

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 8ம் தேதி உலக நகர திட்டமிடல் தினம் (World Town Planning day) கொண்டாடப்படுகிறது. உலகளவில் நிலையான மற்றும் மக்கள் வாழக்கூடிய வகையில் ஏற்றவாறு நகரங்களை வடிவமைப்பதில் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடலின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது
உலக நகர திட்டமிடல் தினத்தின் வரலாறு: உலக நகர திட்டமிடல் தினம், 1949ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கார்லோஸ் மரியா டெல்லா பாவோலேராவால் நிறுவப்பட்டது. இவர் இந்த நாளை அறிமுகப்படுத்தியதன் மூலம் நமது சமூகங்களில் திட்டமிடலின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, உலகளவில் தொழில்முறை ஆர்வத்தை ஏற்படுத்த முயன்றார். மக்கள் வாழும் வகையில் ஏற்ற, நிலையான மற்றும் சமத்துவமான சமூகங்களை உருவாக்குவதே இந்நாளின் முக்கிய நோக்கம். இதன் தாக்கம் உலகின் பல கண்டங்களில் பரவியது. இன்று உலகளவில் நகர்ப்புறத் திட்டமிடலைக் கொண்டாடும் நாடுகள் 30க்கும் மேற்பட்டவை.
இந்த நாள், நகர்ப்புற திட்டமிடலில் பொதுமக்களின் புரிதல் மற்றும் தொழில்முறை ஈடுபாட்டிற்கு அவசியமான தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது. இது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நகர்ப்புற சவால்களை சமாளிப்பதிலும் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பாளர்களின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
உலக நகர திட்டமிடல் தினத்தின் கொள்கை: மக்கள் இணக்கமாக வாழ, வேலை செய்ய மற்றும் விளையாடக்கூடிய இடங்களை வடிவமைப்பதில், நகர்ப்புற திட்டமிடுபவர்களின் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது. திறமையான நிலப் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. தற்போதைய மற்றும் எதிர்கால சமூகங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பான தொலைநோக்கு சிந்தனை கொண்ட நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
உலக நகர திட்டமிடல் தினத்தை கொண்டாடுவதன் முக்கியத்துவம்: காலநிலை மாற்றம், வீட்டுவசதி நெருக்கடிகள் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பிற்கான ஒதுக்கீடு போன்ற சமகால சவால்களை எதிர்கொள்வதில், நகர்ப்புறத் திட்டமிடலின் மதிப்பில் இது கவனம் கொள்கிறது. வாழ்க்கைத் தரம், பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் திட்டமிடலின் தாக்கம் குறித்த பொது விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க இந்த நாள் உதவுகிறது.
இந்த நாளை அனுசரிப்பதன் மூலம் பொது மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. நகர்ப்புற திட்டமிடுபவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறது. இந்த தினம் நகர்ப்புற முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் மற்றும் நகர மேம்பாட்டில் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் உதவுகிறது.
மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு குடியிருப்புகளை மேம்படுத்துவதிலும் சிறந்த சூழல்களை உருவாக்குவதிலும் அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் நகர திட்டமிடல் தினத்தை கொண்டாடுவது முக்கியமானதாகும்.
2025 ஆண்டுக்கான கருப்பொருள்: ‘திட்டமிட்டால் நம்மால் முடியும்’ என்பதே இந்த ஆண்டிற்கான கருப்பொருள். திட்டமிடல் என்பது நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அத்தியாவசியம் என்பதைக் குறிக்கிறது
காலநிலை நெருக்கடியை தணிக்க மீள்தன்மை கொண்ட உள் கட்டமைப்பு மற்றும் பசுமை உத்திகளை நாம் செயல்படுத்த முடியும். மலிவு விலையில் அணுகக்கூடிய மற்றும் அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வீடுகளை வழங்க முடியும். பொருளாதார வளர்ச்சி சமூக உள்ளடக்கம் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை வளர்க்கும் நகரங்களையும் பிராந்தியங்களையும் வடிவமைக்க முடியும். எதிர்கால, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவுகளுக்கு ஏற்ப நெகிழ்வான மற்றும் தகவமைப்புத் திறன் கொண்ட சமூகங்களை நம்மால் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நாள் வழங்குகிறது.