

உலகில் தனிநபர் சேமிப்பை அதிகமாகக் கொண்ட மக்கள் உள்ள நாடுகளாக ஸ்லோவேனியா, எஸ்டோனியா, அயர்லாந்து, ஹங்கேரி, தென்கொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் வைப்பது பாதுகாப்பானது என்பதை உணரத் தொடங்கினார்கள். கொரோனா ஊரடங்கு சிக்கனம், சேமிப்பின் தேவையை நமக்கு நன்கு புரிய வைத்தது. நாம் நம்மை சேமிப்புக்கும், சிக்கனத்துக்கும் பழக்கிக் கொள்ளும்போது அவை நமக்கு பிற்காலத்தில் பலவிதங்களில் உதவிக்கு வருகின்றன.
சேமிப்பும், சிக்கனமும் ஒரு நாட்டின் மூலதனமாக மாறி அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன. புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஷேக்ஸ்பியரின் கூற்றுப்படி நாம் கடன் வாங்குபவராகவோ, கடன் கொடுப்பவராகவோ ஒருபொழுதும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பதற்கு சேமிப்பும், சிக்கனமும் அவசியமாகின்றன.
நம் வாழ்வில் ஏற்படும் அதிக கடன் சுமையால் அதிக அளவிலான மன அழுத்தம், மனப் பதற்றம், மனச்சோர்வு, கிரெடிட் ஸ்கோரில் சரிவு, உறவுகளில் விரிசல்கள், அவமான உணர்வு, தனிமைப்படுத்தப்படுதல், சொத்துக்களை விற்றல், குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்வில் நிகழ்கின்றன.
சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை நம்முடைய செலவுகளை நமது வருமானத்துக்குள் வைத்துக்கொள்வதுதான். நடுத்தர வயதினருக்கு தன்னுடைய பெற்றோர்கள், தனது மனைவி, தனது குழந்தைகள் என மூன்று தலைமுறையினருக்கும் தனது பணம், நேரம், உடல் சக்தி போன்றவற்றை செலவழிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இதை பக்குவமாகவும் பயனுள்ள வகையிலும் அவர்கள் செலவு செய்ய வேண்டும். இதன் மூலம் பிற்காலத்தில் வாழ்வில் ஏற்படும் தேவையற்ற சிக்கல்களை அவர்களால் தவிர்க்க முடியும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பணத்தினை சேமிப்பதில் ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ்வது நல்லது. குழந்தைகளுக்கு உண்டியலில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தரலாம்.
நமது வருமானத்தில் குறைந்தது 10 விழுக்காட்டையாவது ஒவ்வொரு மாதமும் கட்டாயம் சேமித்து வருவது நல்லது. ஒவ்வொரு மாதமும் குடும்பத்தில் வரவு, செலவுகளை திட்டமிட்டு சிக்கனமாக செலவு செய்யும்போது, அதிக பணத்தை நம்மால் சேமிக்க முடியும். கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என்னும் நான்கிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் நன்கு உணர்ந்து பணத்தினை செலவு செய்ய வேண்டும். கஞ்சத்தனம் தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணத்தை செலவு செய்யாமல் இருப்பது ஆகும். இது நம் அன்றாட வாழ்க்கையைக் கூட நன்கு அனுபவிக்க முடியாமல் போகச் செய்கிறது. சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளுக்கு மட்டும் பயனுள்ள முறையில் பணத்தை செலவு செய்வது ஆகும்.
ஆடம்பரம் என்பது பகட்டான வாழ்விற்காக நம்மை பணம் படைத்தவர்களாக இனங்காட்டிக் கொள்வதாகும். ஊதாரித்தனம் கட்டுக்கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் நம்முடைய சக்திக்கு மீறி பணத்தினை கடன் வாங்கியாவது செலவிடுவது ஆகும். சிக்கனமும், சேமிப்பும் நமது எதிர்கால செலவுகளான குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் திருமணம், வீடு கட்டுதல், ஓய்வுகால பராமரிப்பு, எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவு போன்ற பல தேவைகளுக்காக நம் வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி முன்னேறிச் செல்ல வழிவகுக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் வரவு, செலவுகளை கண்டறிந்து சரியான முறையில் நமது வருமானத்தை செலவிடும்போது, பணம் தேவையில்லாமல் எங்கு அதிகமாக செலவாகின்றது, அதை எப்படித் தடுக்கலாம் என நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதிகமான மகிழ்ச்சி, பேராசை, பதற்றம், கவலை போன்ற உணர்ச்சி சூழல்களில் பணத்தை செலவழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்பின் முதல் படி அன்றாட வரவு-செலவுக் கணக்கினை எழுதுவது ஆகும். இதில் குழந்தைகளும் ஈடுபடும்போது அவர்களால் குடும்பத்தின் உண்மையான பொருளாதார நிலையை புரிந்துகொள்ள முடியும். அவர்களும் தங்களின் செலவுகளில் சரியான முடிவுகளை எடுக்கத் தயாராகி விடுவார்கள்.
நாம் பண சேமிப்பின் முக்கியத்துவத்தை சரியாக உணர்வதன் மூலம் மட்டுமே, பொருளாதார பாதுகாப்பினை வாழ்க்கையில் பெற்று வாழ முடியும். வங்கிகள், கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் போன்றவை அவ்வப்போது பணத்தைச் சேமிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நடத்தலாம். அவர்கள் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு ஊக்கப் பரிசுகளை வழங்கலாம். சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தலாம்.
மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், அத்தொகைக்கான வட்டியை வருமானமாகவும் பெறலாம். தீபாவளிச் சீட்டு போன்ற தனிநபர் மோசடிகளையும் தவிர்க்கலாம். சிக்கனமும் சேமிப்பும் நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொண்டு வந்து நிரப்புகின்றன. எனவே, அவற்றை நமது இரு கண்களாகவே கருதலாம்.