
"ஜிங்கிள் பெல்ஸ்! ஜிங்கிள் பெல்ஸ்!' என்ற இசை ஒலித்தாலே, சாண்டாகிளாஸ் தாத்தாவின் வருகையென எல்லோருக்கும், குறிப்பாக, குழந்தைகளுக்கு நன்றாகவே தெரியும். நத்தார் தாத்தாவும் சாண்டாகிளாஸும் ஒருவரே ஆவார்கள்.
வெண்மையான தாடி; பருத்த உடல்; குறும்பான கண்கள்; பனிக்குல்லாய்;சிவப்பு கம்பளி ஆடை; சிகப்பான கன்ன கதுப்புகள்; தோளில் ஒரு மூட்டை இவைகள் தான் சாண்டாகிளாஸின் அடையாளங்களாகும்.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய இரவில், (24/12/) குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருபவராக கற்பனையில் அமைக்கப்பட்ட பாத்திரம்.
சாண்டாகிளாஸ் உருவாக்கம் விபரம்:
துருக்கி நாட்டில் பிஷப்பாக இருந்த செயின்ட் நிகோலஸ் என்கிற புனிதப் பாதிரியார், பல ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தவர். அன்பு, நல்லுறவு, குழந்தைகளின் மீது விருப்பம், தாராள மனப்பான்மை, பெருந்தன்மை போன்றவைகளைக் கொண்டவர்.
ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கும் தன்மை காரணம் புகழ் பெற்றவர். குறிப்பாக, ஏழ்மையில் வாழ்ந்த கிறித்துவ மத விசுவாசி ஒருவரின் மூன்று மகள்கள் வரதட்சணை காரணம் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க, நிறைய பரிசுப்பொருட்களை அளித்து ஆதரவளித்த புனிதர் ஆவார். இவரை வைத்துதான் "சாண்டா" உருவாக்கப்பட்டாரெனக் கூறப்படுகிறது.
தாமஸ் நாஸ்ட் என்பவர் 1931 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு, பச்சையை சிகப்பு நிறமாக மாற்றி உருவமளித்தார். இதனை கோகோ கோலா கம்பெனி விளம்பரப் படத்திற்காக வரைய, அநேக பரிசுப்பொருட்களை குழந்தைகளுக்கு கம்பெனி வழங்கியது.
நாடுகள் தோறும் சாண்டாகிளாஸ்:
இங்கிலாந்து: கலைமான் இழுத்து வரும் ஸ்லெட்ஜ் வண்டியில், பரிசு மூட்டையுடன் சாண்டா வலம் வருவார். குழந்தைகள் இரவு தூங்குகையில், தங்கள் கட்டிலின் கால் பக்கத்தில் ஸ்டாக்கின்ஸைத் தொங்கவிட்டிருக்க, சாண்டா புகை போக்கி வழியாக இறங்கி, அதனுள் பரிசுப்பொருட்களை மெதுவாக போட்டு செல்வார்.
சிரியா: சாண்டா கிளாஸை, பரிசுகள் சுமந்து வரும் ஒரு ஒட்டகமென குழந்தைகள் நம்புகின்றனர்.
ஹாலந்து: சாண்டாவை இழுத்து வரும் ரெயின் டீர் கலைமானுக்கு உணவாக கேரட்டுக்களும், வைக்கோலும் குழந்தைகளால் வைக்கப்படுகின்றன.
ஜப்பான்: சாண்டாகிளாஸ் - இன் பின்னாலும் கண்கள் இருக்குமென கூறப்படும் காரணம், குழந்தைகளை முன்னும், பின்னும் அவரால் காணமுடியுமென நம்புகின்றனர். சாண்டாவிற்கு "ஹோட்டியோ ஷோ" எனப்பெயரிட்டுள்ளனர்.
டென்மார்க்: அன்புடன் பரிசுகளைக் கொண்டுவரும் சாண்டா தாத்தாவிற்கு, பசிக்குமென, ஒரு தட்டில் சாதமும், கிண்ணத்தில் பாலும் அவருக்காக வைக்கப்படுகின்றன.
இந்தியா: ஜிங்கிள் பெல்ஸ் பாடலைப் பாடியவாறோ அல்லது ஒலிக்க விட்டோ சிலர் சாண்டா தாத்தா வேடமணிந்து, வீடுகள் தோறும் சென்று குழந்தைகளுக்கு பரிசுகள் அளிப்பது வழக்கமாக உள்ளது.
மொத்தத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையில், மரம், கேக் போன்றவைகள் முக்கியமானவைகள் போல, சாண்டா தாத்தாவும் விளங்குகிறார்.
ஜிங்கிள் பெல்ஸ்! ஜிங்கிள் பெல்ஸ்!
"சாண்டா பரிசுகளுடன் வருகிறார். சாப்பிட ஏதாவது ரெடியா வையுங்க!"