

சத் பண்டிகை, சூரிய அஸ்தமனம் முதல், சூரிய உதயம் வரை கொண்டாடப்படும் பண்டிகையாகும். சூரியக் கடவுள் மற்றும் அவரது மனைவி உஷாவை வழிபட்டு அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும், பூமியில் வாழ்க்கையை ஆதரித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவும், சத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நான்கு நாட்கள் நீடிக்கும் சத் பண்டிகையில், சடங்குகள், உண்ணாவிரதம், உதயமாகும் மற்றும் மறையும் சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், தண்ணீரில் நின்று புனித நீராடல், தியானம் போன்றவை அடங்கும். சத் பண்டிகையின் முக்கியமானது மூன்றாவது நாளாகும். சத் பண்டிகை, இந்து இதிகாசங்களாகிய ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டும் தொடர்புடையவை எனக் கூறப்படுகின்றது.
ராமாயணத்துடன் சத் பண்டிகையின் தொடர்பு: சத் பண்டிகையின் தொடக்கத்துடன், ஸ்ரீராமர் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் அயோத்திக்கு திரும்பியபோது, அவரும் அவரது மனைவி சீதாவும் சூரியக் கடவுளைக் கௌரவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், சூரியன் மறையும்போது மட்டுமே அதை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மகாபாரதத்துடன் சத் பண்டிகையின் தொடர்பு: மகாபாரதத்தில் புகழ் பெற்ற கதாபாத்திரமான கர்ணன் சூரியனுக்கும் குந்திக்கும் பிறந்த குழந்தை. கர்ணன் எப்போதும் தண்ணீரில் நின்று சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்வது வழக்கம். திரௌபதியும் பாண்டவர்களும் கூட, தங்கள் ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்காக இதுபோன்ற பூஜையை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
அறிவியல் ரீதியில் சத் பூஜை: சத் பண்டிகை சமயம், அதிகாலை நேரத்தில் நதியில் நீராடுவது சிறந்ததாகும். ஏனெனில், தண்ணீரில் குளிப்பதன் மூலமும், சூரிய ஒளியில் உடலை வெளிப்படுத்துவதன் மூலமும் சூரிய சக்தி அதிகரித்து, மனித உடலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சத் பூஜையை மேற்கொள்வதின் மூலம், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.
சத் பண்டிகை விபரங்கள்: புகழ் பெற்ற இந்திய பண்டிகையான தீபாவளிக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு தொடங்கும் சத் பூஜை, இந்த வருடம் அக்டோபர் மாதம் 25 முதல் 28 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் (நஹய் கய்): சத் பூஜையின் முதல் நாளில், பக்தர்கள் கங்கை போன்ற புனித நதிகளில் நீராடிய பிறகு வீட்டிற்கு புனித நீரை எடுத்துச் சென்று பிரசாதங்களைத் தயாரிப்பார்கள். முதல் நாள் சத் பூஜை, மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும்.
இரண்டாம் நாள் (லோஹண்டா அல்லது கர்ணா: சத் பூஜையின் இரண்டாம் நாளில், பக்தர்கள் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து உண்ணாவிரதம் முடிவடையும். சத் பூஜையின் இரண்டாவது முக்கியமான சடங்கு, பக்தர்கள் சூரியன் மற்றும் சந்திரனை வணங்கிய பிறகு குடும்பத்திற்காக கீர், வாழைப்பழங்கள் மற்றும் அரிசி போன்ற பிரசாதங்களைத் தயாரிப்பதாகும். பிரசாதத்தை உட்கொண்ட பிறகு, ஒருவர் தண்ணீர் அருந்தாமல் 36 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
மூன்றாம் நாள் (அர்க்யா): சந்தியா அர்க்யா (மாலை பிரசாதம்) சத் பூஜையின் மூன்றாம் நாள் தண்ணீர் இல்லாமல் விரதம் அனுசரிக்கப்படுகிறது, மேலும், நாள் முழுவதும் பூஜை பிரசாதங்களைத் தயாரிப்பதை உள்ளடக்கியது. பின்னர் பிரசாதங்கள் ஒரு மூங்கில் தட்டில் வைக்கப்படுகின்றன. பிரசாதத்தில் தேங்காய், வாழைப்பழம் மற்றும் பிற பருவகால பழங்கள் அடங்கும். மூன்றாம் நாள் மாலை சடங்குகள் ஒரு நதி அல்லது குளம் அல்லது எந்த சுத்தமான நீர்நிலையின் கரையிலும் நடைபெறுகின்றன. அனைத்து பக்தர்களும் அஸ்தமிக்கும் சூரியனுக்கு 'அர்க்யா' (அர்ப்பணம்) வழங்குகிறார்கள்.
நான்காம் நாள் (பிஹானியா அர்க்யா): சத் பூஜையின் கடைசி நாளில், பக்தர்கள் மீண்டும் ஆற்றின் கரையில் அல்லது எந்த நீர் நிலையிலும் அதிகாலை வேளையில் கூடி, உதயமாகும் சூரியனுக்கு பிரார்த்தனை செய்து பிரசாதம் வழங்குகிறார்கள். பிரசாதம் வழங்கப்பட்ட பிறகு, பக்தர்கள் இஞ்சி, சர்க்கரை பதார்த்தம் அல்லது பழங்களைச் சாப்பிட்டு சத் பூஜை விரதத்தை முடிக்கின்றனர்.
சூரிய அஸ்தமனம் முதல், சூரிய உதயம் வரை கொண்டாடப்படும் சத் பண்டிகை ஒரு தனித்துவமான பண்டிகையாகும்.