
ஐக்கிய நாடுகள் பொது சபையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளன்று, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பன்னாட்டு அமைதி நாள் (International Day of Peace) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பின்பு, 2002ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 24 மணி நேர உலகளாவிய போர் நிறுத்தத்தையும், முடிந்த வரை வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் அழைப்பு விடுக்கிறது. மோதலின் பேரழிவு தாக்கங்கள் மற்றும் நீடித்த மாற்றத்தை உருவாக்குவதில் உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் சக்தி குறித்து தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்துகிறது.
ஆலிவ் கிளையை ஏந்தியிருக்கும் புறா அமைதியின் உலகளாவிய சின்னமாகும். இது பெரும்பாலும் கொண்டாட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் கல்வி நிகழ்வுகளின்போது காட்டப்படும். உலகம் முழுவதும் அமைதி அலையை உருவாக்க பல அமைப்புகளும், சமூகங்களும் நண்பகலில் ‘நிமிட மௌன அஞ்சலி’ செலுத்துகின்றன. அமைதியான மதிப்புகளை வலுப்படுத்த கலை கண்காட்சிகள், மதங்களுக்கு இடையேயான கூட்டங்கள் மற்றும் இளைஞர் மன்றங்கள் தொடங்கப்படுவதையும் இந்த நாள் காண்கிறது.
ஆயுத மோதல்கள் முதல் துருவ முனைப்பு மற்றும் சமூக அநீதி வரை அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களுடன், அமைதிக்காக ஒரு நாளை மட்டும் அர்ப்பணிப்பது என்பது பொருத்தமானதில்லை. பன்னாட்டு அமைதி நாள் என்பது,
* வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து புரிதலுக்காகப் பாடுபட எல்லா இடங்களிலும் உள்ள மக்களை ஊக்குவிக்கிறது.
* சமூகங்கள் மற்றும் வருங்காலச் சந்ததியினர் மீது போர்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
* அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையின் தூதர்களாக இருக்க தனி நபர்களையும் குழுக்களையும் ஊக்குவிக்கிறது.
* உள்ளூர் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை உலகளாவிய இயக்கங்களுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளுடனும் இணைக்கிறது.
* பன்னாட்டு அமைதி நாளானது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. 2025ம் ஆண்டிற்கு , ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கருப்பொருளாக, ‘அமைதி கலாசாரத்தை வளர்ப்பது’ என்று அமைந்திருக்கிறது. வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், வீட்டில், பள்ளிகளில், சமூகங்களுக்குள் மற்றும் நாடுகளுக்கு மத்தியில் அமைதியை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
* இந்தக் கருப்பொருள் அனைவரையும் பச்சாதாபம், கருணை மற்றும் நேர்மறையான தகவல் தொடர்புகளை மதிக்க அழைக்கிறது, மோதலைக் குறைக்கவும், ஒருவருக்கொருவர் மரியாதை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், உதவும் செயல்களை ஊக்குவிக்கிறது. அமைதியை வளர்ப்பதில் மாணவர்களும், இளைஞர்களும் சிறப்பான பங்களிப்புகளைச் செய்ய முடியும்.
* உங்கள் நிறுவனம் அல்லது வட்டாரத்தில் அமைதிக் கூட்டம் அல்லது அணிவகுப்பை ஏற்பாடு செய்யலாம். நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியோ அல்லது வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டோ செல்லலாம்.
* இந்த வருடத்தின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் அமைதிக்கான கருப்பொருளுடனான கலைப்படைப்புகள் அல்லது சுவரொட்டிகளை உருவாக்கி, அவற்றை பள்ளி அல்லது சமூக மையத்தில் காட்சிப்படுத்தலாம்.
* பல்வேறு குழுக்களிடையே திறந்த மனப்பான்மை மற்றும் புரிதலை ஊக்குவிக்க, மதங்களுக்கு இடையேயான அல்லது கலாசாரங்களுக்கு இடையேயான உரையாடல்களை நடத்தலாம்.
* உலகளாவிய ஒற்றுமைக்காக நண்பகலில் ஒரு அமைதியான தருணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
* பள்ளி வெளியீடுகள் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதற்காக அமைதிக்கான கட்டுரைகள், கவிதைகள் அல்லது அமைதி முழக்கங்களை எழுதிப் பரப்பலாம்.