

நமது இந்தியத் திருநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் முப்படைகள் உள்ளன. ஒவ்வொரு படையும் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. ராணுவ வீரர்கள் நாட்டிற்காக அல்லும் பகலும் அயராது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தேசநலனைக் கருதி, அரும்பாடு பட்டு ஓயாமல் உழைத்து வருகிறாா்கள். அப்படி முப்படைகளில் ஒன்றான ‘காலாட்படை’ நமது ராணுவத்தின் முதல் படையாக விளங்குவதே சிறப்பான ஒன்றாகும்.
இந்தப் படையானது போா்களின் ராணியாக கருதப்படுவது பெருமை வாய்ந்த விஷயமே! அப்படிப்பட்ட காலாட்படைகளை, அது சாா்ந்த வீரர்களின் பங்களிப்பை, அவர்களின் வீரதீர சாகச செயல்களைப் பாராட்டி கெளரவம் சோ்க்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் நாள் காலாட்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் களமிறங்கிய பாகிஸ்தான் கபைலி படையினர்களின் திட்டத்தை முறியடிக்கவும், ஜம்மு காஷ்மீா் மக்களைப் பாதுகாக்கவும், சீக்கிய படையின் முதலாவது பட்டாலியன் 27.10.1947ல் ஶ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களின் பங்களிப்பு, தேசப்பற்று, கடமை உணர்வைப் பாராட்டும் வகையில் மேற்படி நாளை காலாட்படை தினமாக (The Nation Commemortes Independent India!s First Infantary Action To Defeat Pakisthani Invaders In Ksahmir.)கருதி அனுசரிக்கப்படுகிறது. காலாட்படையினர்களின் நோக்கமே நாட்டின் எல்லைப் பகுதியை பாதுகாப்பதாகும்.
இதனில் பல பிாிவுகள் உள்ளன. லேசான காலாட்படை, கனரக காலாட்படை, மலைப்பிரதேச காலாட்படை என பல வகைகள் உள்ளன. இவர்களே ராணுவத்தின் முக்கிய தூண்கள் மட்டுமல்ல, முதுகெலும்பு என்றும் கூறலாம். இந்த காலாட்படை வீரர்கள் தரைப்போா்களில் மிகுந்த ஈடுபாடும் நிபுணத்துவமும் கொண்டவர்களாவாா்கள்.
இவர்கள் தரை வழியே ஊா்ந்து கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தாய் நாட்டிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறாா்கள். அவர்களின் பங்களிப்பை நாம் என்றும் மறக்காமல் பெருமைப்படுத்த வேண்டும்.
எனவே, 79வது காலாட்படை கொண்டாடப்படும் இந்த வேளையில் காலாட்படை வீரர்களின் அர்ப்பணிப்பு, பணியை பாராட்டும் வகையில் நாமும் நமது பங்கிற்கு அவர்களை கெளரவப்படுத்துவோம். அவர்களின் ஒப்பற்ற சேவையை மனதார பாராட்டுவோம்!