நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இதனை அடைய மருத்துவப் பயன்களைத் தரும் தாவரங்களே மருத்துவத்தில் நோய் தீர்க்கும் மருத்துவ செல்வங்கள். இத்தகைய 5 வகை தாவரங்களின் மருத்துவப் பண்புகளையும் பலன்களையும் இந்தப் பதிவில் காண்போம்.
1. கீழ்வாய்நெல்லி: இந்த முழுத்தாவரமும் மருந்தாகப் பயன்படும் சிறுசெடி ஆகும். இதன் கனிகள் இலையின் கீழே காணப்படும். கீழாநெல்லி லேகியம் சொறி, சிரங்கு, படை, கட்டி, குணமாக பயன்படுகிறது. இந்த செடியை வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். அதை இடித்துத் தூளாக்கி நீர் விட்டுச் சர்க்கரை போட்டு பாகாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சிறிது நெய் விட்டு லேகியமாகப் பயன்படுத்தலாம். இலையின் சாற்றிலுள்ள வேதிப்பொருள் மஞ்சள்காமாலை உண்டாக்கும் ‘ஹெபடைடிஸ் - பி' வைரஸை கொல்லும்.
2. மணத்தக்காளி: இதன் வேறு பெயர்கள் மணல்தக்காளி, மிளகுத்தக்காளி, உலகமாதா ஆகும். இது ஓராண்டு தாவரம் ஆகும். இருதயம், மூச்சுப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு, குடல் சம்பந்தமான நோய்கள் யாவற்றையும் விலக்கும். நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. மணத்தக்காளி இலையை அவித்து நீரைக் குடிக்கலாம். அவித்த கீரையை வெங்காயம், மிளகாய், தேங்காய் சேர்த்துத் தாளித்து சாப்பிட்டு வரக் குடல் புண் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை வாணலியில் போட்டு சிறிது வெந்தயம், வெங்காயம், ஏல அரிசி ஆகியவற்றை வறுத்து நீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். அந்நீரை மூன்று வேளை, மூன்று நாட்கள் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் பறந்து விடும். வாய்புண் குணமாக மணத்தக்காளியின் ரசம் பயன்படுகிறது.
3. தூதுவளை: இது நெருக்கமான வளைவுள்ள முட்களையுடைய கொடி. இதில் புரதம், தாது உப்பு, கரிநீர், சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. எந்த சூழ்நிலையிலும் வளரும் பண்பினைப் பெற்றது இது. கபம், ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான நோய் ஆகிய எல்லா நோய்களுக்கும் தூதுவளை மருந்தாகப் பயன்படுகிறது. தூதுவளைச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்புடைய நோய்கள் நீங்கும்.
4. நெல்லிக்காய்: நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையை குளிரச் செய்யும். கருமையான தலை முடியை வளரச் செய்யும். இது இதயத்துக்கு வலிமையை வழங்கி வாழ்நாளை நீட்டிக்கும் காயகல்பம் ஆகும். குறைந்த செலவில் உயர்ந்த பலனைத் தரும். தமிழ் இலக்கியங்களில் நெல்லிக்காய்க்கு நல்லிடம் கிடைத்திருக்கிறது.
குடற்புண், இரத்தப்போக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றை குணமாக்கும். இதில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தாதுப்பொருள், இரும்பு வைட்டமின் ‘சி' சத்து அதிகம் உள்ளது. நெல்லிக்காய் கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவிலும், களிம்பு வடிவிலும் நோய்களை நீக்கும் பண்புடையது.
5. குப்பைமேனி: இதற்கு பூனை வணங்கி, தெருவின் அழகி என்ற பெயர்களும் உண்டு. புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த இலையுடன் சிறிது உப்பு, மஞ்சள் துண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சொறி, சிரங்கின் மேல் பூசி அரை மணி நேரம் ஊற விட்டு கழுவலாம். எந்த வகை புண்ணாக இருந்தாலும் குப்பைமேனி இலையை அரைத்து வைத்துக் கட்டினால் ஆறும். இலையை வதக்கி பிழிந்து 2 துளி சாறெடுத்து காதில் ஊற்றினால் காது வலி நீங்கும்.
இச்செடிகளை வீடுகளில் வளர்த்து பயனைப் பெற்று ஆரோக்கியமான உடலைப் பெறுவோம்.