
மன்னிப்பு மனித உறவுகள் மேம்பட உதவும் ஒரு அற்புதமான செயல். மன்னிக்கும் உணர்வுடன் வாழ்வதால் பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக முடிக்க அது உதவும். மன்னிக்கும் உணர்வுடன் இருப்பவர்கள், இலக்குகளை முடிக்கவும், சவால்களை சமாளிக்கவும் வலுவாக இருப்பார்கள். மன்னிக்கும் உணர்வுடன் இருப்பவர்கள், பணியிடத்திற்கு மதிப்பை வழங்குவார்கள். சமூக நன்மைக்காக ஆதரவாக இருப்பார்கள்.மன்னிக்கும் உணர்வுடன் இருப்பவர்கள், நேர்மையை கடைப்பிடிப்பார்கள். மனசாட்சி உணர்வுடன் இருப்பார்கள், பச்சாதாபம் நெறிமுறை உணர்வுடன் இருப்பார்கள்.
நாம் மற்றவர்களை மன்னிக்கத் தவறினால் அது ஒரு வித உள் கோபத்தை உருவாக்கி மன, உடல், ஆன்ம நலனைக் கெடுக்கின்றது என்கிறார் டாக்டர் டிக் டிப்பிட் இதனை தன் ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
மன்னிப்பு என்பது குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நீங்கள் ஒருவர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும் போது, உங்கள் மூளையில் ஒரு அழுத்தம் உருவாகிறது, உங்கள் எரிச்சலும் கோபமும் அதிகரிக்க அதிகரிக்க, அந்த அழுத்தம் ரொம்ப வலுவாக மாறும். அதன்பின், கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது, உங்களுக்கு குதிரை கொம்பாக மாறிவிடும்.
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மன்னிப்பு தொடர்பான ஒரு ஆய்வில், மன்னிக்கும் குணம் உள்ளவர்கள் சில நோய்களால் குறைவாகவே பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டது. மறுபுறம், மன்னிக்கும் குணம் இல்லாதவர்கள் அதிக எண்ணிக்கையிலான உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்தனர். மன்னிப்பைத் தவிர்ப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பதட்டம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற உடல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். மன்னிப்பை தவிர்ப்பது எதிர்மறை உணர்ச்சிகளையும், கோபம் மற்றும் விரக்தி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கிறது அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு.
மன்னிப்பவர்களுக்கு அவர்களின் மன்னிக்கும் மனம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,மன அழுத்தத்தை குறைக்கிறது இதுவே அவர்களை நோய்வாய்ப்படாமல் பாதுகாக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உலகின் அனைத்து மதங்களும் மன்னிப்பை பற்றி உயர்வாக குறிப்பிடுகின்றன."ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமென்றால், அவனிடம் மன்னிக்கும் தன்மை இருக்க வேண்டும்"என்கிறது பகவத்கீதை."மன்னிக்க மறுப்பவர்கள், சொர்க்கம் செல்ல முடியாது"என்கிறது பைபிள். கடவுளை "அல் கபிர்", என்கிறது இஸ்லாம். இதற்கு"முழுமையாக மன்னிப்பவர்"என்று அர்த்தம்.
மன்னிக்கும் மனம் பயிற்சிகளினால் வருவதில்லை.அது அவரவர் மனதில் இயல்பாக வர வேண்டும்.உதாரணமாக குடும்பத்தில் பெற்றோர்களிடம் மன்னிக்கும் உயர்ந்த மனநிலை இருந்தால் அதனை பார்த்து குழந்தைகளும் மன்னிக்கும் பண்பை கற்றுக் கொள்வார்கள்.
மன்னிப்பு கடந்த கால நிகழ்வுகளை மாற்றாது.ஆனால் எதிர் காலத்தில் வாழ்வில் வசந்தம் பூக்க காரணமாக அமையும்.உன்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் தன்மை தானாகவே வரும். மன்னிப்பு கேட்பவர்களுக்கு தாராளமாக மன்னிப்பு வழங்குங்கள்.மன்னிப்பு கேட்க மறந்தவர்களை மறந்து விடுங்கள்.
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே’ என்கிறார் அன்னை தெரசா.
‘மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்’ என்றார் கன்பூசியஸ். ‘
"மன்னிப்பு எப்போதும் எளிதானது அல்ல. சில சமயங்களில், அதை ஏற்படுத்தியவரை மன்னிப்பது நாம் அனுபவித்த காயத்தை விட அதிக வேதனையாக இருக்கும். ஆனாலும், மன்னிப்பு இல்லாமல் அமைதி இல்லை."~ என்கிறார் மரியான் வில்லியம்சன்
மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்,அதை எப்படி கேட்க வேண்டும்?.. .நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க தயங்கக் கூடாது.மன்னிப்பு கேட்பது எளிதாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் போது உங்கள் நிலையை விவரிக்க வேண்டுமே தவிர, உங்கள் நிலையை நியாயப்படுத்த முயலக்கூடாது.
மன்னிப்பு கேட்கும் போது "தயவு செய்து என்னை மன்னியுங்கள்"அல்லது "என்னை மன்னிக்க முடியுமா?" என்று பக்குவமாக பேசுங்கள். ஒரு போதும் அரை மனதுடன் மன்னிப்பு கேட்காதீர்கள்.முழு மனதுடன் கேளுங்கள் காரணம் அரை குறையாக மன்னிப்பு கேட்பது கூட ஒரு விதத்தில் குற்றம் தான். மன்னிப்பு கேட்கும் போது பொதுவாக "ஐ ம் சாரி"என்று எளிதாக பேசத் தொடங்கி பின்னர் உங்கள் நிலையை முழுமையாக விவரியுங்கள் என்கிறார்கள்.