International Day In Support Of Victims Of Torture: சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கான ஆதரவு அளிக்கும் நாள்!

International Day In Support Of Victims Of Torture
International Day In Support Of Victims Of Torture

ஜூன் 26: சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில், 1987 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பெற்ற சிறப்புத் தீர்மானத்தின்படி, உலகெங்கிலும் உடல் வழியாகவும், உள வழியாகவும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜூன் 26 ஆம் நாளினை 'சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்' (International Day in Support of Torture Victims) என்று அறிவித்துள்ளது.

சித்திரவதை என்பது 'உடலால், உளத்தால் வலியினையும் வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பயன்படுத்துவது' என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் மேற்படி வாக்கியமே வரைவிலக்கணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உடலியல் வழியிலான சித்திரவதைகள் உளவியல் வழியிலான தாக்கங்களுக்கு வழி வகுக்கின்றன. இராணுவம் மற்றும் காவல்துறையினர், முதலாளிகளின் அடியாட்கள், போராளிகளின் ஆயுதக் குழுக்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள் போன்றவர்களால் சித்திரவதைகள் அதிகமாக நடத்தப்படுகிறது.

சித்திரவதை என்பது ஒரே முறையைக் கொண்டதல்ல. இது அமைப்புகளுக்கேற்ப வேறுபடுகிறது.

உடலியல் வழியிலான சித்திரவதைகள் என்பது,

1. தடி, இடுப்புப்பட்டி, மண் நிரப்பிய குழாய் போன்றவற்றினால் மிருகத்தனமாக உடலெங்கும் தாக்குதல்

2. தடிகளால் பாதங்களில் தாக்குதல், ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல் போன்ற திட்டுமிட்டுத் தாக்குதல்

3. உடலில் கடும் வலியுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கும் வழியில் மின்சாரம் பாய்ச்சுதல்

4. மூச்சுத்திணற வைத்தல்

5. எரிகின்ற சிகரெட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல் உள்ளிட்ட செயல்களின் வழியாக உடலில் எரிகாயங்களை உண்டாக்குதல்.

6. இருகைகளையும் முறுக்கிக் கட்டித் தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மட்டும் கட்டித் தொங்கவிடுதல்

7. தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் போன்ற உடலுறுப்புகளைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

8. பாலியல் வழியில் துன்புறுத்துதல்

என்பது போன்ற பல வழிகளில் உடல் வழியிலான துன்புறுத்துதல்கள் நடத்தப் பெறுகின்றன.

உளவியல் வழியில்,

1. தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தம் ஏற்படுத்துதல்.

2. நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி மன அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்

3. குடும்பத்தினரை அழித்துவிடப் போவதாக அச்சுறுத்துதல்

4. பெண்களுக்குப் பாலியல் தொல்லை தருதல்

என்பது போன்ற பல வழிகளில் உளவியல் வழியிலான துன்புறுத்தல்களும் நடத்தப் பெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
முதுமையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அவர்களுக்கு என்ன தேவை?
International Day In Support Of Victims Of Torture

பெரும்பான்மையான நாடுகளிலுள்ள காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவரைப் பல வழிமுறைகளில் சித்திரவதைகள் செய்த பின்பு, சித்திரவதை செய்யப்படவில்லையென்று மருத்துவரிடம் சான்றிதழைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் மறைமுகமான ஒரு சித்திரவதைதான்.

பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி, உலகில், ஆறில் ஜந்து பங்கு நாடுகளில், இராணுவம், காவல்துறை போன்ற அரசு அமைப்பு வழியிலான சித்திரவதைகள் இடம் பெற்று வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அகதிகளாக உள்ளவர்களில் 10இல் இருந்து 30 சதவீதம் பேர் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சித்திரவதைகளுக்கு ஆளானவர்களுக்கு, அடுத்து சிகிச்சை அளித்து அவர்களை முழுமையாகக் காப்பாற்ற வேண்டும் அல்லது அந்த மன வேதனையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை 'சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்' (International Day in Support of Torture Victims) வலியுறுத்துகிறது.

சித்திரவதையடைந்தவர்களில் சிலர் சிகிச்சையின் போது உடனடியாகக் குணமடையலாம். சிலருக்கு நீண்டகாலச் சிகிச்சை தேவைப்படலாம். சில வேளைகளில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்நாள் உள்ளவரை தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக, உடல் உறுப்புக் குறைபாடு, இனப்பெருக்க ஆற்றல் இழப்பு போன்றவற்றை நிரந்தர விளைவுகளாகக் குறிப்பிடலாம்.

சித்திரவதைக்குட்பட்டவர் தாக்கப்பட்ட நிலையில் வெளிப்படையான காயங்கள், எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம். மூச்சுத் திணற வைக்கும் சித்திரவதை முறைகளால் சுவாசக்குழாய் தொடர்புடைய நோய்கள் ஏற்படலாம். சித்திரவதைக்குள்ளானவர்கள் பலருக்கும் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்கள் அதிகம் ஏற்படுவதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இவர்களது ஆட்சி தமிழ் திரை இசை உலகின் பொற்காலம்!
International Day In Support Of Victims Of Torture

உடலியல் வழியிலான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு, அவற்றிலிருந்து ஓரளவு மீட்க முடியும். ஆனால், சித்திரவதையினால் ஏற்படும் உளவியல் வழியிலான பாதிப்புகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதென்பது உடலியல் சிகிச்சையை விட முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக ஏற்படும் உணர்வினைக் கலைவது கடினம். சித்திரவதைக்கு முன்பு உறுதியானவராகவும், பலமுடையவராகவும் இருந்த அவர் சித்திரவதையின் பின் உறுதி இழந்தவராக, களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவேத் தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப மறுக்கிறார். மன அமைதியை இழந்து தவிக்கிறார். இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கின்றது.

பொதுவாகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்திரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

அவர்களுக்காக வருடத்தில் ஒரு நாளை மட்டும் உருவாக்கி, அவர்கள் குறித்துச் சிந்திப்பதை விட, அவர்களின் உளத்தாக்கங்களைக் கய வேண்டியது சமூகத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சித்திரவதை செய்யும் இராணுவம், காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதேப் போன்று, பணம், பலம் உள்ளிட்ட சில சக்திகளை ஆதாரமாகக் கொண்டு அப்பாவிகளைச் சித்திரவதை செய்யும் ஆதிக்க மனப்பான்மையுடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்நாளில் வலியுறுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com