

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு 1952 மற்றும் 1957ம் ஆண்டுகளில் நடத்தப்பெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத், இரண்டு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் என்ற பெருமைக்குரியவர்.
பீகார் மாநிலம், சிவானிலுள்ள ஜெராடேயில் மகாதேவ் சகாய் - கமலேசுவரி தேவி இணையருக்கு, 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாளன்று பிறந்த ராஜேந்திர பிரசாத், கூட்டுக் குடும்பத்தில் இளையவராக இருந்ததால், குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்பட்டார். சிறு வயதில் தனது குடும்பத்தாராலும், நண்பர்களாலும், ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார். ராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதானபோது, ஒரு இஸ்லாமிய மௌலவியிடம் பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்றார். சாப்ரா மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். அதன் பின்னர் டி.கே.கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார். ஜெரோடாவில் வசித்த இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களுடன் ‘கபடி’ விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அவரது கிராமம் மற்றும் குடும்பத்தின் பழைய பழக்க வழக்கங்களின்படி, அவர் 12ம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு ராஜேந்திர பிரசாத், தனது மூத்த சகோதரர் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார். கல்வியில் சிறந்த மாணவராக இருந்த ராஜேந்திர பிரசாத், கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் முதலிடத்தில் வெற்றி பெற்றதால், அவருக்கு மாதம் 30 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. 1902ம் ஆண்டு புகழ் பெற்ற கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
கோபால கிருஷ்ண கோகலே 1905ம் ஆண்டு இந்திய ஊழியர்கள் சங்கத்தைத் தொடங்கி அவரைச் சேரச் சொன்னார். அவரது குடும்பம் மற்றும் கல்வி மீதான கடமை உணர்வு மிகவும் வலுவாக இருந்ததால், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, கோகலேவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இருப்பினும், அதை நிராகரித்திருக்கக் கூடாது என்கிற மனநிலையிலேயே இருந்ததால், கல்வியில் அவரது செயல்திறன் குறையத் தொடங்கியது. 1906ம் ஆண்டு பீஹாரி மாணவர் மாநாட்டை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார், இது இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதன் பின்னர், தன்னுள் ஊடுருவியிருந்த எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தினார். 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், பின்னர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், 1915ம் ஆண்டில், சட்டத்தில் முதுகலைத் தேர்வில் சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றார். அதன் பின்னர், சட்டத்தில் முனைவர் பட்டத்தையும் முடித்தார்.
புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தனது வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார். தரையைத் துடைப்பது, கழிவறையைக் கழுவுவது, பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டக் கிளம்பினார். ஆங்கிலேய கவர்னர் திரட்டியதை விட, மூன்று மடங்கு அதிகமாக, முப்பத்தெட்டு லட்சம் ரூபாயைத் திரட்டினார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்க, 1946ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரசியலமைப்பு அவை நிறுவப்பட்டபோது, அதன் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா விடுதலை பெற்ற பின்பு, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, 1950ம் ஆண்டு, ஜனவரி 26 அன்று, சுதந்திர இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்று பதவியேற்றார். அதன் பிறகு, 1957ம் ஆண்டு மீண்டும் குடியரசுத் தலைவரானார். இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத், 1962ம் ஆண்டு மே 13ம் நாள் வரை பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், பன்னிரண்டு ஆண்டுகள் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்திற்கு, நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
ராஜேந்திர பிரசாத், அவரது துடிப்பான மற்றும் சாதனை படைத்த வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடைபெற்ற பல துன்பங்களையும், விடுதலைக்கு முந்தைய நிலைப்பாடுகளையும், சம்பாரணில் சத்தியாக்கிரகம் (1922), இந்தியா பிரிக்கப்பட்டது (1946), அவரது சுயசரிதையான ஆத்மகாதா (1946), மகாத்மா காந்தி மற்றும் பீகார் சில நினைவுகள் (1949) மற்றும் பாபு கே கட்மோன் மெய்ன் (1954) உள்ளிட்ட பல நூல்களில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களை, ஓய்வுக் காலத்தில் பாட்னாவில் உள்ள சதகத் ஆசிரமத்தில் கழித்தார். 1963ம் ஆண்டு பிப்ரவரி 28ம் நாளன்று காலமானார்.
விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவில் பொதுச் சேவையின் உரைகல்லாக இருக்கின்றன என்றால் அது மிகையில்லை.