லால் பகதூர் சாஸ்திரி தனது எளிமை, தலைமைப் பண்பு மற்றும் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற புகழ் பெற்ற முழக்கத்திற்காக பலராலும் அறியப்பட்டவர். பல அரிய குணங்கள் கொண்ட சாஸ்திரி, இந்தியாவின் இரண்டாவது பிரதமர் ஆவார்.
சுதந்திரப் போராட்ட வீரர்: காசி வித்யா பீடத்தில் தனது படிப்பை முடித்த பிறகு லாலா லஜபதிராய் நிறுவிய, ‘சர்வன்ட்ஸ் ஆப் பீப்பிள் சொசைட்டி’யில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பான சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மகாத்மா காந்தியின் சிறந்த சீடர். சுதந்திரப் போராட்டத்தின்போது பல முறை ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேர்மை: சாஸ்திரி நேர்மையும் உண்மையும் நிறைந்தவர். 1956ம் ஆண்டில், ரயில்வே அமைச்சராகப் பணியாற்றியபோது தமிழ்நாட்டின் அரியலூரில் ஒரு மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. அதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர் நேரடியாக தவறு ஏதும் செய்யாதபோதும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றைய பிரதமர் நேரு, சாஸ்திரியின் நேர்மையைப் பாராட்டினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது அரசியலமைப்பு உரிமைக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறினார்.
தனிப்பட்ட தியாகம்: 1965ல் இந்தியா, பாகிஸ்தான் போரின்போது இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. நாட்டில் உள்ள பலர் உணவின்றி வாடுவதை அறிந்து, பல நாட்கள், சாஸ்திரி இரவு உணவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தியாகம் செய்தார். உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது முதன் முதலில் பெண் நடத்துநர்களை நியமித்த முதல் நபர் சாஸ்திரி. ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக மத்திய புலனாய்வு பிரிவை நியமித்தார்.
அதிகார துஷ்பிரயோகமின்மை: உயர் பதவியில் இருந்தபோதும் தனது பதவியை தனிப்பட்ட நலனுக்காக ஒருபோதும் பயன்படுத்தாதவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர். அவர் நாட்டின் பிரதமராக இருந்தபோது அவரது மகன் அனில் டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் அட்மிஷன் கட்டணம் கட்ட நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார். வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவர் பிரதமரின் மகன் என்று தெரிந்த ஆசிரியர்கள் அதிர்ந்து போனார்கள்.
பசுமைப் புரட்சி: சாஸ்திரியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று 1960களின் மத்தியில் தொடங்கப்பட்ட பசுமைப் புரட்சிக்கு அவர் அளித்த ஆதரவாகும். அதிக மகசூல் தரும் வகை விதைகள், மேம்பட்ட நீர்ப்பாசன நுட்பங்கள் மற்றும் நவீன விவசாய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் உணவு தானிய உற்பத்தியில் கணிசமான அதிகரிப்புக்கு வழி வகுத்தன. குறிப்பாக, கோதுமை மற்றும் அரிசியில் இந்தியாவை உணவு பற்றாக்குறை தேசத்திலிருந்து தன்னிறைவை நோக்கி நகரும் நாடாக மாற்றியது.
சாஸ்திரியின் புகழ் பெற்ற முழக்கம் ‘ஜெய் ஜவான், ஜெய் கிஷான்; சிப்பாய் வாழ்க, விவசாயி வாழ்க.’ ஒரு தேசத்திற்கு இராணுவம் மற்றும் விவசாயம் இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற பார்வையை கொண்டிருந்தார். நவீன விவசாய உத்திகளுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் வெளிநாட்டு உணவு இறக்குமதியை இந்தியா சார்ந்து இருப்பதைக் குறைத்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தது.
இதனால் இந்தியா படிப்படியாக உணவு உபரி நாடாக அடுத்தடுத்த வருடங்களில் மாறியது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்தது. தன்னலம் கருதாத சாஸ்திரி போன்ற தலைவர்களை கொண்ட நாடு இந்தியா என்பதில் மிகுந்த பெருமிதம் கொள்வோம். ‘பாரத் ரத்னா’ விருது பெற்ற சாஸ்திரிக்கு, இந்தியாவில் பல சாலைகள், நினைவுச் சின்னங்கள் பொது சதுக்கங்கள் மற்றும் அரங்கங்கள் அவரது பெயரால் நிறுவப்பட்டுள்ளன.