'ஈயடிச்சான் காப்பி' வழக்கத்துக்கு வந்தது எப்படி?

E Adichan copy
E Adichan copy

ஒருவரின் படைப்பை அப்படியே நகலெடுத்துப் படைப்பதை அல்லது உருவாக்குவதை சுட்டிக்காட்ட அல்லது இடித்துரைக்க, தமிழரிடையேப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ‘ஈயடிச்சான் காப்பி’ என்பது. ‘ஈயடித்தான் காப்பி’ எனும் சொல் எப்படி வழக்கத்துக்கு வந்தது? என்பதற்குச் சுவையான ஒரு கதையைச் சொல்வார்கள். அந்தக்கதை இதுதான்:

ஒரு பள்ளியில் புதிதாகச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஒரு பொருள் தொடர்பாக ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வரும்படி தனது வகுப்பு மாணவர்களிடம் தெரிவித்தார். மாணவர்களும் ஆசிரியர் தெரிவித்த பொருள் தொடர்பான பல்வேறு பாட நூல்களிலிருந்து தகவல்களைச் சேகரித்தும், அது தொடர்பான சில தகவல்களைச் சேகரித்தும், ஆய்வறிக்கைகள், நூல்கள் போன்றவற்றை வாசித்து சான்றுகள், மேற்கோள்கள் என்று அனைத்தையும் சேர்த்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதினர்.

அம்மாணவர்களில் திறமையான மாணவர் ஒருவர், தனது ஆய்வுக் கட்டுரையின் மேலதிக விளக்கத்திற்காக சில படங்களைப் பசை தடவி ஒட்டி விளக்கத்துடன் எழுதினார். எழுதி முடிந்தவுடன் தனது பயிற்சிப் புத்தகத்தை மூடி வைத்தார். அவர் புத்தகத்தை மூடி வைக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக, ஈ ஒன்று இடையில் சிக்கிக் கொண்டது. அந்த ஈயானது எழுதப்பட்டிருந்த கட்டுரையின் இடையில் ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டது. அந்த மாணவரும் அதனைப் பார்க்காமல் அப்படியே மூடி வைத்து விட்டார்.

அந்தப் பயிற்சிப் புத்தகத்தை அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர், அவருக்குத் தெரியாமல் எடுத்து, அதை அப்படியே முழுமையாக நகலெடுத்துக் கொண்டார். அந்தப் பயிற்சிப் புத்தகத்திலிருந்த படங்களைப் பார்த்த அவர், தன்னுடையப் பயிற்சிப் புத்தகத்திலும் அப்படங்களைப் பசை போட்டு ஒட்டினார். நகலெடுத்தவர், அந்தப் பயிற்சிப் புத்தகத்தில் இருந்த எந்தவொரு தகவலையும் சரிபார்க்கவுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லை.

ஆசிரியர் குறிப்பிட்ட நாளில் நகலெடுத்த மாணவர் முன்கூட்டியேத் தனது பயிற்சிப் புத்தகத்தையும் சமர்ப்பித்து விட்டார். ஆசிரியர் அனைத்துப் பயிற்சிப் புத்தகங்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அந்தப் புத்தகங்களில் இரண்டு பயிற்சிப் புத்தகங்கள் மட்டும் ஒரே மாதிரியாக இருந்ததைப் பார்த்து அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
பெப்பிசுத் தீவு எனும் பொய்த்தீவு எங்கு உள்ளது?
E Adichan copy

அந்த இரண்டில் எது உண்மையானது? எது நகலெடுத்தது? என்று கண்டறிய விரும்பினார். இரண்டு பயிற்சிப் புத்தகங்களுக்கிடையிலும் எந்த வித்தியாசமுமின்றி, இரண்டும் ஒன்று போலவே இருந்தன. இரு புத்தகங்களிலும் ஒரு பக்கத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஈ ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால், அவரால் இரண்டு

புத்தகங்களுக்குமிடையில் எந்தவொரு வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரையும அழைத்த அவர், “இந்தப் பயிற்சிப் புத்தகத்தில், குறிப்பிட்ட பக்கத்தில் தேவையில்லாமல் ஒரு ஈ ஏன் ஒட்டிக் கொண்டிருக்கிறது? அதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். பயிற்சிப் புத்தகத்தை நகலெடுத்த மாணவர், தனது தவறு வெளியேத் தெரிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஏதேதோ பதில்களைக் கூறினார்.

அதே வேளையில், உண்மையாகவே ஆய்வு செய்து பயிற்சிப் புத்தகத்தைத் தயாரித்த மாணவர், நான் எனது கட்டுரையில் ஈ எதையும் ஒட்டவில்லை. அது தவறுதலாகப் பயிற்சிப் புத்தகத்தில் மூடப்படும் போது ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்று விளக்கமளித்தார்.

அந்த ஆய்வுக்கட்டுரையை நகலெடுத்த மாணவர் யார் என்பதை தெரிந்து கொண்ட ஆசிரியர், நகலெடுத்த அந்த மாணவரை அழைத்துக் கண்டித்ததுடன், உன் பயிற்சிப் புத்தகம் ஈயடிசான் காப்பியாக இருக்கிறது என்று சொல்லிச் சத்தம் போட்டார். அன்றிலிருந்து ‘ஈயடிச்சான் காப்பி’ எனும் சொல் புழக்கத்தில் வந்துவிட்டது.

தற்போது இணையதளங்களில் பல ஈயடிச்சான் காப்பி தகவல்களைப் பார்க்க முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com