

நாட்டு நடப்புகளை நகர மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் தொிந்து கொள்ளும் பணியில், அகில இந்திய வானொலி பெரும்பங்கை வகித்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டு நடப்புகள், புயல், வெள்ளம், பஞ்சம், அரசியல், விவசாயம், கல்வி இப்படி பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை மக்கள் அவ்வப்போது அறிந்துகொள்ள அகில இந்திய வானொலி மிகச் சிறப்பான சேவைகளை செய்து வந்துள்ளது மற்றும் செய்து வருகிறது. ஆனால், விஞ்ஞான வளா்ச்சியால் தொலைக்காட்சி, செல்போன் ஆதிக்கம் போன்றவற்றால் மக்கள் வானொலியின் உபயோகத்தை தற்போது மறந்து வருகிறாா்கள்.
தன்னுடைய சொற்களால் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, நமது தேசப்பிதா மகாத்மா காந்திஜி அகில இந்திய வானொலியில் 1947ம் வருடம் நவம்பர் 12ம் நாள் எழுச்சிமிகு உரையாற்றினாா். இந்தியா - பாகிஸ்தான் பிாிவினையின்போது சுமாா் இரண்டு லட்சம் சீக்கியர்கள் மற்றும் இந்தியர்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஹாியானாவில் தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனா்.
காந்தியடிகள் அவர்களை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளே அனைவருக்கும் தகவல் தரப்பட்டது. மக்களும் மிகவும் ஆா்வமாக இருந்தாா்களாம். ஆனால், ஏதோ ஒருவித இடர்பாடுகளால் தவிா்க்க இயலாத காரணங்களால் அந்த சந்திப்பை நடத்த முடியவில்லை.
இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தாா்கள். அதன் பிறகு அகில இந்திய வானொலி வாயிலாக காந்திஜி நாட்டு மக்களிடம் பேச முடிவு செய்யப்பட்டது. காந்தி பேசுவதற்கு ஏதுவாக அகதிகள் முகாமில் இருந்தவர்கள் காந்திஜி பேச்சை ரேடியோவில் கேட்க ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமின் மையத்தில் மிகப்பொிய ஒலிபெருக்கி அமைக்கப்பட்டது. அவர் உரையாற்றப்போவதின் நினைவாக அவரது போட்டோ வைக்கப்பட்டது.
காந்திஜி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு 12.11.1947 அன்று மதியம் வந்து, வானொலி வாயிலாக சுமாா் இருபது நிமிடங்கள் பேசினாா். அப்போது, ‘அதிகபட்ச தைரியம், பொறுமையுடன் இந்தத் துயரத்தை எதிா்கொள்ள வேண்டும்’ என அவர் முழக்கமிட்டாா். இதனால் மக்கள் சந்தோஷம் அடைந்தாா்கள். அந்த உரை பல சமயங்களில் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது.
கிராமங்கள்தான் இந்தியாவின் தூண்கள். கிராமங்களில் இருந்துதான் அனைத்துமே துவங்குகிறது என காந்தியடிகள் அடிக்கடி பேசுவாா். பொதுவாகவே, ஊடகங்கள் நம்பகத்தன்மையான விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆக, காந்தியடிகள் ரேடியோவில் (All India Radio) உரை நிகழ்த்திய இத்தினம், 1997ல் நவம்பர் பன்னிரண்டாம் நாளில் ஐம்பதாம் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 12.11.1950 முதல் ‘பொது சேவை ஒலிபரப்பு’ (Public Service Broadcasting Day) தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மக்கள் தேவை அறிந்து அனைத்துத் தகவல்களையும் ஒலிபரப்பிய வானொலியின் சேவையை யாரும் மறக்க முடியாது. அதேபோல, சிறிய பெட்டியாக கைக்கு அடக்கமாகவும் பல வீடுகளில் இன்றைக்கும் வானொலி உள்ளதே நிஜம். உள்ளூா் பஞ்சாயத்து போா்டுகளில் காலை, மாலை வேளைகளில் செய்திகள் ஒலிபரப்பப்படும். பழங்கால பசுமை நினைவுகள் வந்து போவதோடு, ‘ஆகாஷ்வாணி… செய்திகள் வாசிப்பது...’ என்ற கம்பீரக் குரலும் இன்றும் பலரது மனங்களில் நீங்காத நினைவுகளே!