
இந்த முறை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக டிராகன் டு ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை தயாரிப்புகள் மக்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டியுள்ளன.
474 கோடி ரூபாய் காப்பீடு:
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 474 கோடி ரூபாய் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது.
வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி பண்டிகைக்காக 474 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்திருப்பது அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. விநாயகர் சிலைக்கு பூஜை செய்யும் பூஜாரிகள், சமையல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் போன்றவர்கள் இந்த காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதே இந்த பெரிய தொகைக்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
விநாயகர் சிலைகளை அலங்கரிக்கும் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் விலை உயர்வும், அதிக தன்னார்வல ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட விபத்து காப்பீடு போன்ற பேரிடர்களை உள்ளடக்கியது இந்த தொகை. ஆபரணங்களுக்கான காப்பீடு மட்டுமே இந்த ஆண்டு 67 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் தயாரிப்பு:
கண்களை கவரும் வண்ணங்களில் பலவிதமான தோற்றங்களில் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ஜீப் ஓட்டும் விநாயகர், ரயில் ஓட்டும் விநாயகர், விவசாய கணபதி போன்ற பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விநாயகர், டிராகன் விநாயகர் போன்ற புதுமையான வடிவங்களும், சித்தி விநாயகர், பால விநாயகர் போன்ற பாரம்பரியமான வடிவங்களும் வழக்கமான சிலைகளுக்கு போட்டியாக வந்துள்ளன.
பிரபலமான பந்தல்கள்:
விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் அதன் பிரம்மாண்டம் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிகமாக காணப்படுகிறது. மும்பையின் லால்பாகுசா ராஜா, புனேவின் தக்துஷேத் ஹல்வாய் கணபதி மற்றும் ஹைதராபாத்தின் கைரதாபாத் கணேஷ் போன்ற பந்தல்கள் நாடு முழுவதும் மிகவும் பிரபலமானவை.
விநாயகர் நம் வீட்டுக்கு எப்பொழுது வருவார்?
விநாயகப் பெருமானின் பிறந்த நாள் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. நாளை ஆகஸ்ட் 27 அன்று பஞ்சாங்கத்தின்படி பூஜைக்கான நேரம் காலை 11.05 முதல் பிற்பகல் 1:40 மணி வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் விநாயகரை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
விசர்ஜனம் செய்வதற்கு பாரம்பரிய படி இரண்டு, மூன்று, ஐந்து, ஏழு அல்லது பத்து நாட்களுக்கு பிறகு கடலிலோ, ஆறு, குளத்திலோ அல்லது வீட்டு கிணற்றிலோ கரைக்கலாம்.
விநாயகரை கரைப்பதற்கு முன்பு தினமும் அருகம்புல் சாற்றி, காலையிலும் மாலையிலும் நைவேத்தியம் மற்றும் ஆரத்தி எடுப்பது அவசியம்.