

இயற்கை அறிவியலின் அடிப்படை துறையான இயற்பியல் துறைக்கு முதல் முறையாக நோபல் பரிசை வழங்க முடிவு செய்யப்பட்டபோது, அதை யாருக்கு வழங்கலாம் என்று ஆலோசித்தபோது நோபல் குழுவினருடைய மனதில் வந்த பெயர் 1895ம் ஆண்டு எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்த வில்லியம் கான்ராட் ராண்ட்ஜென் பெயர்தான்.
ஜெர்மனியின் மூனிச் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றியபோது, 1901ம் ஆண்டில் டிசம்பர் 10 அன்று உலகின் முதல் நோபல் பரிசைப் பெற்றார். ‘ராண்ட்ஜென் கதிர்கள்’ என அழைக்கப்படும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்து அவர் இயற்பியல் துறைக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இயற்பியல் துறையின் முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்தபோது அந்தக் கதிர்கள் மனிதர்களின் சருமத்தையும் ஆடைகளையும் ஊடுருவும் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதனால் எக்ஸ்ரே குறித்து மக்களிடையே ஒருவித அச்சம் கலந்த எதிர்பார்ப்பு உருவானது.
1845ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி ஜெர்மனியின் லென்னெப் எனுமிடத்தில் பிறந்தவர் ராண்ட்ஜென். எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்து அவர் மீது உலகின் பார்வை திரும்பும் முன்பு அவர் அதிகம் அறியப்படாத ஓர் இயற்பியல் அறிஞர் மட்டுமே. அறிவியல் கருத்தரங்குகளில் கூட அவர் அதிகம் தென்பட்டதில்லை. ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்ததில்லை.
1895ம் ஆண்டு நவம்பர் 8 அன்று அவர் தனது ஆய்வகத்தில், ‘கேதோடு ரே’ குழாயிலிருந்து எப்படி ஒளி உமிழப்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேதோடு ரே குழாயிலிருந்து தூரத்தில் உள்ள ஒளிரும் திரையில் ஒரு மினுமினுப்பு தோன்றியது. அதற்குக் காரணம் கேதோடு கதிர் குழாயிலிருந்து வெளியேறும் ஏதோ ஒரு கதிர் என்று உணர்ந்தார். அதனால் ராண்ட் ஜென் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து விட்டார்.
ஒளிரும் திரையில் பளபளப்பை உருவாக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத கதிர் எது என்பதைக் கண்டறியும் ஆவலில் பல வாரங்களாக அவர் ஆய்வகத்தை விட்டு வெளியே வரவில்லை. இறுதியில் அதன் காரணம் எக்ஸ்ரே கதிர்களே என்பதைக் கண்டறிந்தார். அவற்றுக்கு அசாதாரணமான ஊடுருவும் தன்மை இருப்பதையும் அந்தக் கதிர்களை போட்டோ எலெக்ட்ரிக் தகடுகளில் பதிவு செய்ய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார். அந்நாளில் கணிதத்தில் அறியாத எண்ணை ‘எக்ஸ்’ எனக் குறிப்பிடும் வழக்கம் இருந்தது. எனவேதான் கண்டுபிடித்த அந்தக் கதிரை ‘எக்ஸ் கதிர்’ என ராண்ட்ஜென் அழைத்தார்.
தான் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு ராண்ட்ஜென் முதல் முறையாக எக்ஸ்ரே எடுத்தது எதை தெரியுமா? தனது மனைவியின் கையைத்தான். அப்படம் ‘Hand with Ring’ என்று பலராலும் பார்க்கப்பட்டது. மக்களும் விஞ்ஞானிகளும் இதை ஆச்சரியமாகப் பார்த்தனர். அதுவே கதிரியக்க சிகிச்சைக்கு வித்திட்டது.
இப்படி எதிர்பாராதவிதமாக ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர்தான் அவருக்கு உலகின் முதல் நோபல் பரிசை பெற்றத் தந்தது. 1901ம் ஆண்டு அவருக்கு இயற்பியல் துறையின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசுப் பணத்தை உர்ஸ்பெர்க் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறாமலேயே தனது கடைசி நாட்களில் நொடிந்து போய் தனது கிராமத்தில் 1923ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி குடல் புற்றுநோயின் காரணமாக இறந்து போனார்.
உலக கதிரியக்க தினம் (World Radiology Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இது 1895ல் வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்ததை நினைவு கூற இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. நோய்களைக் கண்டறிவதிலும் சிகிச்சையளிப்பதிலும் கதிரியக்கவியலின் (radiology) முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், கதிரியக்க நிபுணர்களின் பங்கை அங்கீகரிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக கதிரியக்கவியல் தினம் முதன் முதலில் 2012ல் அனுசரிக்கப்பட்டது. இந்த முயற்சியை ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம் (ESR), வட அமெரிக்காவின் கதிரியக்கவியல் சங்கம் (RSNA) மற்றும் சர்வதேச கதிரியக்கவியல் சங்கம் (ISR) போன்ற உலகளாவிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தின.
எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு உருவான கதிரியக்கவியல் தற்போது மருத்துவ நோயாளிகள் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் சுகாதார நிபுணர்கள் ஏராளமான மருத்துவ நிலைமைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவுகிறது. இது மருத்துவத்தில் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் புதுமையான துறைகளில் ஒன்றாகும்.
எக்ஸ்-கதிர்கள், காந்த அதிர்வு இமேஜிங் (MRI) மற்றும் கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) ஸ்கேன்கள் போன்ற மேம்பட்ட இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்தி, தற்போது கதிரியக்கவியலாளர்கள் உடலின் உள் கட்டமைப்புகளைக் கண்டு, அறிகுறிகள் தோன்றத் தொடங்குவதற்கு முன்பே சிக்கல்களைக் கண்டறிந்து நோய்களை குணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.