
இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமான ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். ஆனால், மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களின் அமைதியான போராட்டத்தின் வழியே சுதந்திரம் பெறவேண்டும் என்ற கொள்கையில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. நம்முடைய உரிமையை அடைய ஆயுதம் தாங்கிய போராட்டம் தேவை, அதற்கு யாருடைய உதவியையும் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது அவரது கொள்கை.
செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில், ஒரிசாவின் கட்டாக்கில் 1897 ஆம் வருடம், ஜனவரி 23ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார். படிப்பில் சிறந்தவரான போஸ், பி.ஏ.ஹானர்ஸில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசுப் பணியில் பணி புரிய ஐ.சி.எஸ் படிக்க இங்கிலாந்து சென்றார். 1921ஆம் வருடம் இந்தியா திரும்பிய போஸ், ஆங்கிலேயரிடம் அடிமையாக வேலை பார்க்க விரும்பவில்லை என்று, அரசுப் பணியைத் துறந்து, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1938ஆம் வருடம் காங்கிரஸின் தலைவராகப் பதவி ஏற்றார். 1939ஆம் வருடம் அவருக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து விலகினார்.
சுதந்திர போராட்டத்தின்போது பலமுறை போஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 1943ஆம் வருடம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போஸ், அங்கிருந்து தப்பிச் சென்று ஜப்பான் சென்றார். அது அவருடைய வாழ்க்கையில் திருப்பு முனையாக மாறியது.
1942ஆம் வருடம், இரண்டாம் உலகப் போரில், ஜப்பானியப் படைகள் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைத் தன் வசமாக்கிக் கொண்டன. பிரிட்டன் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 45000 இந்திய வீர்ர்கள் சிறை பிடிக்கப் பட்டனர். அவற்றில் ஒருவர் கேப்டன் ஜெனரல் மோகன் சிங். அவர் ஜப்பான் இராணுவ அதிகாரிகள் உதவியுடன், சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீர்ர்கள் கொண்ட ‘இந்திய தேசிய இராணுவம்’ என்ற அமைப்பை, 1942ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மூலம் பிரிட்டன் அரசுடன் விடுதலைப் போர் நடத்துவது என்று முடிவாயிற்று.
இவருக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் பலர் உதவ முன் வந்தனர். அதில் முதன்மையானவர் ராஷ் பிகாரி போஸ் என்பவர். இந்த ராணுவத்திற்கு ஜப்பான் ஆதரவு அளித்ததுடன், வேண்டிய உபகரணங்களையும் அளித்தது. ஆனால், ஜப்பான் அரசின் குறுக்கீடு அதிகமாக இருந்ததால், தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்று வருந்திய ராஷ் பிகாரி போஸ், இந்திய ராணுவப் படையைக் கலைப்பது என்ற முடிவெடுத்தார்.
போஸின் ஜப்பான் வருகை இந்திய தேசிய இராணுவ அமைப்பிற்கு புத்துயிர் கொடுத்தது. ராஷ் பிகாரி போஸ், வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திய ராணுவப் படையின் தலைமைப் பொறுப்பை போஸ் ஏற்றுக்கொண்டார். அவரின் தலைமைப் பொறுப்பு, படை வீரர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்திய வீரர்கள் மற்றும் இந்திய, ஜெர்மன் நண்பர்கள் மரியாதைக்குரிய தலைவன் என்று பொருள்படும் “நேதாஜி” என்ற பட்டத்தை அவருக்கு அளிவித்தார்கள்.
21, அக்டோபர் 1943, சிங்கப்பூரில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்தியா சுதந்திர நாடு என்ற பிரகடனம் செய்து, அதற்கான அரசை அமைத்தார். மேலும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மீது, ‘இந்திய தேசிய இராணுவம்’ மூலமாக ஆயுதம் தாங்கிய போர் தொடுப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, மன்னராட்சி ஜப்பான், நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் இந்த நாடுகளுக்குத் துணை நிற்கும் நாடுகள் புதிய இந்திய அரசுக்கு அங்கீகாரம் அளித்தன.
சுதந்திர நாடு அறிவித்த போஸ், அதற்கான சட்ட திட்டங்களை வகுத்ததுடன், இந்திய வங்கி, இந்தியாவிற்கான புது நாணயங்கள், கரன்சி நோட்டுகள், தபால் தலை ஆகியவற்றை உண்டாக்கினார். தென்கிழக்கு ஆசியாவில் வசித்து வந்த இந்தியர்கள், குறிப்பாக தமிழ் மக்கள், பெருமளவில் பண உதவி செய்தனர். போஸின் இந்திய ராணுவம், பெண்களுக்கென்று தனியாக ‘ராணி ஜான்சி ரெஜிமெண்ட்’ உருவாக்கியது. இந்த ரெஜிமெண்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் கேப்டன் லட்சுமி ராகவன் என்ற தமிழ்ப்பெண்.
1944ஆம் ஆண்டு, நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவம்’, ஜப்பான் படையுடன் சேர்ந்து, ‘ஆபரேஷன் யு கோ’ என்ற போரில், பர்மா பகுதியில் போரில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் வெற்றி கண்ட இந்தியப் படைகள், 1944ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம் தேதி, இம்பால் மற்றும் கொஹிமா பகுதியில் நடந்த போரில், பலத்த சேதம் அடைந்து பல வீர்ர்களை இழந்தனர்.
இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் தோல்விக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிட்டன் இராணுவத்திலிருந்து தப்பித்த நேதாஜி, செப்டம்பர் 1945ஆம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியா 1947ஆம் ஆண்டு பூரண சுதந்திரம் அடைய நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவ அமைப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். “ஜெய்ஹிந்த்”, “டெல்லி சலோ”, “எனக்கு இரத்தம் கொடு, உனக்கு சுதந்திரம் தருகிறேன்” ஆகியவை சுதந்திர போராட்டத்திற்கு நேதாஜி அளித்த முழக்கங்கள்.