அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது உடல் நலத்திற்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால், பாலுக்கு பதிலாக லெமன் டீக்கு மாறுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. லெமன் டீ உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. அந்த வகையில் லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்: குளிர்காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சளி, இருமல், தொண்டைப் புண், காய்ச்சல் ஆகிய தொற்று நோய்களுக்கு லெமன் டீயுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில், எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
2. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: எலுமிச்சையில் இருக்கும் தாவரப் ஃபிளாவனாய்டுகள், உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுவதால், தினமும் காலை ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
3. உடலில் நச்சுக்களை நீக்கும்: எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு உதவுவதால் தினமும் காலை ஒரு கப் லெமன் டீ குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வழி வகுக்கிறது.
4. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்: லெமன் டீ உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுத்து, இன்சுலினைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதுதவிர, பசியையும் கட்டுப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்க உதவுவதால் லெமன் டீ குடிப்பது மிகவும் நல்லது.
5. சருமத்திற்கு நன்மை பயக்கும்: லெமன் டீயில் இருக்கும் அஸ்ட்ரிஜிங் பண்புகள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்ய உதவுவதோடு, இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் அரிப்பு, முகப்பரு, அலர்ஜி, சரும அலர்ஜி போன்ற பிரச்னைகளை திறம்பட சமாளிக்க உதவுகிறது. மொத்தத்தில் லெமன் டீ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
6. எடையை குறைக்க உதவும்: அதிகரித்திருக்கும் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் காலையில் லெமன் டீ குடிப்பது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் இதில் இருக்கும் பல பண்புகள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, எடையையும் குறைக்க உதவுகின்றது.
லெமன் டீயை தினமும் பருகுவது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுவதால் இப்பழக்கத்தை தொடர்ந்து வைத்துக்கொள்வது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.