புகைப்படங்கள் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது இருந்த இனிமையான நினைவுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை. நம்முடன் இல்லாதவர்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்த புகைப்படங்களின் ஆல்பத்தைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சியே நம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
1837 ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே உருவாக்கிய புகைப்பட செயல்முறையான டாகுரோடைப்பின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த செயல்முறையை பிரெஞ்சு அரசாங்கம் ஆகஸ்ட் 19, 1839 அன்று உலகிற்கு பரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்போதிருந்து, புகைப்படம் எடுத்தல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து, வெளிப்பாடு, தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான சக்திவாய்ந்த ஊடகமாக மாறியது. எனவே, புகைப்பட வரலாற்றில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் முதல்முறையாக ஆகஸ்ட் 19, 1910 அன்று கொண்டாடப்பட்டது.
நம் உருவத்தையோ, நாம் காணும் காட்சிகளையோ ஒளி மூலமாகப் பதிவு செய்து நிழற்படமாக ஆக்கிக்கொள்ளும் பொருட்டு கண்டுபிடிக்கப்பட்டது தான் 'கேமிரா'. 'போட்டோகிராபி' என்ற ஆங்கிலச் சொல், 'போட்டோஸ்', 'கிராபியன்' ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது.
இந்த வார்த்தையை முதல் முறையாக பயன்படுத்தியவர் சர் ஜான் எப்.வி.ஹெர்ஸ்செல் என்ற விஞ்ஞானி. அவர்1839 ம் ஆண்டு இதை பயன்படுத்தினார். போட்டோகிராபி என்பது ஒளி வீச்சால் ஒரு சாதனத்தில் உருவங்களை பதிவு செய்யும் முறையாகும்.
டாகெரே என்பவர் எடுத்த படமே உலகின் முதல் புகைப்படம். இவரது முறையில் ஒரு படத்திற்கு ஒரு பிரதி தான் சாத்தியமாயிற்று. பல பிரதிகள் எடுக்கும் நெகட்டிவ் முறையை வில்லியம் ஹென்றி பாக்ஸ் டால்போட் என்று இங்கிலாந்துக்காரர் 1814 ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
1827 ம் ஆண்டில் முதல் நிழற்படம் பதிவு செய்யப்பட்டது. இதனை ஜோசப் நிக் போர் நிப்ஸ் என்பவர் 8 மணி நேரம் எடுத்துக் கொண்டு பதிவு செய்தார். இதே ஆண்டில் பிரெஞ்சுக்காரர் லூயிஸ் ஜேக்ஸ் மேன்ட் டாகுரி என்பவர் ஆய்வு செய்து அரைமணி நேரத்தில் நிழற்படங்களை எடுத்தார்.
நடைமுறைக்குப் பயன்படுத்தப்பட்ட முதல் போட்டோகிராபி முறையை கண்டுபிடித்த மேன்ட் 1789 ம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி பிரெஞ்சு நாட்டில் பிறந்தவர். இவர் ஒரு பெயிண்டராக தன் தொழிலை தொடங்கியவர். 1820 ம் ஆண்டு ஒளி ஊடுருவும் ஓவியங்களின் மீது பட்ட ஒளியின் விளைவை இவர் ஆராய தொடங்கினார். 1829 ம் ஆண்டு ஜோசப் நிக் போர் நிப்ஸ் உடன் இணைந்து காமிரா கருவிக்கு நிலையான இறுதி வடிவம் கொடுக்க முயன்றார். ஆனால் 1833 ம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக ஜோசப் நிப்ஸ் நோய் வாய்ப்பட்டு காலமானார்.
லூயிஸ் ஜேக்ஸ் மேன்ட் டாகுரி பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்து வசதியாக வேலை செய்யும் படியான போட்டோகிராபி முறையை கண்டுபிடித்தார். அதற்கு 'டாகுரி டைப்' என்ற பெயரையும் வழங்கினார். 1839 ம் ஆண்டில் லூயிஸ் ஜேக்ஸ் மேன்ட் டாகுரி மற்றும் ஜோசப் நிக் போர் நிப்ஸின் மகனும் டாகுரியோடைப்புக்கான உரிமைகளை பிரெஞ்சு அரசுக்கு விற்றனர்.
அந்தக் கண்டுபிடிப்பு முறை பற்றிய விளக்கங்கள் பத்திரிகைகளில் 1838 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி வெளிவந்தன.
அதன்பின்னர் டாகுரியோடைப் முறை தான் போட்டோகிராபி கலையின் மூல ஆதாரமாக விளங்கியது. இந்த முறை விரைவில் உலகெங்கும் பிரபலமானது.1850ம் ஆண்டிற்குள் நியூயார்க் நகரில் டாகுரியோடைப் ஸ்டியோக்கள் பெருகிவிட்டது.
இந்திய சர்வதேச புகைப்படக் கவுன்சில் 1991 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று புகைப்பட தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இந்தியாவில் 1840-ல் புகைப்படம் எடுத்ததற்கான தடயங்கள் உள்ளன. முதல் டாகுரியோடைப் போட்டோ ஸ்டுடியோ கொல்கத்தாவில் நிறுவப்பட்டது.
ஆரம்பத்தில் இது பிரிட்டிஷ் அரசர் மற்றும் ஜமீன்தார்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 1877 முதல் அனைவருக்கும் கிடைத்தது. முதல் வண்ண புகைப்படம் 1861-ல் எடுக்கப்பட்டது.
பல பல்கலைக்கழகங்கள் புகைப்படம் எடுப்பது பற்றிய பாடத்திட்டங்களை தற்போது நடத்துகின்றன. ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க பிடிக்கும். தற்போது பெண்களும் இத்துறையில் ஆர்வம் காட்டி சாதித்து வருகின்றனர்.