப்படும் பல்வேறு கடுமையான நோய்கள், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான பாதிப்புகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவதற்கு எடுத்துக் கொள்ள  வேண்டிய மருத்துவச் சிகிச்சைகள், மக்கள் தங்கள் வாழிடங்களில் சுற்றுப்புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்தல், கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் போன்றவைகளை மக்களுக்கு எடுத்துச் சென்று, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு உலகக் கொசு நாள் முக்கியமான நாளாக இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 19: உலகப் புகைப்பட நாள்! உலகின் முதல் புகைப்படம் எது?
World Mosquito Day

இந்நாளினைப் பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டு செல்வதுடன், அந்நாளில் கொசுவின் இனப்பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பினைப் பெற்றிடவும், அப்பணிகளுக்கு உதவிடவும் வலியுறுத்த வேண்டும். இதன் மூலம், கொசுக்களினால் ஏற்படும் கடுமையான நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com