
இன்று 54வது பிறந்தநாளைக் கொண்டாடும் ’தல’ அஜித் அவர்களின் பிரத்யேக பேட்டி கல்கி 15-07-2001 இதழில் வெளியானது. அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அதை இங்கு மீண்டும் வெளியிடுகிறோம்...
'சிட்டிசன்' பட வெற்றியின் சந்தோஷ ரேகை எதுவும், அஜித்தின் முகத்தில் இல்லாதது ஆச்சர்யம்தான். ஒரு வாரத்து கருகரு தாடியோடு; அருணாசலம் ஸ்டூடியோவில், தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். 'சிட்டிசன்' முடிந்து போய்விட்டது. அது பற்றியே இன்னும் அசை போட்டுக்கொண்டிருந்தால்... அதை விடவும் ஒரு பெரிய பாய்ச்சலுக்கு எப்படித் தயாராவது என்று நம் கண்களை ஊடுருவிக் கேட்கிற அஜித்திடம் நம் முதல் கேள்வியே வத்திக்குச்சியைப் பற்ற வைத்தது.
'தீனா' படத்தில் ரஜினி போல் செய்திருக்கிறீர்கள் என்றார்கள். இப்போது 'சிட்டிசனை'ப் பார்த்துவிட்டு கமல் என்கிறார்கள். அப்படியானால் அஜித் யார்?
எனது ரசிகர்களில் ஒருவராவது, என்னிடம் வந்து, நான் ரஜினியையோ, கமலையோ இமிடேட் செய்து நடிப்பதாகச் சொன்னதில்லை. வெளிப்புறப் படப்பிடிப்பில் நேரடியாகவும் கடிதங்கள் மூலமும் ரசிகர்களின் உடனடி ஃபீட்பேக்கை எதிர்கொள்கிற நடிகன் நான். 'தீனா'வை ரஜினி படம் மாதிரி இருக்கிறது என்றும், 'சிட்டிசன்' கமல் படம் மாதிரி இருக்கிறது என்றும் சொன்னார்கள். அது உண்மை. அதற்குக் காரணம் இந்த இரண்டு படங்களுமே, ரஜினி, கமல் பாணி பார்முலா படங்கள். வளரும் கலைஞன் ஒருவன் வளர்ந்துவிட்ட கலைஞர்களின் பாதிப்பை உள்வாங்கிக்கொள்வது என்பது இயல்பு. அப்படித்தான் கமலும், ரஜினியும் எனக்குள்ளும் பிம்பமாய்ப் பதிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடியாக நான் இருந்திருந்தால் அஜித் எப்படி உருவாகியிருக்க முடியும்... சினிமா என்பதே இங்கே பார்முலாதான். 'தீனா', 'சிட்டிசன்' எனது சினிமா வாழ்க்கையில் இரண்டு பார்முலா படங்கள், அவ்வளவுதான். இதே மாதிரி இன்னும் இரண்டு படமெடுத்தால் இங்கே யார் பார்ப்பது... இந்த யதார்த்தத்தை நான் நான்கு உணர்ந்திருக்கிறேன்.
ஹீரோயிசத்தை விரும்பாத ஹீரோ என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?
இது எப்படியிருக்கிறது என்றால் ரெஸ்டாரெண்டுக்கு வந்தவர்களை, 'சாப்பிட வந்தீர்களா?" என்று கேட்பதைப்போல் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் இருக்கிறது ஒப்புக்கொள்கிறேன். ஹீரோயிசத்தால் நிறைய பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். உண்மை. எனக்கும்கூட நிறைய ரசிகர்கள் கிடைக்கலாம். ஆனால் சினிமாவில், வெற்றியை அது மட்டுமே நிர்ணயிக்கிற காரணி என்று நான் சொன்னால் அது நல்ல நகைச்சுவையாக இருக்கும். இது டீம் ஓர்க். அதை நான் மதிக்கிறேன். அதே நேரம் எனக்காக கதையை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் அல்ல நான். இன்றைய சூழலுக்கு அப்படி எதிர்பார்த்தால் தாக்குப்பிடிப்பது கடினம். அதனால்தான் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் மீனவன் சுப்ரமணியாக என்னால் மாற முடிந்தது. தலைமுடியை ஓட்டவெட்டி, முடிக்கு டை அடிக்காமல், ப்ளீச் செய்துகொண்டேன். உடம்பிலிருக்கிற ஒவ்வொரு முடியையும் ப்ளீச் செய்தேன். இந்த மஞ்சள் நிறம் நீங்க இன்னும் ஒரு வருடம்கூட ஆகலாம். ரசிகர்களுக்காக நான் எந்த வலியையும் ஏற்கத் தயார். அஜித் படத்திற்குக் கொடுக்கிற காசு வீண் இல்லையென்று அவர்கள் சொல்ல வேண்டும். அதே நேரம் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் பல்வேறு பாத்திரங்களில் முகம் மாற்றுகிற நடிகன் என்கிற முத்திரையும் எனக்கு வேண்டும். இதற்கு இமேஜை, நான் ஒரு இஷ்யூவாக நினைக்கவில்லை.
'பாரதி' படத்தில் பாரதியாகவே வாழ்ந்து காட்டிய சாயாஜி ஷிண்டேவுக்குப் பெரிய மரியாதை கிடைத்திருக்கிறது. ஆளால் அடுத்து அவர், நடிக்கும் 'அழகி' படத்தில் பீடி புகைக்கும் மீன் வியாபாரியாக நடிக்கிறார். இப்படி இவர் நடிக்கலாமா என்று ரசிகள் பதறுவான் என்பதற்காக, அவர் நடிக்காமல் இருக்கமுடியுமா? கலைஞனுக்குப் பல முகங்கள்.. அவனை வளர்க்கக்கூடியது அதுதானே.. அப்படித்தான் நானும் வளர விரும்புகிறேன்.
அதிக ஈடுபாட்டையும், உழைப்பையும் கொட்டி, நீங்கள் உருவாக்கிய 'சிட்டிசன்' படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் படத்தின் நிறைகளைச் சுட்டிக் காட்டிய பத்திரிகைகள், நிறைய குறைகளையும் சுட்டிக்காட்டின. இந்த விமர்சனங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? படம் வெளிவரும் முன்பே இந்தக் குறைகளை உணர்ந்தீர்களா?
இந்தப் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டேன். ஒருமுறை மேக்அப் செய்து முடிக்கவே ஆறு மணி நேரம் தேவைப்பட்டது. 'சிட்டிசன்' வலி இன்னும் எனக்குள் மிச்சமிருக்கிறது. படத்தின் வெற்றிக்குப் பிறகே அந்த வலி அர்த்தமுடையதாக எனக்குப் படுகிறது. இது என்னுடைய பக்கம்.
மீடியாவின் விமர்சனம் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் நடுநிலையாக இருந்தது. அந்த விமர்சனத்தை நாள் ஏற்றுக்கொள்கிறேன். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டதால்தான் நான் வளர்ந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் விமர்சனங்களில் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். சிட்டிசனைப் பொருத்தவரை, எனது பங்கை நான் ஒழுங்காகவே செய்திருக்கிறேன். படம் வெளி வரும் முன்பே குறைகள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்கிறீர்கள். தயாரிப்பில் இருக்கும் ஒரு படத்தின் குறைகளை களையத்தான் நான் முயற்சிக்க வேண்டுமே தவிர, குறைகளை வெளியே சொல்லிக்கொண்டிருத்தால் அது தயாரிப்பாளரைப் பாதிக்கும்... முடிந்தவரை குறைகளைக் களைந்தோம். அதை மீறித் தெரிகிற குறைகள் பற்றி நீங்கள் இயக்குனரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு நான் பொறுப்பல்ல.
தோற்றத்தில் முதிர்ச்சி பெறாத அஜித். தோற்றத்திற்குப் பொருந்தாத வேடங்களையும், பாத்திரங்களையும் செய்யத்துடிப்பது, அவரின் அவசரத்தையே காட்டுகிறது என்ற பரவலான விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்த அவசரம் இன்றைய அவசியமாகிவிட்டது. ரஜினியும், சுமலும் கடந்த இருபத்தைந்து வருடங்களா சினிமாவில் நின்று நிலைத்திருக்கிறார்கள் என்றால் அது பெரிய சாதனை. சாட்டிலைட் தொலைக்காட்சியும். இண்டர்நெட்டும், பொழுதுபோக்கு பூங்காவும் வந்து சினிமா தியேட்டருக்கு வரும் ரசிகர் கூட்டத்தையே பாதியாகக் குறைத்துவிட்ட கால கட்டத்தில், வாழ்ந்து கொண்டிருக்கிற நான், பதினைந்து வருடம் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இதனால்தான் அவசர அவசரமாக நம்மை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
ரொமான்ஸ் பண்ணுவதற்கு மட்டும்தான் அஜித் என்று ஒரே நாற்காலியைப் பிடித்துக்கொண்டிருந்தால் முயல், ஆமை ஓட்டப் பந்தயம் மாதிரி ஆகிவிடும். மாறாக இங்கே ரொமான்ஸ் செய்ய பிரசாந்த் இருக்கிறார். மாதவன் வந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு புது ஹீரோ வந்துகொண்டிருக்கிற ஆரோக்கியமான சினிமாவில் ரசிகர்கள் தூக்கி எரியும் முன்பு, என்னை நான் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு காரணம், வாழ்க்கையின் நிலையாமை திருப்பதிசாமி என்றொரு இளம் இயக்குனர், சினிமாவிலும், யதார்த்தத்திலும் ஒரு நிஜமான மனிதர், விபத்தில் இறந்துவிட்டார். இதுவரை பத்துமுறை எனது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்து நிமிர்ந்து எழுந்திருக்கிறேன். சினிமாவில் நடிப்பது ஏதோ ஏசி வேனில் உட்கார்ந்துகொண்டு ஜூஸ் குடிப்பது என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஷாட்டிலும் ரிஸ்க் எடுக்கிற ஒரு கலையாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
இங்கே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே எதற்காகவும் காத்திருக்க எனக்கு விருப்பமில்லை.
அஜித் என்கிற மனிதன், அஜித் என்கிற நடிகன் இருவரில் உங்களை இயக்குவது யார்?
அது கேள்விக்குறியாகவே இருக்கட்டும். அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எனது குடும்பத்திற்கேகூட அது தெரியக்கூடாது என்கிற எண்ணம் எனக்குண்டு. அது நம்மிடமே ரகசியமாக இருக்கிறவரை நாம் நாமாகவே இருப்போம். எல்லோரும்கூட இப்படி, அடைகாத்துக் கொள்வது அவசியம். இதனால் நம்மைப் பற்றிய எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அதில் கிடைக்கிற த்ரில்தான் நம்மைக் கட்டுப் படுத்தி வைக்கிற அங்குசம்.
சந்திப்பு: ஜெயந்தன்
படங்கள்: ஐரிஸ்