வளர்ந்தும் தேய்ந்தும் போகும் சோமக் கொடியும் மயக்கம் தரும் சோம பானமும்!

Soma Panam
Soma Panam
Published on

இந்து சமயப் புராணங்களில் இடம் பெற்றிருக்கும் சோம பானம் பற்றித் தெரியுமா?

இந்து சமயப் புராணங்களில் உடலுக்கு வலிமை தரும் பானமாகப் பல்வேறு இடங்களில் ‘சோம பானம்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சோம பானம் இந்திரன், அக்கினி, வருணன் போன்ற தெய்வங்களுக்குப் பிடித்த பானம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வாங்க, சோம பானத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.  

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும். வேதகால மக்களிடையே வழக்கத்திலிருந்த மயக்கம் தரும் பானங்களில் சோம பானம் மதிப்பு மிக்கதாக இருந்தது. இந்தப் பானம் சந்திரக் கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் தயாரிக்கப்படுவதால், சோம பானம் என்கிற பெயர் ஏற்பட்டது என்பர். இந்த பானத்தினைத் தயாரிக்க சோம தாவரம் எனும் தாவரம் பயன்படுத்தப்பட்டதால், இதற்கு சோம பானம் என்று பெயர் வந்தது என்றும் சொல்வர். 

இந்தச் சோம பானத்தினைத் தயாரிக்கின்ற முறைகள் பற்றி சாம வேதத்தில் சில குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. ரிக்வேதம் 9 ஆம் அத்தியாயம் முழுமையும், மற்ற அத்தியாயங்களில் நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உயர்ந்த மலைகளில் வளரும் சோமக் கொடிகளை பறித்து வந்து, மரப்பாத்திரத்தில் வைத்து மரக்கட்டைகளால் இடித்துத் தூளாக்கப்பட்டு, நிழலில் உலர்த்தி, நீரில் கரைத்து கம்பளித் துணியில் வடிகட்டி, தேன், பால் அல்லது தயிருடன் கலந்து மரப்பாத்திரங்களிலும், உலேகப் பாத்திரங்களிலும், கலசங்களிலும் பாதுகாத்து வைக்க வேண்டும். இது மிகச் சுவையாகவும், மயக்கம் தருவதாகவும் அமைந்த ஒரு வகை பானமாகும். ”சோம பானம் அருந்தி நாங்கள் அமரர் ஆனோம்” என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடி சந்திரனுடன் (சோமன்) இணைத்து சொல்லப்படுகிறது. சோமக்கொடிகள் சந்திரனைப் போலவே வளர்பிறைக் காலத்தில் சிறிது சிறிதாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகின்றன. தேய்பிறைக் காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக செடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறியதாகி விடுகிறது. வேறு எந்தத் தாவரமும் சோமக் கொடிகள் போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இணையத்தின் 55 ஆண்டுகாலம்! 
Soma Panam

சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும். இந்திரன், அக்னி, வருணன் போன்ற தேவர்களைச் சோமபானத்தை பருக வேண்டினர். சோமபானத்தைத் தேவர்களுக்குப் படைத்த பின்புதான் தாம் பருகுவர். தேவர்களை மகிழ்விக்க சோமபானம் வலிமையான ஒன்றாகக் கருதப்பட்டது.

சோமயாகத்தின் போது சோம பானத்தை பருகச் சில சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசவைப் பிரதிநிதிகளும் சோமபானம் அருந்துவர். போரின் போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்திப் போர் செய்வார்கள். 

சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனையை மறக்கச் செய்து, உடலுக்குப் புத்துணர்ச்சி உண்டாக்கும் தன்மை இதில் உண்டு. முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள் மற்றும் வீரர்கள் போரின் போதும், உடல் தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட இதனப் பயன்படுத்தினர். இப்பானம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com