பகத்சிங் மறைவால் மூண்ட பிரச்னை: மதக் கலவரத்தில் இறந்த ஒரே இந்திய தேசியவாதி!

அக்டோபர் 26, கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி பிறந்த தினம்
Ganesh Shankar Vidyarthi
Ganesh Shankar Vidyarthi
Published on

த்திரிகையாளர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீரரான கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) 1890ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், பதேபூர் அடுத்த ஹத்காம் கிராமத்தில் பிறந்தார். தந்தை ஜெய் நாராயணன், தாய் கோமதி தேவி. எளிய கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம். தந்தை பள்ளி ஆசிரியர். உருது, பாரசீக மொழிகள் வீட்டிலேயே கற்றார். வறுமை காரணமாக உயர்கல்வி கற்க முடியவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் தானாகவே சமஸ்கிருதம், ஆங்கிலம் கற்றார். படிக்கும் காலத்தில் அவருக்கு எழுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் பல கதைகள் மற்றும் கட்டுரைகளை ‘வித்யார்த்தி’ எனும் பெயரில் எழுதினார்.

பத்திரிகை துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்தார். ஏராளமான பத்திரிகைகளையும் படிப்பார். ‘ஹமாரி ஆத்மோசர்கதா’ என்ற தனது முதல் நூலை எழுதியபோது அவருக்கு வயது 16. அவர் எழுதிய அனைத்தும் புகழ் பெறத் துவங்கியது. படிப்பது, எழுதுவதே நாள் முழுவதும் பணியாகக் கொண்டதால், அவருடைய கண் பார்வை பாதித்தது. அதனால் கண்ணாடி அணிந்தார்.

இதையும் படியுங்கள்:
இதிகாசங்களோடு தொடர்புடைய சத் பண்டிகையின் ரகசியம்!
Ganesh Shankar Vidyarthi

அதன் பின்னர் தனது தந்தையுடன் கான்பூர் வந்தார். அங்கே சில வேலைகளில் சேர்ந்து பார்த்தார். ஆனால், எதுவும் அவருக்கு திருப்தியை தரவில்லை. அதேவேளையில், அவருடைய படைப்புகள் பல செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களில் வெளியாகியது.

1911ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவிற்கு வந்தார். அந்த சமயத்தில் இவர் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதியவை பலராலும் மிகவும் பாராட்டப்பட்டது. அதனால் அவர் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. பிரிட்டிஷ் அரசும் மற்ற பத்திரிகையாளர்களும் அவரை மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். ஹிந்தி எழுத்துலகில் ‘வித்யார்த்தி’ ஒரு அரசியல் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

பல இடங்களில் வேலை பார்த்து சலித்துப்போன வித்யார்த்தி கடைசியாக, ‘பிரதாப் பிரஸ்’ எனும் அச்சகத்தை நிறுவி ‘பிரதாப் வீக்கிலி’ எனும் பத்திரிக்கையை 1913ம் ஆண்டு ஆரம்பித்தார். துவக்கப்பட்ட சில நாட்களிலேயே ஹிந்தி பத்திரிகை உலகில் தனி இடம் பிடித்தது. அந்த பத்திரிகையில் தனது 23 வயதில் முதல் தலையங்கம் எழுதினார் வித்யார்த்தி. அது இன்றும் ஹிந்தி ஜர்னலிசத்தில் ஒரு பாடமாக உள்ளது. காந்திஜியை முதன்முறையாக 1916ல் சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
திரைத் துறை முதல் ஓவியம் வரை: கலையின் பின்னால் இருக்கும் ஆழமான உளவியல்!
Ganesh Shankar Vidyarthi

வித்யார்த்தி பத்திரிகை மிகவும் புகழ் பெற்றது. அதில் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செய்திகள் வெளியிட்டார். அரசினர் மற்றும் உயர்குடி மக்களின் அடாவடிகளை தோலுரித்துக் காட்டினார். சும்மா விடுமா பிரிட்டிஷ் அரசு? உடனடியாக அவரது அச்சகத்தில் அதிரடி சோதனை நடத்தி, அரசிற்கு எதிராக செயல்படுவதாக பத்திரிகை மூடப்பட்டது.

கலங்கவில்லை வித்யார்த்தி. சமயம் கிடைக்கும்போதெல்லாம் வேறு பெயர்களில் ‘பிரதாப்’ பத்திரிகையை வெளியிட்டார். அரசை எதிர்த்து தொடர்ந்து எழுதி வந்ததால் ஏகப்பட்ட முறை அவருக்கு அரசு அபராதம் விதித்தது. சில சமயங்களில் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், வித்யார்த்தி மாறவே இல்லை. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியபடி இருந்தார்.

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மில் தொழிலாளிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ‘பிரஜா மண்டல்’ எனும் அமைப்பை துவங்கி அரசிற்கு எதிராக மற்றும் உயர்குடி மக்களின் அடாவடிகளுக்கு எதிராகப் போராட வைத்தார். இதனால் அடிக்கடி சிறை சென்று வந்தார். இந்த காலத்தில் உத்தரப்பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926 முதல் 1929 வரை பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்:
இளம்பிள்ளை வாதம்: உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை சிதைக்கும் வைரஸ்!
Ganesh Shankar Vidyarthi

பகத்சிங், ராஜகுரு போன்றவர்கள் தூக்கில் போடப்பட்ட சமயத்தில் கான்பூர் முழுவதும் சோகம் கவ்வியது. பகத்சிங்கின் மறைவுக்கு கடைகள் அடைக்கப்பட்டன. அதனை சிலர் எதிர்த்தனர். இதனால் பெரும் கலவரம் மூண்டது. கான்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. கலவரத்தை அடக்க முடியாமல் பிரிட்டிஷ் அரசு திண்டாடியது. சும்மா இருப்பாரா வித்யார்த்தி! வீட்டிலிருந்து கிளம்பி நேரடியாக கலவரம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று சமாதான முயற்சியில் இறங்கினார்.

அவருடைய நண்பர்கள் அவரைத் தடுத்துப் பார்த்தனர். இனக் கலவரம் தீவிரமகா இருந்த நிலையிலும் தனிப்பட்ட முறையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்களை இந்துக்கள் பகுதியில் இருந்தும், இந்துக்களை முஸ்லிம்கள் இருக்கும் பகுதிகளில் இருந்தும் மீட்டார். இருப்பினும் சில கயவர்களின் தாக்குதல் காரணமாக1931ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி கலவரத்தில் காலமானார். மதக் கலவரத்தில் இறந்த ஒரே இந்திய தேசியவாதி வித்யார்த்தி மட்டுமே. அப்போது அவரது வயது 41தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com