ஆகஸ்ட் - 24 நாமக்கல் கவிஞர் நினைவு நாள்! 'தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா'...

நாமக்கல் கவிஞர்...
நாமக்கல் கவிஞர்...
Published on

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'

"தமிழன் என்றோர் இனமுன்டு தனியே அதற்கோர் குணமுண்டு'

'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"

-மேற்காணும் மேற்கோள்களை தமிழ்நாட்டில் தற்போதும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.

இந்த மேற்கோள்களெல்லாம் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை சொன்னவைதான். யார் இந்த நாமக்கல் கவிஞர்? .

பழைய சேலம் மாவட்டம் (தற்போதைய நாமக்கல் மாவட்டம்) மோகனூரில், 1888 ஆம் ஆண்டு, அக்டோபர் 19 அன்று வெங்கடராமன் பிள்ளை - அம்மணியம்மாள் ஆகியோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் இராமலிங்கம். இவரது தந்தை மோகனூரில் காவல்துறையில் பணி புரிந்து வந்தார். இவரது தாயார் ஒரு பக்தியுள்ள பெண்மணி ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909 ஆம் ஆண்டில் திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ) பயின்றார். இவர் தொடக்கக் காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி, பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தனது தேசபக்தி மிக்க பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறிக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930ஆம் ஆண்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில், பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும், அகிம்சை பற்றியும் இருந்ததால் இவர் ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

இசை நாவல்கள்-3, கட்டுரைகள்-12, தன்வரலாறு-1, புதினங்கள்-5, இலக்கியத் திறனாய்வுகள்-7, கவிதைத் தொகுப்புகள்-10, நாடகம்-2, உரை-2, மொழிபெயர்ப்பு-4 என்று இவருடைய 34 நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இவரின் மலைக்கள்ளன் நாவல் எம். ஜி. ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கான சில வழிமுறைகள்!
நாமக்கல் கவிஞர்...

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்த இவர் 1972 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் நாளில் 83 வயதில் மறைந்தார்.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு, கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com