
பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிய எத்தனையோ சுவாரசியமான தகவல்களில், ஒரு சிலவற்றை இன்றைய நாளில் (15/07) நினைவு படுத்திக்கொள்ளலாமே!
கல்வி, உணவு, சீருடைக்கு வித்திட்ட சம்பவம் :
காமராஜர், ஒருமுறை கிராமம் ஒன்றிற்கு சுற்றுப்பயணமாக காரில் சென்று கொண்டிருந்த சமயம், வழியில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைப் பார்த்தார். காரை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கி, சிறுவன் அருகே வந்தார்.
சிறுவனை நிறுத்தி, "தம்பி! நீ பள்ளிக்கூடம் போகலியா? இந்த நேரத்தில் ஆடுகளை மேய்க்கிறாயே? என்று கேட்டார்.
"ஐயா! எங்க ஊர்ல பள்ளிக்கூடமே கிடையாது. நான் எப்படி போகமுடியும்? என்றான்.
ஒரு வினாடி யோசித்த காமராஜர், "உங்க ஊர்ல பள்ளிக்கூடம் இருந்தா நீ படிக்கப்போவாயா..?"
"போவேன் ஐயா! ஆனா..சோறு யாரு தருவாங்க?"
"அப்படியா ! சரி! உனக்கு சோறு தந்தா, நீ படிப்பாயா?"
"படிப்பேங்க! என் அப்பாவிடம் வந்து சொல்லுங்க!"
சற்றே யோசித்த காமராஜர், பள்ளிக்கூடம் மற்றும் மதிய உணவு வசதி செய்து கொடுத்தால், கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பினார். சென்னை சென்று அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் திரு நெ.து. சுந்தர வடிவேலு அவர்களிடம் பேசி, மதிய உணவு திட்டத்தை உடனே அமுல்படுத்தக் கூறினார்.
மேலும், அனைத்து ஏழைச் சிறுவர்களும் கண்டிப்பாக பள்ளிக்கூடத்தில் படிக்கவேண்டும் என காமராஜர் உத்தரவிட்டார். இதன் பலனாக மதிய உணவு திட்டமும், ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளி இறுதிவரை கட்டணமில்லாத இலவசக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டன.
தவிர, ஏழை பணக்காரன் பாகுபாட்டினைத் தவிர்க்க, சீருடை வழங்கும் சீரிய திட்டமுறையும் காமராஜரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நகைச்சுவையாளர் காமராஜர்:
செய்தியாளர் ஒருவர் காமராஜரிடம் பேட்டி சம்பந்தமாக பேசுகையில், "ஐயா! உங்களால், எனக்கு என்ன பயன்? என்று கேட்கையில்,
"நீங்கள் இன்று சம்பளம் பெறுவதற்கு நான் காரணமாக இருக்கிறேனே! அது போதாதா?" என சிரித்தவாறே காமராஜர் பதிலளிக்கையில், அனைவரும் சிரித்து விட்டனர்.
பணிவுத்தன்மை கொண்ட காமராஜர்:
முதலமைச்சராக காமராஜர் இருக்கையில், கலெக்டர் செய்த நற்செயல் ஒன்றிற்கு நன்றி தெரிவிக்க, கலெக்டர் வீட்டிற்கே சென்று பணிவுடன் நன்றியைத் தெரிவித்தார். காமராஜர் நினைத்திருந்தால், கலெக்டரை, தனது இருப்பிடத்திற்கு வரச்சொல்லி நன்றி தெரிவித்திருக்கலாம். பணிவு பேணும் தன்மை கொண்டவர் படிக்காத மேதை காமராஜர்.
பொது அறிவு பெற, நூலகத் திறப்பு:
1953 ஆம் ஆண்டு ஒரே ஒரு நூலகம் இருந்ததைக் கண்டார் காமராஜர். ஏழை மாணவர்கள் பொது அறிவு பெற, நூலகங்கள் அதிகம் தேவை என்று எண்ணினார். 1961- இல் சுமார் 454 கிளை நூலகங்களை ஆரம்பித்து வைத்தார் காமராஜர்.
இரண்டு நாள் மட்டுமே :
முதலமைச்சர் பணியில் காமராஜர் இருக்கையில், பெற்ற தாயார் வருவதுண்டு. ஆனால் இரண்டே நாட்களில் அவரைத் திருப்பி ஊருக்கு அநுப்பிவிடுவார் காமராஜர்.
காரணம்?- தாயாரைப் பார்க்க உறவினர்கள் வருவார்கள். முதலமைச்சரின் சலுகையை எதிர்பார்ப்பார்கள். இவைகளைத் தவிர்க்கவே, தாயாரின் இந்த இரண்டு நாட்கள் தங்கல்.
கவியரசர் கண்ணதாசன், காமராஜர் பற்றி பாடிய தாலாட்டு பாடல்:
"தங்கமே !
தண் பொதிகைச் சாரலே!
தண்ணிலவே ! சிங்கமே!
என்றழைத்து
சீராட்டுந் தாய் தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்டங்கள் ஏதுமில்லை!
ஆண்டி கையில் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!"
மக்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்ற கிங் மேக்கர் காமராஜர் நம்மிடையே இன்று இல்லையெனினும், அவரின் நற்செயல்கள் காலத்தால் அழியாதவைகள்.