

கலை ஒரு உன்னதமான விஷயம். கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், இவை அனைத்தும் இந்த சமுதாயத்திற்கு சொந்தமானது. அவை நமக்கான அடிப்படை பொக்கிஷமாகும். சினிமா போல நல்ல விஷயங்களையும் தவறான சிந்தனைகளையும் கொடுக்க வல்லது. தர்மத்திற்கு எதிரான சிந்தனைக் கருத்துகள் திரைப்படங்களில் வந்தாலும், இறுதியில் தர்மம் நீதி வெல்வது போலவே காட்சிப்படுத்தப்படும்.
இதனில் கலை என்பது பல வடிவங்களில் அமைந்துள்ளது. ஆக, எல்லாமே கலைதான். சிலரிடம் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதும் கலைதான். கலையை பல வகைகளில் சொல்ல முடியும். அது கற்பனையின், திறமையின் ஊற்று. பல கலைஞர்கள் அவரவர்கள் காட்சிப்படுத்திய கலைகளால் வளா்ந்துள்ளாா்கள். திறமை இல்லாதவர்கள் சோபிக்க முடியாமல் போவதும் உண்டு. காட்சிக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், மேடை நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைத்துறை கலைஞர்கள், வசனகர்த்தாக்கள் இப்படிப் பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
சீா்திருத்த விஷயங்களான இலக்கியம், இதிகாசம், புராணம், வரலாறு இவற்றின் சாராம்சங்களின் அடிப்படையில் பாடல்கள் மூலமாகவும் நடிப்பாற்றல் மூலமாகவும் வெளிப்படுத்திய நபர்களும் வரலாற்றில் பேசப்படுகிறாா்கள். சமுதாயத்தில் கலைஞர்களின் பங்களிப்பு அதிகமாகவே உண்டு. கலை என்பது நீண்ட காலத்திற்கு முன்பாகவே முக்கிய நிகழ்வுகளை பதிய வைத்துள்ளது.
பல்வேறு கருத்துகளை அவர்கள் உலகத்திற்கு தொியப்படுத்தியுள்ளாா்கள். அப்படிப்பட்ட பல்வேறு வகையான கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25ம் நாளை சா்வதேச கலைஞா்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளானது புகழ் பெற்ற ஓவியர் பாப்லோபிக்காசோவின் பிறந்த நாளை குறிக்கிறது. கனடா நாட்டைச் சாா்ந்த புகழ் பெற்ற கலைஞர் கிறிஸ் மேக்ளூா் 2004ம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கி வைத்தாா். பொதுவாக, கலைஞன் என்பவன் தன்னுடைய கடின உழைப்பால் பல்வேறு சாதனைகளை கலை மூலம் உலகிற்குச் சொல்கிறான்.
அப்படி கலையால் வளர்ந்து நல்ல பல கருத்துகளைச் சொல்லி உச்சம் தொட்ட பலர் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறாா்கள். ஒவ்வொரு துறையிலும் தனது சீாிய கருத்துக்களை மக்கள் முன்னே எடுத்துச்சொல்லும் வகையில் அவர்கள் சமுதாயத்தின் ஒரு கிளைவோ்தான். அவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். பல்வேறு கலைஞர்கள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எம்.ஜி.ஆா்., கலைஞர், என்.எஸ்.கிருஷ்ணன், என்.டி.ராமராவ், சிவாஜிகணேசன் இப்படி சிலர் வரலாறு படைத்ததும் அவர்கள் கடைபிடித்த, கற்றுத் தந்த கலையால் வந்ததே.
ஆக, பல்வேறு கலைஞர்களையும் கெளரவப்படுத்தும் விதமாக சர்வதேச கலைஞர்கள் தினத்தில் அனைத்து கலைஞர்களையும் நினைவுகூா்ந்து பாா்ப்போம், பாராட்டுவோம். வாழ்ந்து மறைந்த கலைஞர்கள்மற்றும் வாழும் கலைஞர்கள்களை வாழ்த்துவோம்.