
சர்வதேச அன்னையர் தினம் என்பது அனைத்து தாய்மார்களின் நிபந்தனையற்ற அன்பையும், தியாகத்தையும் கௌரவிக்கும் வகையில் உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது. இந்த சிறப்பு நாளின் அர்த்தம் மற்றும் அதனுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதன் மூலம் வரலாற்று ரீதியில் பல்வேறு நாடுகளில் அன்னையர்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.
அன்னையர் தினம் என்பது உலக அளவில் உள்ள அனைத்து அன்னையர்களின் தன்னலமற்ற அன்பை அங்கீகரிக்கும் ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகம் மற்றும் அன்பு ஆகியவை வெளிப்படையாக தெரிவதில்லை. அவற்றுக்கு உரிய பாராட்டும் கிடைப்பதில்லை. ஆனால் அன்னையர்களை பொறுத்தவரை அவர்களுடைய அன்பும், தியாகமும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களுக்கு இடைவெளியின்றி கிடைத்து வருகிறது என்பது அவர்களுடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதனால், அவர்கள் அன்னையர் தினம் மூலம் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுவதற்கான அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் உலக அளவில் உள்ள அனைவருமே தாய்மையின் சாரமான அன்பை நினைவு கூறும் வகையிலும், அன்னையர்களை பாராட்டும் வகையிலும் அன்னையர் தினத்தன்று அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி ஆசிகளை ஏற்றுக்கொள்ளும் நாளாக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்னையர்களை பொறுத்தவரை அந்த நாள் தன்னுடைய குழந்தைகளுடன் புனிதமான பிணைப்பை நினைவுபடுத்தும் நாளாகவும் அவர்களுக்கு அமைகிறது.
அன்னையர் தினம் என்பது பழங்காலத்திலிருந்தே நம் நாட்டின் பெண் வடிவ கடவுளுக்கு உரிய வசந்த விழாவாக கொண்டாடப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக அளவில் பல பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, குடும்பத்தவர்களுக்கு அனுபவ வழி காட்டும் பாட்டியாக, கை பிடித்து அழைத்துச் செல்லும் ஆசானாக பல்வேறு முகங்களைக் கொண்ட அவளுக்கு அன்னை என்ற முகமே உன்னதமான அடையாளமாகும்.
அமெரிக்க நாட்டில் இந்த அன்னையர் தினம் உருவானது என்றாலும் உலக அளவில் இதனுடைய முக்கியத்துவம் வெகு விரைவில் பரவி விட்டது. உலகெங்கும் உள்ள அனைத்து மக்களும் அன்னையர் தினத்தை தங்களுக்கே உரிய வகையில் கொண்டாடி வருகிறார்கள். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் அந்தந்த நாடுகளுக்கு உரிய கலாச்சார பழக்க வழக்கங்களின்படி அன்னையர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செலுத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பூக்களை பரிசாக வழங்குவது, வாழ்த்து அட்டைகள் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை பரிசாக வழங்குவது, குடும்ப ரீதியாக இணைந்து விருந்துகளை பரிமாறுவது, குழந்தைகள் தங்கள் கைகளால் செய்த பரிசுகளை அன்னையருக்கு வழங்கி மகிழ்வது, மறைந்த குடும்ப பெரியவர்களை நினைவு கூருவது, தேவாலய சேவைகள் போன்ற விஷயங்கள் மூலம் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரை தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனைகள் செய்வது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக விருந்து உண்ணுவது, உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து மற்றும் விழா கொண்டாடுவது என்ற முறையில் அன்னையர் தினத்தை வரவேற்கிறார்கள்.
ஜப்பானிய மக்கள் மறைந்த முன்னோர்களை நினைவுகூரும் நாளாகவும், அனைவருக்கும் பரிசுகளை அளித்து மகிழும் நாளாகவும், குடும்பத்தோடு சேர்ந்து உணவு உண்ணும் நாளாகவும் அன்னையர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
மெக்சிகோ நாட்டில் இசை மற்றும் விருந்தோடு ஆடம்பரமான கொண்டாட்டங்கள் அன்னையர் தினத்தன்று கடைபிடிக்கப்படுகின்றன. அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் உயர்தரமான ஆடை மற்றும் ஆபரணங்கள், பரிசுகளை ஒருவருக்கொருவர் அளித்து மகிழ்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் கலாச்சார முறைகளுக்கு ஏற்ப மாலை நேர விருந்து, அன்னையர்களுக்கு பரிசுகள் வழங்குவது, கோவில்களில் பூஜை, சமூக விழா என்று அன்னையர் தினத்தை வரவேற்கிறார்கள்.
உலக அளவில் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் அதற்கென ஒரு கருப்பொருள் அடிப்படையில் இந்நாள் கொண்டாடப்படுவதில்லை. அன்னையின் அன்பு என்ற கருப்பொருளே அதன் மையமாக இருக்கிறது.