
பூலோக கற்பகத்தரு என்று பனை மரம் போற்றப் பட்டாலும், தென்னை மரமும் கற்பகதரு மரம்தான். உலகம் முழுக்க பரவலாக விளைவது மட்டுமல்லாமல் பனைபோலவே அனைத்துப் பாகங்களையும் பயன்பாட்டிற்குத் தந்து உலகை ஆச்சரியமூட்டி வருகிறது தென்னை மரம். தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத்தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையின் மகிமை தெரிந்துதான் நம்மவர்கள் கூரை வேய்ந்து குடிசை கட்டி வாழ்ந்தார்கள்.
தினந்தோறும் நம் வீட்டுக்குழம்பிலும், சட்னி வகைகளிலும் இடம் பெறும் தேங்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காய்யை சாப்பிட்டு நீர் அருந்தினால் அன்றைய தினத்திற்கு தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை பெற்றுவிடலாம்.
தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. மேலும்' பி' காம்பிளக்ஸ் வைட்டமின்களான ஃபோலேட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்றவைகளும் உள்ளன. இவைகள் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்திற்கும், உடல் புத்துணர்ச்சி கிடைக்கவும் அவசியமானவையாகும்.
தேங்காய், மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பு உணவு. தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை. முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. 61% நார்ச்சத்து இருப்பதால் தேங்காய் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தேங்காய் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இதன் வழக்கமான நுகர்வு சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். தேங்காயை உட்கொள்வது ஒட்டுமொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதுடன், இதயம் தொடர்பான அபாயத்தைக் குறைக்கும்.
தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பியுள்ளது, இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும்.
பாலுக்கு மாற்றாக செயல்படும்.தேங்காய் பாலின் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் பங்கு வகிக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், இளமை தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். இதன் தாமிரச்சத்து புறஊதா கதிர்கள் பாதுகாப்பு முதல் கொலாஜன் உற்பத்தி வரை முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமம் புதுப்பித்தல் மற்றும் எலாஸ்டின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தேங்காய்த் தண்ணீர்: இளநீர் போன்றே தேங்காய் தண்ணீரும் பல நன்மைகள் கொண்டது. இதில் ஒற்றை சர்க்கரை, எலெக்ரோலைட்கள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகளும், பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், ராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிகள் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளது. இவை ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கும் நொதிகளாகும். தேங்காய் நீரில் உள்ள "சைட் டோகைனைன்" முதுமையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் உடையது.
தேங்காய் எண்ணெய் லாரிக் அமிலம் நிறைந்தது. இது ஏராளமான ஆரோக்கிய தன்மையுள்ள சங்கிலி கொழுப்பு அமிலமாகும். இதுவே பல பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டு, முடியை மென்மையாகவும் முடியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அடுக்கையும் உருவாக்குகிறது, புறஊதா கதிர்கள், வெப்ப கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே இதனை முடி பராமரிப்புக்கான பிரபலமான தேர்வாக ஏற்க வைத்துள்ளது.