

மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கவேண்டிய சலுகைகள், உாிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம், மத நல்லிணக்கம், ஆன்மிக வழிபாடுகள், சமத்துவம், சுகாதாரம், கலாசார வழிவகைகள், அடிப்படை உாிமைகள், குடிநீா், குடியிருப்பு, வாழ்வாதாரம், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும். பிறப்பால் யாரிடமும் பாகுபாடு என்ற நிலை ஏற்படக் கூடாது. இவை சரிவர கிடைக்காதபோது அங்கே தேவையில்லாத நிகழ்வுகள் தலைதூக்க ஆரம்பித்து விடுகின்றன. இதற்கான தீா்வுகள் ஓரளவுக்கே கிடைத்துள்ளன. அது முழமை பெறவில்லை என்றே சொல்லலாம்.
அந்த வகையில் உாிமைக்கான கோாிக்கைகளே மனித உாிமையாகும். அதை வலியுறுத்தி உலக நாடுகள் சபை 1948ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10ம் நாள் உலக மனித உாிமையை பறைசாற்றும் விதமாக அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என பிரகடனம் செய்தது. அந்த வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் நாள் உலகம் முழுமைக்கும் மனித உாிமைகள் தினமாக (Human Rights Day) கொண்டாடப்படுகிறது.
இந்த நாளானது அனைத்து உரிமைகள் சட்டம் ஏற்படுத்தப்பட்டதை கெளரவப்படுத்தும் நாளாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் அடிப்படை உாிமைகள் பாதுகாக்கப்படுவதே இந்நாளின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு தனி மனிதனும், தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும் மற்ற அனைவரும் வாழ வழிவகை செய்யும் நெறிமுறை மற்றும் உரிமையை பெறுவதையும் உணர்த்துவதே இந்த பிரகடனத்தின் நோக்கமாகும்.
பொதுவாக, அனைத்து மனிதர்களுக்கும் சுதந்திரம், உரிமை, கண்ணியமான வாழ்க்கை பொதுவானது என்ற உண்மையை உணர்த்துவதே இதன் நோக்கம், அதுவே நிஜம். இனம், மொழி, மதம், அரசியல், நாடு, சுற்றுச்சூழல், சொத்து, பிறப்புரிமை, சமூக உயர்வு, சமுதாய அங்கீகாரம் கிடைக்கப்பெறுவதில் அரசின் பங்களிப்பு அவசியமானது.
2025ம் ஆண்டு மனித உரிமைகள் தின பிரகடனம் அமலுக்கு வந்து 77 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் இதில் பிரச்னைகள் இருந்து வருவதும், தீா்வுகள் எட்டப்படாத நிலையும் தொடர்கதையாகவே உள்ளது கவலையளிக்கிறது. பொதுமக்கள் சுதந்திரமாகவும் பிரச்னைகள் இல்லாமலும் வாழ வேண்டும். அதற்கு அரசும் தனியாா் அமைப்புகளும் உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நிா்வாகம் சில செயல்களைச் செய்ய வேண்டும், சிலவற்றை செய்வதில் இருந்து தடுக்கப்பட வேண்டும். இதைத்தான் மனித உரிமைகள் சட்டம் வலியுறுத்துகிறது.
இதனால் பல வகைகளில் அதிகார துஷ்பிரயோகம் தடுக்கப்படும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கண்ணியம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பு, சமுகத்தில் அமைதியான மற்றும் நியாயமான வாழ்க்கை வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதுடன் ஜனநாயக ஆரோக்கியம் வலிமை பெற வழிவகை செய்யும். பிறப்பால் தனி ஒரு மனிதனுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும். அதைப் பறிப்பது சட்ட விரோதமான செயல். அதேபோல, சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்ட விரோத செயல், சுரண்டல், மன ரீதியான பாதிப்பு இவை தடுக்கப்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதே நல்லது.
ஆக, மனித உரிமைகளை பல்வேறு வகையாகப் பிாிக்கலாம். பேச்சு சுதந்திரம், கல்வி அடிப்படை தேவை, தோ்தலில் வாக்களிப்பது, வாழ்வதற்கான உாிமை மற்றும் பாதுகாப்பு இவை யாவும் தங்கு தடைஇல்லாமல் கிடைப்பதே நல்ல ஜனநாயகமாகும். அதற்காக இந்நாளில் நாமும் முடிந்தவரை பாடுபடுவோம்.