

ஒவ்வொரு மதத்திலும் பலவிதமான சடங்குகள் அவரவர் வழிபாட்டு நெறிமுறைகளின்படி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் 2ம் நாள் கிறிஸ்தவர்களால் வழிவழியாக ஆன்மாக்கள் தினம் (All SOULS DAY) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதோடு உலகெங்கிலும் ஆன்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அதாவது, அவர்களது விசுவாசிகள், உறவினா்கள் ஆன்மா கடவுளிடம் சென்றடைய பிராா்த்தனை செய்யும் புனிதமான நாளாகக் கொண்டாடப்படுவதே இதன் சிறப்பாகும். பிரதி நவம்பர் ஒன்றாம் நாள் அனைத்து புனிதர்கள் தினம் கடைபிடிப்பதும் கிறிஸ்தவர்களின் கோட்பாடாகக் கருதப்படுகிறது.
அதற்கு மறுநாள் ஆன்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்படி தினமானது கல்லறைத் திருவிழா எனவும் சொல்லப்படுகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக ஜபிப்பதன் மூலம் அவர்கள் சொா்க்கத்திற்கு செல்வதற்கு கடவுளிடம் உதவி தேடுவதே இந்த கல்லறைத் திருவிழாவின் நோக்கமாகும்.
கிறிஸ்தவர்கள் அவர்களது உறவு மற்றும், விசுவாசம் கொண்டவர்களின் ஆன்மாவுக்காக ஜபிக்கும் வகையில் கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றி மரியாதை செலுத்துகிறாா்கள். அதோடு, பல வகையான பலகாரங்களும் படையலிடப்படுகிறது.
இவர்களது பிராா்த்தனைகள் பலிதமாகும் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது. இந்தப் புனிதமான நாளில் திருப்பலி வாசகங்களும் சொல்லப்படுகின்றன. பரிசுத்தவான்கள் என்றில்லாமல் இறந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் நினைவு கூறும் விதமாகக் கொண்டாடப்படும் கல்லறை தினத்திற்கு,வித்திட்டவரே கடவுள்தான் என்ற உண்மை பைபிளில் கூறப்பட்டுள்ளதாம்.
இயேசு நாதர் மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தது போலவே, இறந்த கிறிஸ்தவர்கள் உயிா்த்தெழுதலில் முழு நம்பிக்கை வைத்துள்ளாா்கள். ‘நான் உயிா்த்தெழுதலிலும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்ற இயேசுவின் வாா்த்தைகளில் நம்பிக்கையோடு கிறிஸ்தவர்கள் இருக்கிறாா்கள் என்பதே நிஜம்!