ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1947, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற இந்தியா, தன்னுடைய ஆட்சி முறையை அறிவித்த நாள் ஜனவரி 26, 1950. இந்தியாவை ஆள்வதற்கு பிரிட்டிஷ் அரசு, 1935ம் வருடம் இந்திய அரசாங்க சட்டம் கொண்டு வந்தது. சுதந்திரம் பெற்ற பின்னால் நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட குழு 29 ஆகஸ்ட், 1947ம் வருடம் அமைக்கப்பட்டது.
ஒரு நாடு, தனது நாட்டையும், அதன் மக்களையும் நிர்வகிக்கத் தேவையான அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எடுத்துரைக்கிறது அரசியலமைப்பு சாசனம். நாட்டை வழிநடத்தும் முக்கியமான மூன்று அங்கங்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய ஒவ்வொன்றின் அதிகாரங்கள், அவை ஒவ்வொன்றின் பொறுப்பை வரையறைப்பதுடன், இந்த முக்கிய அங்கங்களுக்கு இடையேயான உறவையும் ஒழுங்குபடுத்துகிறது அரசியலமைப்பு.
இந்திய அரசியலமைப்பு தயாரித்து முடிவதற்கு சுமார் இரண்டேகால் வருடம் பிடித்தது. 1949ம் வருடம், நவம்பர் மாதம் 26ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு தட்டச்சு செய்யப்படவில்லை. இரு மொழிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் கையினால் எழுதப்பட்டது. இந்த ஆவணத்தில், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் ஜனவரி 24, 1950ம் வருடம் கையெழுத்திட்டார்கள். ஜனவரி 26,1950ம் வருடம் நடைமுறைக்கு வந்தது.
குடியரசில், நாட்டின் தலைவர், அரச பரம்பரை வழியாக பதவிக்கு வரமால், குறிப்பிட்ட கால அளவிற்கு வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தியாவில் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள். ஜனவரி 26, குடியரசு தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் உண்டு. ஜனவரி 26, 1930ம் வருடம், இந்திய மக்களின் தேவை, ‘பூரண ஸ்வராஜ்’ என்று அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனின் தொடர்பை துண்டித்து முழுமையான சுதந்திரத்தை அடைவது இந்தியர்களின் லட்சியம் என்றும் அறைகூவி, இந்த நாளில் நாடெங்கும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கியமான நிகழ்வு நடந்த ஜனவரி 26, குடியரசு நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜனவரி 24ம் தேதி, 1950ம் ஆண்டு, ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய ‘ஜன கன மன’ பாடலை குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத், இந்திய நாட்டின் தேசிய கீதமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் 25 ஜனவரி 1950ம் வருடம் உருவாக்கப்பட்டது. ஜனவரி 24, 25, 26 ஆகியவை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு கருப்பொருள் உண்டு. 2025ம் ஆண்டிற்கான கருபொருள் ‘ஸ்வர்ணிம் பாரத் – விராசாட் அவுர் விகாஸ்.’ இதன் பொருள், ‘தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம்,’ இந்தக் கருப்பொருள் இந்தியாவின் வளமான கலாசார மரபு மற்றும் நாடு பிரகாசமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருப்பதை வலியுறுத்துகிறது.
குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில், கண்ணைக் கவரும் குடியரசு தின அணிவகுப்பு, ஜனாதிபதி இல்லம் தொடங்கி, இந்தியா கேட் வரை நடைபெறுவது வழக்கம். குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க, தேசிய கீதம் இசைக்கப்படும். இந்திய ராணுவத்தின் பீரங்கிப்படை 21 துப்பாக்கி குண்டுகள் சுட்டு வணக்கம் தெரிவிப்பார்கள். முப்படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், என்சிசி வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.
மாநிலங்களிலிருந்து, அந்தந்த மாநிலத்தின் சிறப்பை விளக்கும் அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் இடம் பெறும். இந்தியா தன்னுடைய ராணுவத்தின் சிறப்பையும், பெருமையையும் விளக்கும் ஊர்திகள் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சுதந்திர தினத்தன்று கொடிக் கம்பத்தில் கீழே கட்டப்பட்டுள்ள கொடி, மேலே ஏற்றப்பட்டு பறக்க விடப்படும். ஆனால், குடியரசுத் தினத்தன்று, மூவர்ணக்கொடி கம்பத்தின் உச்சியில் இருக்கும். அதனை விரித்து, பறக்க விடுவார் குடியரசுத் தலைவர்.
குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அயல் நாட்டிலிருந்து முக்கிய பிரமுகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த அழைப்பு, அவருக்கு இந்திய நாடு அளிக்கின்ற பெரிய கௌரவம். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், குடியரசுத் தினத்தை ஒட்டிய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். பிரதம விருந்தினர்க்கான தேர்வு, ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விடும்.
தலைமை விருந்தினராக வருபவரின் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் உள்ள உறவின் நிலை, அரசியல், வர்த்தகம், ராணுவம் , பொருளாதார நலன்கள் ஆகியவற்றில் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை வெளியுறவுத் துறை அலசி ஆராய்ந்து, தலைமை விருந்தினரைத் தேர்வு செய்வர். இந்த வருட தலைமை விருந்தினர், இந்தோனேஷிய நாட்டின் அதிபர் ப்ரபோவோ சுபியன்டோ.