பெப்பிசுத் தீவு எனும் பொய்த்தீவு எங்கு உள்ளது?

Phantom Island
Phantom Island

பெப்பிசுத் தீவு (Pepys Island) என்பது, பாக்லாந்துத் தீவுகளுக்கு வடக்கில், 47° தெற்குத் திசையில் 230 கடல் மைல்கள் தொலைவில் இருந்ததாகக் கருதப்பட்ட ஒரு பொய்த்தீவு ஆகும்.

பொய்த்தீவு என்றால் என்ன?

பொய்த் தீவு (Phantom Island) என்பது, உண்மையில் இல்லாத, ஆனால் இருப்பதாகக் கருதப்பட்டுச் சிறிது காலம் நிலப்படங்களில் காட்டப்பட்டிருந்த தீவைக் குறிக்கும். இவ்வாறான சில பொய்த்தீவுகள் சில நூற்றாண்டுகளாக நிலப்படங்களில் காட்டப்பட்டு இருந்ததும் உண்டு.

பொய்த் தீவுகள் பெரும்பாலும், புதிய நிலப் பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த கடலோடிகளின் அறிவிப்புகளில் இருந்தே உருவாகின்றன. சில முழுமையாகவேத் தொன்மம் சார்ந்தவை. பிசாசுத் தீவு இவ்வாறான ஒன்று. வேறு சில, உண்மையான தீவுகளைப் பிழையான அமைவிடத்தில் குறிப்பதனாலோ அல்லது பிற புவியியல் தவறுகளினாலோ ஏற்படுகின்றன.

பெப்பிசுத் தீவு என சொல்லப்பட்டிருந்த தீவு ஒரு பொய்த்தீவு ஆகும். உண்மையில் பாக்லாந்து தீவுகளைப் பிழையான இடத்தில் அடையாளம் கண்டதால் ஏற்பட்டது.

1683 டிசம்பரில், பிரித்தானியக் கப்பல் தலைவனான அம்புரோசு கௌலே என்பவர், 40 சுடுகலன்கள் பொருத்தப்பட்ட பச்செலர்ஸ் டிலைட் (Bachelor's Delight) என்னும் கப்பலில் உலகைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தென் அட்லாண்டிக்கில், 47°தெ அகலக்கோட்டில் முன்னர் அறியப்படாததும், மக்கள் குடியேற்றம் இல்லாததுமான ஒரு தீவைக் கண்டு அதற்கு பெப்பிசுத் தீவு எனப் பெயரிட்டார். இப்பெயர் சாமுவேல் பெப்பிசு என்பவரின் பெயரைத் தழுவியது.

18 ஆம் நூற்றாண்டில் பெப்பிசுத் தீவின் அமைவிடத்தை அறிவதற்குப் பலரும் முயற்சி எடுத்தனர். அம்முயற்சி எதுவும் வெற்றியளிக்கவில்லை. இவர்களுள், ஆன்சன் பிரபு (1740-1744), கொமடோர் பைரன் (1764), கப்டன் குக், பாங்க்சும் சோலன்டரும் (1769), பெர்னெட்டி (1763-1764), போர்கன்வில்லெ (1766-1769), பெரொசே (1785), வான்கூவேர்ட் (1790-1795) ஆகியோரும் அடங்குவர்.

இதையும் படியுங்கள்:
இதுவரை இருந்த இந்திய பிரதமர்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!
Phantom Island

பேராசிரியர் பேசாட்டி என்பவர் கௌலேயின் வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு, பெப்பிசுத் தீவுகளின் விபரங்கள் எல்லாம் பாக்லாந்துத் தீவுகளின் விபரங்களோடு சரியாக ஒத்திருப்பதாகவும், கௌலேயின் வரைபடங்களின் படியும் அது பாக்லாந்துடன் பொருந்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதன் பிறகு பெப்பிசுத் தீவு என்பது தனியான தீவு இல்லை. பாக்லாந்துத் தீவுதான் பெப்பிசுத் தீவு என்று முடிவு செய்யப்பட்டது.

கப்பலோட்டுவதில் ஏற்படும் தவறுகள், அவ்வப்போது தென்படக்கூடிய பாறைகள், பனிப்பாறைகளைப் பிழையாக அடையாளம் காணல், நிலக்கரையொத்த மூடுபனித் திரள், ஒளியியல் திரிபுக்காட்சிகள், போன்றவற்றாலும் தீவுகள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுவது உண்டு. 1823ல் வெட்டெல் கடலில் கவனிக்கப்பட்ட நியூ சவுத் கிரீன்லாந்து பின்னர் ஒரு போதும் காணப்படவில்லை. இது ஒரு மாயத் தோற்றமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பொய்யாகப் புனைந்து கூறப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

சில பொய்த் தீவுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். என்றுமே இருந்திராத தீவுகள் பொய்த் தீவுகள் ஆனமை ஒருபுறம் இருக்க, எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், கடற்கீழ் மண்சரிவு, தாழ்நிலங்கள் கடலுள் அமிழ்தல் என்பன போன்ற சில காரணங்களால் இருந்த தீவுகளும் காணாமல் போயிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com