இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு மாற்றினால்? வேண்டாம் அப்படி பண்ணாதீங்க!

left-handed people
If left-handed people are forced to switch to right-handedness?
Published on

ஆகஸ்ட் 13: பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்!

'பன்னாட்டு இடதுகைப் பழக்கமுடையோர் நிறுவனம்' (Left-handers Club) எனும் அமைப்பின் நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் முதன் முதலாக, 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, ‘பன்னாட்டு இடதுகைப் பழக்கமுடையோர் நாள்’ (International Lefthanders Day) கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் நாளில், பன்னாட்டு இடதுகைப் பழக்கமுடையோர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக அனுசரிக்கப்படும் பன்னாட்டு நாளாக இருக்கிறது. 

உலகளாவிய மொத்த மக்கள் தொகையில் 7 முதல் 10 விழுக்காட்டினர் இடதுகைப் பழக்கமுடையோர் எனச் சில கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகைப் பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால், சமூகத்தில் பல்வேறு துன்பங்களை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் நலம் சார்ந்து அவர்களின் வசதிக்கு ஏற்ப எந்த பொருளும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. வலது கை பயனாளிகளின் மனநிலைக்கு ஏற்பவே அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் அனைத்துமேத் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பல சவால்களைச் சந்திக்கின்றனர். எழுதுதல், வாகனம் ஓட்டுதல், கணினி பாவனை முதல் அன்றாடம் வீட்டுத் தாழ்ப்பாள் திறப்பது வரை அவர்களின் இயல்புக்கு மாறான செயலாகத்தான் இருக்கின்றன. இந்தச் சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் இடையூறுகளையும், துன்பங்களையும் மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே, இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலேயேச் சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது, மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம் என்று மூன்று முதன்மைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுப் பக்க அரைக்கோளம், உடலின் வலதுப் பக்க உறுப்புகளையும், வலதுப் பக்க அரைக்கோளம், உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கிச் செயல்படுவதால் இடது கைப் பழக்கம் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை எடை குறைவாக உள்ளதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க!
left-handed people

இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளைச் சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பல முயற்சிகளை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை, இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது மருத்துவ அறிவியல். மேலும், இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களின் செயல்திறன் குறைந்து போவதாகக் கூறப்படுகின்றது. இடது கைப் பழக்கம் உள்ளவர்களால், பலதரப்பட்ட பணிகளை (Multi tasking) ஒரே நேரத்தில் செய்ய முடியுமாதலால் கட்டாயப்படுத்தி அவர்களின் பழக்கத்தை மாற்றத் தேவையில்லை என்கின்றனர்.

இடது கைப் பழக்கம் உடைய மக்கள் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளனர் என வரலாறு கூறுகிறது. உலகப் புகழ் பெற்றவர்களில், அரிஸ்டாட்டில், லியோனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டின், நியூட்டன், நெப்போலியன், பில்கேட்ஸ், மேரி கியூரி, மைக்கிலாஞ்சலோ, ஒபாமா, அன்னை தெரசா, சச்சின் டெண்டுல்கர், மார்க் சூக்கர்பேர்க், சார்லி சாப்ளின், வால்ட் டிஸ்னி, ரொனால்டு ரீகன், மகாத்மாகாந்தி, பெஞ்சமின் பிராங்க்ளின் என்று பலரும் இடது கை பழக்கமுடையோர்  என்பது இங்கு குறிப்பிட்த்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com