உலக மொழிகளிலேயே நீதி நூல்களில் தலையாய நூல் திருக்குறள். அந்நாளில் மதுரையை ஆண்ட மன்னர்கள், ‘தமிழ்ச் சங்கம்’ அமைத்து தமிழ் வளர்த்தார்கள். அப்போது மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறளை தமிழ்ச் சங்க புலவர்கள் முன்னிலையில் பாடி அறிமுகம் செய்தார் திருவள்ளுவர். அப்போது மதுரையை மன்னர் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்டு வந்தார்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழ்ச் சங்க புலவர்கள் அங்கீகரிக்கவில்லை. அதை எதிர்த்து திருவள்ளுவர் தன்னுடைய நூலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் சங்கப் பலகையில் வைத்து குளத்தில் மிதக்க விட்டார். மற்ற நூல்கள் குளத்தில் மூழ்கிவிட, திருக்குறள் மட்டும் குளத்தில் மூழ்காமல் மேலே எழும்பி வந்தது. இதனால் சங்க நூல்களில் ஒன்றாக திருக்குறளை அங்கீகரித்தனர் சங்கப்புலவர்கள். இதற்கு ஔவையார் உதவி புரிந்ததாக வரலாறு.
இதனை நினைவு கூறும் வகையில் 1330 திருக்குறளையும் சலவைக்கல்லில் செதுக்கி மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் தென்பகுதியில் சுவரில் பதித்துள்ளனர். திருவள்ளுவர் அருளிய திருக்குறளானது. மதுரை சொக்கநாதர் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதும், இக்கோயிலின் தமிழ் புலவர்களில் முதன்மையானவராக சிவபெருமானே உள்ளார் என்பதும் ஐதீகம்.
தமிழ் புலவர்களுக்கென்று தனிச் சன்னிதியே இக்கோயிலில் உள்ளது. அதில் சிவபெருமானோடு அனைத்து தமிழ்ப் புலவர்களும் உள்ளனர். அதோடு திருவள்ளுவரும் உள்ளார். இவர்களுக்கு இவ்வாலய சிவாச்சாரியார்கள் நித்ய பூஜைகள் செய்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கலெக்டராக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் ஆரிங்டன். இவர் சென்னையின் அப்போதைய கலெக்டராக இருந்த W.H.எல்லீஸ் அவர்களின் நண்பர். அப்போது பழைய ஓலைச் சுவடிகளை தீயிட்டு எரித்தும், ஆற்றில் விட்டும் வந்த காலம்.
அப்படி தீயில் கருகி இரையாகவிருந்த பல ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்த ஆரிங்டன் வீட்டு சமையல்காரர் கந்தப்பன் என்பவர் அதை ஆரிங்டன் வசம் ஒப்படைத்தார். அவற்றை அவ்வேளையில் பழைய ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து அதை அச்சுப் பதிக்கும் பணியில் ஆர்வமாக இருந்த தனது நண்பர் எல்லீஸ் வசம் ஒப்படைத்தார். அதில் ஒன்றை கி.பி. 1812ம் ஆண்டு அச்சுப் பதித்து நூலாக வெளியிட்டார் எல்லீஸ். அதுதான் திருக்குறள்.
திருக்குறள் நூலாக வெளியிடப்பட்டது மட்டுமன்றி, அப்போது சென்னை நகரில் 27 கிணறுகள் தோண்டி அதில் திருக்குறளை கல்வெட்டுகளாக பதித்து பெருமை செய்தார் எல்லீஸ். அதோடு, ‘எல்லீஸ் கமென்ட்ரி’ என்ற பெயரில் திருக்குறளுக்கு ஆங்கில மொழியில் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளில் 1330 குறள்கள்,14,000 சொற்கள், 42,194 எழுத்துக்கள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் மாநாட்டை முதல் முறையாக 1942ம் ஆண்டு நடத்தியவர் தந்தை பெரியார். தமிழ் தலைவராக தபால் தலையில் முதல் முறையாக இடம்பெற்றவர் திருவள்ளுவர்தான். இவரின் உருவப்படம் 15.01.1960ம் ஆண்டு இந்திய தபால் தலையில் இடம்பெற்றது.
மக்கள் மத்தியில் திருக்குறள் நெறி வளர்த்தல், திருக்குறளைப் பரப்புதல், மாணவர்களுக்கு திருக்குறளைக் கற்பித்தல், சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற மாணவர்களைப் பயிற்றுவித்தல், குறள் நெறித் தலைப்புகளில் பல்வகைப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஓர் அமைப்பு மதுரையில்தான் உருவாக்கப்பட்டது. அதுதான், ‘மதுரை திருவள்ளுவர் கழகம்.’