பிஜேபியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் - மோடியின் ஹாட்ரிக் ஹிட்!

நரேந்திர மோடி
Narendra Modi

‘பாஜக 400 இடங்களைப் பிடிக்கும்; பெரும்பான்மைக்காக உதிரிகளை இணைத்து தொங்கு நாடாளுமன்றம் அமையும்’ என்ற தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி 290+ இடங்களுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை பாஜக மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ‘மீண்டும் ஆட்சி அமைந்தால் மத வெறுப்புணர்வு தூண்டப்படும்’ என்றெல்லாம் சொல்லப்பட்டதைத் தாண்டி ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மோடி.

வாக்குகள் எண்ணப்பட்ட சில மணி நேரத்திலேயே  பாஜக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்திருந்து. வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் தொடர்ந்து மூன்று சுற்றுகள் முன்னிலை வகித்து வந்தார். பின்பு நிலைமை மாறி வாக்கு முடிவின் போது சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.

ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதைவிட கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி வாகை சூடி இருக்கிறது பாஜக. பத்தாண்டுகளில் தனித்துவம் மிக்க ஒரு தலைவராக மோடி கட்டமைக்கப்பட்டு இருக்கிறார். அதன் நீட்சியாக மூன்றாம் முறையாக அரியணை ஏறத் தயாராகி விட்டார் மோடி.

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடும் நாற்பதும்: ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 30 தொகுதிகள் திமுகவிற்கும் இதர தொகுதிகளை அதிமுகவும் பாமக, பாஜக தலா ஒன்றிரண்டு வீதம் எனப் பிரித்துக்கொள்வார்கள் என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள். த்ரில்லர் படம் போல விருதுநகரும், தருமபுரியும் பரமபதத்தில் ஏறி ஏறி இறங்கின. ‘மாணிக்கம் தாக்கூரா, கேப்டனின் மகனா’ என ஒருபுறமும், ‘மணியா, சௌமியா அன்புமணியா’ என ஒருபுறமும் ஓடிக்கொண்டிருந்த ஓட்டம் மாலை 5 மணியளவில் நிறைவுக்கு வந்தது.

அனைத்துக் கட்சிகளையும் துடைத்தெறிந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி நாற்பது தொகுதிகளையும் எடுத்துக் கொண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன், நயினார் நாகேந்திரன் என பாஜகவின் நம்பிக்கை முகங்கள் தோல்வியைத் தழுவினர். பாஜக கூட்டணியில் இருந்த ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் தோல்வியைத் தழுவினர். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாடு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. வாக்கு சதவிகிதத்தில் நான்காம் இடத்திற்கு முன்னேறி இருப்பது தமிழக பாஜகவிற்கான ஒற்றை ஆறுதலாக இருக்கிறது.

உ.பி கொடுத்த ஷாக்: பாஜகவின் இதயம் என்றால் அது உத்திரபிரதேசம்தான். தொக்காக என்பது தொகுதிகள். வாரணாசி பிரதமர் வேட்பாளரின் தொகுதி என பல ப்ளஸ்களை கொண்டிருக்கும் உ.பி.க்கு மேலும் அழகு சேர்க்க நினைத்தது பாஜக. அது ராமர் கோவில். வெகு விமர்சையாக ஆடம்பரமாக கொண்டாடப்பட்டு திறக்கப்பட்டது ராமர் கோயில். ஆனால், பாஜகவை ராமர் கைவிட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சமாஜ்வாதியும், காங்கிரஸும் உ.பி.,யின் அடிவயிற்றில் கைவைத்து விட்டனர். உ.பி.,யில் பாஜகவிற்கு மக்கள் அளித்துள்ள இந்தத் தோல்வியின் மூலம் மோடியை விடவும் பெரிதாக கட்டமைக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் பிம்பமும் கேள்விக்குறியாகி உள்ளது.

காங்கிரஸை அதிர வைத்த ஐந்து: ‘இம்முறை மாற்றத்தை நிகழ்த்தியே தீர வேண்டும்’ என்ற நோக்கிலே கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் இயங்கி வந்தது. அதன் அச்சாணியாக ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ யாத்ரா அமைந்தது. தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்காக நாடு முழுதும் பயணித்தார் ராகுல்.

ராகுல் காந்தி
Rahul Gandhi

வழக்கமாக காங்கிரஸிற்கு ஆதரவு இருக்கும் மாநிலங்களைத் தாண்டி டெல்லி, இமாச்சல், ஹரியானா, கர்நாடகம், ஒடிசா இந்த ஐந்தும் திட்டமிட்டபடி கைகொடுத்தால் பிரதமர் நாற்காலி கைக்கெட்டும் தூரம்தான் என காங்கிரஸ் கணக்குப் போட்டு வைத்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி கணக்குகள் கைகொடுக்கவில்லை.

கைகாட்டாத I.N.D.I.A: கடந்த இரண்டு முறையும் சரி, இந்த முறையும் சரி மோடிதான் பிரதமர். அவரை விட்டால் இந்தியாவைக் காப்பாற்ற ஆளே இல்லை என்கிற பிம்பத்தை பாஜக தொடர்ந்து கட்டமைத்துக்கொண்டே இருந்தது. ‘குஜராத்தின் வளர்ச்சி நாயகன் இப்போது நம் தேசத்தின் வளர்ச்சிக்கான நாயகன்’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியோ, கடைசிவரை ஏன், இப்போது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சொல்லவே இல்லை. அதற்கான முயற்சிகளையும் எடுக்காமலே விட்டு விட்டது. பாஜக எதிர்ப்பாளர்களின் வாக்குகளால் மட்டுமே 230 சீட்டுகள் வரை காங்கிரஸ் வந்து சேர்ந்திருக்கிறது. 24 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளரை அறிவித்து விடுவோம் என சொல்லிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறது காங்கிரஸ். காட்சியின் வாயிலாகவே பார்த்துப் பழக்கப்பட்ட வாக்காளர்களுக்கு காங்கிரசின் இந்த புதிய நடைமுறை ஒத்துவரவில்லை.

சரிந்த பங்குச் சந்தை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் இருந்த நம்பர்கள் பெரிய அளவில் தேர்தல் முடிவில் வராததால் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 3,247 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்ஃடி 1,049 புள்ளிகள் சரிந்து 22,214 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளை ஒட்டி பங்குச் சந்தையில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதையும் படியுங்கள்:
அச்சத்தில் ஆந்திராவுக்கு போன் போட்ட மோடி!
நரேந்திர மோடி

ஆட்சி அமைக்க முனையும் பாஜகவும், காங்கிரஸும்: ஆட்சி அமைப்பதற்கான இடங்களை பாஜக கூட்டணி பெற்றிருந்தாலும், பாஜகவின் கடந்த கால உத்திகள் மூலம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவையும், பீகாரின் நிதிஷ்குமாரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்து விடும். ‘இண்டியா கூட்டணி’ கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. ஆனால், நாளையே குடியரசுத் தலைவர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இனி, இவர்கள் வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் எனவும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். முழுமையான முடிவுகள் வந்த பிறகு யார் ஆட்சி அமைத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான அரசாகவும் இருக்க வேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் விருப்பமாக உள்ளது.

- ஜெசிகா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com