

சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக். இவர் பத்து சீக்கிய மத குருக்களுள் முதன்மையானவர் ஆவார். இவர் கபீரின் உற்ற சீடராகவும் கருதப்படுகிறார். குருநானக் ஜயந்தி திருநாளான இன்று அவர் அருளிய சில அருளுரைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
* நல்லோரது நட்பு, இனிய சொற்களைப் பேசுதல், அகத்தூய்மை, எளியோருக்கு உதவுதல் ஆகிய அனைத்தும் கொண்டவர்களே மேன்மக்கள்.
* ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கடவுளின் ஒளி இருக்கிறது. எல்லோரையும் சமமாக நடத்துவதும் சமமாக பாராட்டுவதும் மனிதப் பண்பாகும்.
* சத்தியமும் அன்பும் அருளும் வாழ்வில் மலர்ந்து விட்டால் நாம் கடைத்தேறி விட்டோம் என்று அர்த்தமாகும். இல்லையேல், நம் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று கொள்ள வேண்டியதுதான்.
* வேதங்களை தினமும் பாராயணம் செய்து வருவதால் உங்கள் உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் கழுவப்படுகின்றன.
* இறைவனின் சங்கல்பத்தினால்தான் இந்த உலகம் இயங்குகிறது. இருந்தாலும், யாருடைய கவனிப்பும் தயவும் தேவைப்படாதவர் அவர். எல்லாமே அவருடையதாக இருக்கும்போது அவரது பாதக் கமலங்களில் நாம் என்ன காணிக்கை செலுத்த முடியும்? என்ன சொல்லி அவருடைய அன்பைப் பெற முடியும்.
* குழந்தை பருவத்திலேயே இறைவனின் அருள் வடிவத்தைப் பற்றி பெற்றோர்கள் அவர்களிடம் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளரும் பருவத்தில் தெய்வ நம்பிக்கையுடன் வளருவார்கள்.
* சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் ஆத்ம ஞானத்தை அபகரிக்கும் திருடர்கள். இறைவனுடைய சங்கல்பத்தினால்தான் சிலர் உயர்ந்தவர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும் பிறக்கிறார்கள்.
* ஏக்கம் நிறைந்த வாழ்வில் இறைவனைப் பற்றிய குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். அந்தக் குழப்பத்தை நீக்க இறைவனின் பிரகாசமான ஒளி வேண்டும். அதனால் இறைவனை முழு மனதுடன் வணங்குங்கள். குழப்பம் நீங்கி விடும்.
* யுகம் யுகமாக ஆராய்ந்து பார்த்தாலும் சரி, ஆராய்ச்சியின் மூலம் இறைவனை புரிந்துகொள்ள முடியாது.
* இறைவனை அடைவதற்கு செல்வம் வேண்டியதில்லை. ஆடம்பர உடை வேண்டியதில்லை. அந்தஸ்தான பதவி வேண்டியது இல்லை. வேண்டியது எல்லாம் தூய்மையான மனமே.
* விடியற்காலை நேரங்களில் ஜபம், தியானம் ஆகியவற்றின் மூலம் இறைவனிடம் ஒன்றுபடு. மனம் இறைவனுடன் ஒன்றுபடாத நிலையில் உங்களது அலங்காரம் அழியாது.
* தெய்வ சங்கல்பம் எல்லோருக்கும் கிடைக்காது. அது கிடைக்க வேண்டுமானால் தெய்வ சேவையுடன் சக மனிதர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களை தெய்வ ஒளி வந்தடையும்.
* இறைவனின் சங்கல்பப்படியே மக்கள் சுகங்களையும் துக்கங்களையும் அடைகிறார்கள்.
* இறைவன் நாமமே அகல் விளக்கு. துயரமே அதை எரியத் தூண்டும் நெய் விளக்கு. பிரகாசமாக எரியும்போது துயரம் என்ற நெய் குறைந்து கொண்டு வரும்.
* இறைவனுடைய அருளை அடக்கம், அன்பு, ஆத்மீக சரணாகதி, தெய்வ சங்கல்பம் போன்ற வழிகளில்தான் பெற முடியும்.
* இறைவன் ஒவ்வொரு ஆத்மாவிலும் உள்ளான். ஆத்மா இறைவனிடத்தில் உள்ளது. குருவின் உபதேச ஞானத்தால் ஒருவர் இதை உணரலாம்.
* இறைவனுடைய திருநாமத்தை உள்ளம் தியானிக்கத் தொடங்கினால் வேறு எந்தவிதமான சிந்தனையும் ஏற்படுவதில்லை.
* இறைவனுக்கு தாய், தந்தை இல்லை, மனைவியில்லை, மகனில்லை, உறவினர் இல்லை, ஆசை இல்லை. மூலமறியப்பட்ட முடியாத தூய்மையான வடிவான இறைவன் எங்கும் நிறைந்த ஒளிமயமானவன்.