
குடும்பத்தில் கணவரின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் சம்பாதித்துக் கொண்டு வரும் பணம் அல்லது வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதில் அவர்கள் காட்டும் அக்கறை, வீட்டு வேலைகளில் செய்யும் உதவிகள் இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது, ஒரு கணவர் தன் மனைவிக்கு அளிக்கும் மனப்பூர்வமான அன்பும், ஆதரவும் தான். இந்த உணர்ச்சிபூர்வமான அம்சங்கள் அவர்கள் செய்யும் வேறு எதையும் விட மிக சக்தி வாய்ந்தவை. தந்தையர் தினத்தை விட தேசியக் காதலர் தினத்தை விட கணவரைப் பாராட்டும் தினத்தை மேலைநாட்டினர் தீவிரமானதாக ஏப்ரல் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று கொண்டாடுகிறார்கள்.
‘ஐந்து காதல் மொழிகள்’ என்ற புத்தகத்தை எழுதிய கேரி சேப்மேன், தம்பதிகள் ஒருவருக்கொருவர் காதலையும் அன்பையும் எவ்வாறு வெளிப்படுத்துவது, பெற்றுக்கொள்வது என்பதைப் புரிந்து கொள்வதற்கான எளிய நடைமுறை வழிகாட்டிகளை இந்த நூலில் விவரித்திருக்கிறார்.
திருமண ஆலோசகராக விளங்கிய சேப்மேன் பல தம்பதியர் தங்களுடைய துணையின் அன்பை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார். குறிப்பாகப் பெண்கள் தம் மனம் திறந்து கணவனைப் பாராட்டுவதோ, அன்பை வெளிப்படுத்துவதோ குறைவு. அதில் ஏனோ பெறும் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தார். தம்பதியர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்த ஐந்து காதல் மொழிகளை, அன்பான வார்த்தைகள், தரமான நேரம், பரிசுகள், வேலைகளில் உதவுதல், சின்னச் சின்ன தொடுதல்கள் போன்றவைகளாக விவரிக்கிறார்.
மனைவி கணவரிடம் வெளிப்படுத்தக்கூடிய ஐந்து காதல் மொழிகள்:
அன்பான வார்த்தைகள்;
மனதிற்குள்ளேயே தன் அன்பை பூட்டி வைத்துக் கொள்ளாமல், மனைவி கணவரிடம் அன்பாகப் பேசுவதும், பாராட்டுவதும், ஊக்கமளிப்பதும் அவசியம். இந்த காதல் மொழியை பின்பற்றும்போது நேர்மறையான வார்த்தைகளையும் புகழ்ச்சியான மொழியையும் உபயோகிப்பார் மனைவி. இதனால் தம் துணையால் மிகவும் நேசிக்கப்படுவதாக கணவர் உணர்கிறார்.
தரமான நேரம்:
எத்தனை பிஸியாக இருந்தாலும் தினமும் கணவருக்காக தரமான நேரத்தை ஒதுக்குவது முக்கியம். பெண்கள் வீட்டு வேலைகளில் எப்போதும் தங்களது முழு கவனத்தையும் செலுத்தாமல், அர்த்தமுள்ள நேரத்தை கணவருடன் ஒன்றாக செலவிடுதல் வேண்டும். அதில் ஆழமான உரையாடல் இருக்க வேண்டும். கவனச் சிதறல்கள் இல்லாமல் கணவருடன் நேரத்தை செலவிடும் போது நேசம் இன்னும் கூடும்.
பரிசுகள்:
தங்கள் துணையைப் பற்றி ஸ்பெஷலா சிந்திக்கிறீர்கள் என்பதை காட்டும் கருவிகள் தான் பரிசுகள். அவை சிறியதாக இருந்தாலும் அன்பு மற்றும் அக்கறையின் அடையாளங்கள் ஆகும். எனவே அவ்வப்போது சிறிய சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிக் கொடுத்து தன் துணைவரை மிகப் பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்துவது சிறப்பாகும்.
வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்:
வீட்டுக்காரியங்களில் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல வெளியில் சென்று செய்யக்கூடிய வேளைகளில் மனைவி கணவனுக்கு உதவிடல் வேண்டும். இந்த செயல்கள் அன்பு மொழியை ஒருவருக்கொருவர் உணர்த்துவதற்கு உதவுகிறது. தான் ஆதரிக்கப்படுகிறோம் என்பது எதை ஆழமாக உணர வைக்கிறது.
சின்னச் சின்னத் தொடுதல்கள்:
சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் வேண்டும். லேசாக தோளோடு சேர்த்து ஹக் செய்து கொள்ளுதல், கைகளைப் பிடித்துக் கொண்டு பேசுதல், போன்ற சிறிய உடல் ரீதியான தொடுதல்கள் நேசிப்பை உணர வைக்கும் வழிகளாகும்.