

மக்கள் சுயக் கட்டுப்பாடுகளுடன் அரசின் வழிகாட்டுதல்களின்படி பிரச்னைகள் இல்லாமல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல், யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை கொடுக்காமல் இருப்பதே நல்லது. அப்படிப் பல்வேறு விஷயங்களில் பொது மக்களுக்கு சட்ட ரீதியான பிரச்னைகள் வரும் நிலையில் அவற்றுக்கு உண்டான தீா்வுகளை எட்டுவதற்கும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
‘சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’ என பேரறிஞர் அண்ணாதுரை சொல்லியுள்ளாா். அந்த சட்டமானது, சமுதாயத்தில் ஏழைகள், பின்தங்கிய மக்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என அனைத்துத் தட்டு மக்களுக்கும் சட்ட சம்பந்தமான தீா்வுகள் கிடைப்பதற்கும் ஏதுவாக சட்டங்கள் இயற்றப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ம் தேதி தேசிய சட்ட சேவைகள் (Legal Service Day) தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் சட்ட சேவைகள் உாிமைச் சட்டம் 1987ல் (Legal Services Authorities Act) நிறைவேற்றப்பட்டாலும் அந்த சட்டமானது, 1995ம் வருடம் நவம்பர் 9ம் நாளில்தான் அமலுக்கு வந்தது. அதைக் குறிக்கும் வகையிலேயே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நாட்டில் அனைத்துக் குடிமக்களுக்கும் சட்ட உதவி அரசின் மூலம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதை அரசியல் சட்டம் 39 வழிவகை செய்கிறது. ஆக, பொதுமக்களுக்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு இலவச சட்ட ஆலோசனை மையங்கள் உதவி புாிகின்றன.
நீண்ட நாட்களாக தீராத பிரச்னை, நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் பிரச்னை, பணப் பரிவர்த்தனைகளில் இரு தரப்புகளுக்கும் இடையே தகராறு போன்றவற்றை லோக் அதாலத் முறை மூலமாகவும் தீா்த்துக்கொள்ள வழிவகை செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது.
அதுபோன்ற முகாம்களில் அது தொடர்பான அலுவலகங்களில் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெற்று பிரச்னைகளுக்கு தீா்வு மேற்கொள்ளலாம். ஆக, நாம் தொடா்புகொள்ள வேண்டிய வகையில் பேசி நமது பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளலாம். அதற்கான சட்ட வழிமுறைகள் நிறையவே உதவி செய்யக் காத்திருக்கின்றன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்!