

உலகம் முழுவதுமுள்ள உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியம் (Anglican Communion) எனும் திருச்சபைகளைச் சேர்ந்த கிறித்தவ சமயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 அன்று இறந்தோரை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக இறை வேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு நாளாக, ‘இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்’ (All Souls' Day / The Commemoration of All the Faithful Departed) என்று கடைப்பிடித்து வருகின்றனர். இந்நாளை ‘அனைத்து ஆன்மாக்கள் நாள்’, ‘கல்லறைத் திருநாள்’ என்றும் அழைக்கின்றனர்.
மண்ணிலிருந்து ஆதாமை படைத்த கிறிஸ்து, அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளை படைத்தார். பின் அவர்களைப் பார்த்து, 'மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் மீண்டும் மண்ணுக்கே திரும்புவீர்கள்' என்றார். மேலும், 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றும் மரிக்காமல் இருப்பான்' என்றார். இதனடிப்படையில்தான் கிறிஸ்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்நாளில் கல்லறைகளைப் பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுகின்றன. இதற்கு முந்தைய நாளான நவம்பர் 1 அன்று அனைத்துப் புனிதர்கள் நாள் எனும் பெயரில் கிறித்தவப் புனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இறந்தோரை நினைவு கொண்டு, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறை வேண்டல் செலுத்தும் வழக்கம் ‘தூய்மை பெறும் நிலை’ (Purgatory) பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எனும் நூலில், தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன்பு தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும். இந்தத் தூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபை ‘உத்தரிப்பு ஸ்தலம்’ என்று அழைப்பது பழைய வழக்கமாகும். இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் இறந்தோர்களின் ஆன்மாக்களை நினைவு கொண்டு, அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர்.
இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்கத் திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளைக் கண்டு, அங்கு இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (Plenary Indulgence) உண்டு என்கிற நம்பிக்கை இருக்கிறது.
கத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கொள்ளப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் 2ம் நாள் ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கொள்ளப்படும். கிழக்கு மரபுவழி திருச்சபை இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கொள்கின்றது.
இந்த கல்லறைத் திருநாள் நன்றியின் திருவிழாவாகவும் இருக்கிறது. அதாவது, `நீங்கள் இறந்துவிட்டாலும், உடலளவில் நீங்கள் எங்களோடு இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. உங்களை, உங்கள் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு, ஒருபோதும் நம்மைப் பிரித்து விட முடியாது. நமது உறவு என்றென்றும் தொடரும்' என்கிற செய்தியை இந்தக் கல்லறைத் திருநாள் வெளிப்படுத்துகிறது என்றும் சொல்வதுண்டு.
கல்லறை தோட்டங்களில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர், ஏழை - பணக்காரன், ஆண் - பெண் போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பிலும் சமத்துவம். இவ்விரண்டும் கடவுளின் கையில் இருக்கிறது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில்தான் அனைத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளைக் களைந்து, சமத்துவ உணர்வுடன் வாழ வேண்டுமென்று கல்லறை திருநாள் அனைவருக்கும் வழிகாட்டுகிறது என்றும் சொல்கின்றனர்.
குறிப்பாக, எந்த பாகுபாடுமின்றி இறந்தவர்களை நினைவில் கொண்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதே கல்லறை திருநாள். இயேசு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சி அளித்து பின் வானுலகை அடைந்தார். அவரைப் போலவே, ஒவ்வொரு கிறிஸ்தவரும் உயிர்த்தெழுவதாகக் கருதப்படுகிறது.