

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளன்று ‘இந்தியக் குடியரசு நாள்' (India Republic Day) என்று கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. இது நாட்டை ஒரு ஜனநாயகக் குடியரசாக மாற்றியது. புதுதில்லியில் நடைபெறும் பிரமாண்டமான அணிவகுப்பு உட்பட, நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை கௌரவிக்கும் வகையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இது பெருமை மற்றும் தேசபக்திக்கான நாளாக அமைகிறது.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட 1935ஆம் வருடத்திய இந்தியச் சட்டம் மற்றும் 1947 இந்தியச் விடுதலைச் சட்டம் ஆகியவை நீக்கப்பட்டு, இந்தியாவிற்கு உண்மையான முழு விடுதலை கிடைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு நாட்டிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பட்ட பின்புதான் அது இறையாண்மை உள்ள நாடாக பன்னாட்டு அரங்கில் அங்கீகரிக்கப்படும்.
இங்கிலாந்து பாராளுமன்றம் 1935ஆம் ஆண்டில் இயற்றிய இந்தியச் சட்டம் இந்தியாவில் கூட்டாட்சி முறைக்கு வித்திட்டது. அதன்படி அரசின் அதிகாரம் பிரிக்கப்பட்டு மைய அவைக்குத் தனியாகவும், பிராந்திய அவைக்குத் தனியாகவும் இரண்டு அவைகளுக்கும் கூட்டாகவும் அதிகாரங்கள் தனித்தனியே பட்டியலிடப்பட்டது. பிராந்திய அவையைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை பாராளுமன்றம் போன்று செயல்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியப் போர் வீரர்களின் மத்தியில் இங்கிலாந்து அரசுக்கு எதிரான உணர்வு இருந்தது. இதனை நீக்கி, இந்தியரின் ஆதரவைப் பெற கிரிப்ஸ் தூதுக்குழு 1942ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தது. இந்தியப் போர் வீரர்கள், பிரிட்டிஷ் அரசுக்குப் போரில் உதவ வேண்டுமென்றும், அதற்கு ஈடாக போர் முடிந்ததும், இந்தியாவுக்கு, ‘இங்கிலாந்து நாட்டின் ஆட்சிக்குள்ளானப் பகுதி' எனும் நிலை வழங்கப்படும் என்றும் கிரிப்ஸ் கூறினார். ஆனால், அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. இன்னொரு புறம், ஜப்பான் ராணுவம் பர்மாவைப் போரில் கைப்பற்றி இந்தியா நோக்கி முன்னேறி வரத்தொடங்கியது. சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய இந்தியத் தேசிய ராணுவம் ஜப்பானுக்கு ஆதரவுக்கரம் நீட்டிப் பிரிட்டிஷாரை எதிர்க்கத் துணிந்தது.
இந்நிலையில் இந்தியர்களுக்குச் சுதந்திரம் வழங்குவது ஆங்கில அரசுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. 1946ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி இந்தியாவிற்கு விடுதலை வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். அக்குழுவும் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தி இந்தியாவிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் ஏற்படப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணயச் சபைக்கான தேர்தல் ஜூலை 1946ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைபெற்றது.
இந்திய விடுதலைச் சட்டம் -1947, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 1947ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று இயற்றப்பட்டது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு இறையாண்மை நாடுகளை உருவாக்கவும், அந்த நாடுகளுக்கான புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படும் வரை அவ்விரு நாடுகளும் காமன்வெல்த் நாடுகளைப் போன்று இங்கிலாந்து நாட்டின் பராமரிப்பில் இருக்க வேண்டும் என்றானது.
இந்தியா விடுதலையடைந்த பின்பு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, டாக்டர் ராஜேந்திரபிரசாத் தலைமையில் அரசியலமைப்பு நிர்ணயசபை 22 குழுக்களை நியமித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுக்குழுத் தலைவராக டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் அதே நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகிய 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிராந்திய இணைப்புக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் தனது பணியைத் திறம்பட செய்து இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டார்.
இந்திய அரசியலைமப்புச் சட்டம் 395 பிரிவுகள், 22 அத்தியாயங்கள், 8 அட்டவணைகளுடன் உருவாக்கப்பட்டது. இது 282 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், பூரண ஸ்வராஜ் என்பதை நாம் சுதந்திரம் அடையும் முன்பே 1930ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனப்படுத்தியதை நினைவு கூர்ந்து, குடியரசு தினத்தை 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளில் வைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளில், நமது முதல் குடியரசு நாளன்று டெல்லி செங்கோட்டையில் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் சுதந்திரக் கொடியினைப் பறக்கவிட்டார். அதற்குப் பின்பு, இதுவரை இந்தியா 15 குடியரசு தலைவர்களைப் பெற்றிருக்கிறது. இதுபோக, 3 பேர் தற்காலிகக் குடியரசுத் தலைவர்களாகப் பணி செய்திருக்கிறார்கள்.
சுதந்திரக் கொடியினை முடிச்சவிழ்த்து பறக்க விடுவதற்கும், கீழிருந்து மேலேற்றிப் பறக்க விடுவதற்கும் வேறுபாடு உண்டு.
ஆகஸ்ட் 15, விடுதலை நாளன்று தேசியக்கொடி கீழிருந்து மேலேற்றி முடிச்சவிழ்த்துப் பறக்கவிடப்படும்.
குடியரசு நாளன்று தேசியக்கொடி, கொடிக்கம்பத்தின் மேல் வைத்து முடிச்சவிழ்க்கப்பட்டு பறக்க விடப்படும். இதுவே தேசத்தின் இறையாண்மையைக் காட்டுகிறது. இறையாண்மை என்பதற்கு கட்டுப்பாடற்ற முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பு என்று பொருள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை திருத்தப்பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறையின் அதிகாரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டின் கீழ்நிலை நிர்வாகம் முதல் உச்சபட்ச அதிகாரம் பெற்றுள்ள நாடாளுமன்றம் வரை நீதித்துறை அதன் கட்டுப்பாட்டைச் செலுத்த முடியும். இரு மாநிலங்களுக்கிடையிலோ அல்லது ஒரு மாநிலத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சனைகளில் உச்சநீதிமன்றம் நடுநிலையாளராக செயல்படும். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒவ்வாது என்று கண்டால் அதனை ரத்து செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு.
நீதிமன்றத்தின் அதிகாரம் பெரிதா? அல்லது நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெரிதா? என்ற கேள்வி எழுந்த போது, இந்திய அரசியல் அமைப்பே பெரிது என்று உச்சநீதிமன்றம் பதிலுரைத்துள்ளது. இவ்வாறு இந்தியக் குடிமக்களாகிய நாம் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் நாம் இறையாண்மை உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடாக, உலக அரங்கில் அங்கரிக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பெருமையோடு, இந்தியக் குடியரசு நாளைக் கொண்டாடுவோம்!