
பால் வெளி மண்டலத்திலேயே பூமியில் மட்டுமே உயிர் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கிறது. இதன் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். சூரியக்குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் பூமி. இது சூரியனில் இருந்து 15 கோடி கிமீ தொலைவில் உள்ளது. கோள்களில் 5 வது பெரிய கோள். பூமியின் சுற்றளவு, வெள்ளி கிரகத்தை விடச்சில நூறு கிமீ அதிகமானது.
பூமி பாறைகளால் ஆன கோள், தரைப்பகுதி கொண்ட கோள் என்பதால் இதில் மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் என திடமான பகுதிகள் உள்ளன. பூமியில் உயிர்கள் இருப்பதோடு, வளி மண்டலம் என்ற மெல்லிய படலத்தால் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.
நாம் வாழும் பூமியின் சுற்று சூழலை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது என்ற நோக்கில் கொண்டாடப்படுவது தான் சர்வதேச பூமி தினம்.இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ம் தேதி உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
1969 ம் ஆண்டில் அமெரிக்க கலிபோர்னியா கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப் பிறகு பயணம் மேற்கொண்டார் அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன். அவர் சாண்டா பார்பரா பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது,அங்கே கடலில் எண்ணெய் சிதறலை நேரில் பார்த்த பிறகு, மனம் கொதிப்படைந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் திரும்பினார்.அதற்கு பிறகு தான் ஏப்ரல் 22 ம் தேதியை சர்வதேச பூமி தினமாக மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை ஐ.நா சபையில் 1970 ம் ஆண்டு சமர்ப்பித்தார்.
ஏப்ரல் 22 ம் தேதியின் போது பூமியின் வட கோளப்பகுதி வசந்த காலமாகவும், தென் கோளப்பகுதி இலையுதிர் காலமாகவும் இருக்கும்.என்பதால் இந்நாளை தேர்வு செய்தார் நெல்சன்.அந்நாளை அங்கே அமெரிக்கா கொண்டாடி வந்தது.இதை தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் "பூவி நாள் எனும் எர்த் டே" கொண்டாடுவது பற்றி செய்தியை உலக அமைதிக்காக போராடிய ஜான் மெக்கோநெல் அறிவித்தார்.அதிலிருந்து வருடந்தோறும் ஏப்ரல் 22 ம் தேதியை பூமியை பாதுகாக்கும் உறுதிமொழியை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
1972 ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றன.ஏழை, பணக்கார நாடுகள் என்னும் வித்தியாசமின்றி அனைத்து நாடுகளிலும் உலக புவி நாள் கொண்டாடப்படுகிறது."எர்த் டே வொர்க்" எனும் அமைப்பின் கீழ் உள்ள 190 நாடுகள் இத்தினத்தை கடைபிடிக்கப்படுகிறது.
1990 ம் ஆண்டு சர்வதேச பூமி தினத்தன்று 141 நாடுகளில் 20 கோடிக்கும் மேலான மக்களைத் திரட்டி சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகறியச் செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம் கிடைத்தது.அத்துடன் 1992 ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகள் சபை பூமி குறித்து விவாதிக்க நடத்திய உலகளாவிய மாநாட்டிற்கும் இந்த முயற்சி அடிப்படையாக அமைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை ஐ.நா சபை உலக பூமி தினத்தை முன்னிட்டு அறிவிக்கிறது.இந்த ஆண்டு, 2025, உலக பூமி தினத்தின் கருப்பொருள் " நமது சக்தி, நமது கிரகம் ". புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறி, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் பொதுவான பொறுப்பை இந்த கருப்பொருள் மையமாகக் கொண்டுள்ளது.
பலநாடுகளில் தற்போது காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.அதனால் பருவநிலை மாறுபாடு மற்றும் பூமி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.அதுவே உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.எதிர்காலத்தில் சுகாதாரமான, பசுமையான மற்றும் சுத்தமான சமூகத்தை உருவாக்க தவறினால் விளைவுகள் மோசமாகவே இருக்கும்.அதனை தவிர்க்க ஒவ்வொரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பதே உலகப் புவி நாளின் நோக்கமாக இருக்க வேண்டும்.