உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் செப்டம்பர் 30 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு' எனும் அமைப்பு, 1991 ஆம் ஆண்டில், பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக, விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347 முதல் 420) நினைவு நாளான செப்டம்பர் 30 ஆம் நாளை பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாகக் கொண்டாட வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் நாள் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (Translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (ஒரு விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும். இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவேப் பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறு மொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; சுமேரியர்களின் கில்கமெசு காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது.
மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதே நேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்புரட்சிக்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18 வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் அமைக்கப்பட வேண்டுமென்று கருதப்பட்டு, மொழிபெயர்ப்பு குறித்து தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறைச் சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.
உலகிலேயே அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக, பைபிள் இருக்கிறது. ஹீப்ரு, அராமிக், கொயின், கிரேக்கம் ஆகிய மொழிகளிலிருந்து 'பைபிள்' அதிக அளவாக, 3,384 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் மொழியிலான 'தி லிட்டில் பிரான்ஸ்' 579 மொழிகளிலும், இத்தாலிய மொழியிலான கார்லோ கொலோடி என்பவர் எழுதிய 'பினோச்சியோவின் சாகசங்கள்' 260 மொழிகளிலும், சீன மொழியில் லாவோசி என்பவர் எழுதிய 'தாவோ டி ஜிங்' 250 மொழிகளிலும், ஆங்கில மொழியில் ஜான் பன்யன் என்பவர் எழுதிய 'பயணத்தின் முன்னேற்றம்' 200 மொழிகளிலும், ஜெர்மன் மொழியில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய 'கம்யூனிஸ்ட் அறிக்கை' 200 மொழிகளிலும், ஆங்கில மொழியில் லூயிஸ் கரோல் என்பவர் எழுதிய 'வொண்டர்லேண்டில் ஆலிஸின் சாகசங்கள்' 174 மொழிகளிலும், ஜெர்மன் மொழியில் ஜேக்கப் மற்றும் வில்ஹெல்ம் கிரிம் ஆகியோரால் எழுதப் பெற்ற 'கிரிம்ஸ் பேரி டேல்ஸ்' 170 மொழிகளிலும், ஆங்கில மொழியில் எலன் ஜி வைட் என்பவர் எழுதிய 'கிறிஸ்துவுக்குப் படிகள்' 160 மொழிகளிலும், ஸ்பானிஷ் மொழியில் மிக்வேல் டி செர்வ்ண்டஸ் சவேத்ரா எழுதிய 'டான் குயிக்சோட்' 140 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றன. இப்பட்டியலில் திருவள்ளுவர் எழுதிய 'திருக்குறள்' 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியலில் 36வது இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மொழிபெயர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருதுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய், தகுதியுரை, பொன்னாடை போன்றவை வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.