

'உலகின் முதல் மொழி தமிழ் 'என்று தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உரக்க கூறிய தமிழறிஞர்... மொழிஞாயிறு, சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் என்று போற்றப்படும் தமிழறிஞர், தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) 1902 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார்.
இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பாளையங்கோட்டையில் படிக்கும் போதே தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவார்.
1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், ரீடராகவும் பணியாற்றினார். அப்போது அவர் ஒரு கவிஞராகத்தான் அறியப்பட்டார்.'பாவாணர்' என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். 1925-ல் 'சிறுவர் பாடல் திரட்டு 'என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. பின்னர் சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
உலகிலுள்ள பல மொழிகள் தமிழ் மொழியில் இருந்தே பிறந்தன என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது பாவாணரின் லட்சியம். லெமூரியா கண்டம் மூழ்காமல் இருந்திருந்தால் இது நிரூபணமாகி இருக்கும் என்பார் அவர். 30 வருடங்களாக தமிழ் மொழியின் தொன்மையை அறிவதிலேயே காலத்தை கழித்தவர். தமிழ் எழுத்துகளின் மூலத்தை கண்டறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.
தமிழின் மீது இருந்த ஆர்வத்தால், ஆங்கிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தார். தன்னுடைய 30-ஆவது வயதில் தமிழ் பற்றிய ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார், தன் கடைசி காலமான 79 வயது வரை தமிழ் ஆய்விலேயே அதிக நேரத்தை செலவிட்டார். தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.
பாவாணருக்கு பல மொழிகள் தெரியும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர். 'தமிழ் விளையாட்டு கழகம்' எனும் அமைப்பை துவங்கினார்.
தமிழ் எழுத்துகளின் மூல ஆதாரங்களை பற்றி ஆராய்ந்த பாவாணர் 35 புத்தகங்களை எழுதி உள்ளார். அதில் அவருடைய முழு உழைப்பு தெரியும். தமிழ் இசை பற்றியும் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கர்நாடக சங்கீத ராகங்களுக்கு இணையான தமிழ் பெயர்களையும், அதற்கான தொடர்பையும் விவரித்து எழுதி இருக்கிறார்.
ஒவ்வொரு இசை கருவி பற்றியும் தெளிவான விளக்க குறிப்புகளை ஒரு நூலில் கூறியுள்ளார். எந்த விதமான நவீன ஆராய்ச்சி கருவிகளும் இல்லாமல், தமிழை பற்றி ஆராய்ந்து பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.1968ம் ஆண்டு தமிழ் மொழியை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யும் "உலக தமிழ் அமைப்பை" உருவாக்கினார். இதனால், ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர். ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.
கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
1981 ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5 வது உலகத் தமிழ் மாநாட்டில் தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அதன் பின்னர் அதே ஆண்டில் தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் ஜனவரி 16ம் தேதி தனது 79ஆம் வயதில் காலமானார்.