வெறிநாய்க்கடி நோயையும், அதைத் தடுப்பதையும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, நோய்த்தடுப்புக்கு அடித்தளம் அமைத்த லூயிஸ் பாஸ்டரின் மறைந்த நாளன்று உலக வெறிநாய்க்கடி நாள் (World Rabies Day) என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நோயைப் பற்றியும், அதைத் தடுக்கும் பல்வேறு வழிமுறைகளைப் பற்றியும் விலங்கு கடித்தவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, உலக வெறிநாய்க்கடி நாளன்று பன்னாட்டு விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொள்ளப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் நாளன்று முதல் வெறிநாய்க் கடி நாள் பரப்புரை செய்யப்பட்டது.
வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் (Rabies) என்பது மனிதர், விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றான ரேபீஸ் தீ நுண்மத்தால் (Rabies Virus), இளஞ்சூட்டுக் குருதியுடைய (warm blooded animals) விலங்குகளில் ஏற்படும் மூளையழற்சி நோய் ஆகும். இந்நோயானது, பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும்.
காடுகளில் வாழும் சில வகை வௌவால், நரி, ஓநாய், மற்றும் வீட்டு விலங்கான நாய் போன்ற ஒரு சில விலங்குகளின் உடலில் வழக்கமாய் வாழும் இந்தத் தீநுண்மம், அவ்விலங்குகள் கடிப்பதால் நேரடியாகவோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ இந்நோய் ஏற்படுகிறது. வீட்டு விலங்கான நாயிலிருந்தே இந்நோய் பொதுவாக மனிதர்களுக்குப் பரவுகின்றது. மூளையழற்சி ஏற்படுத்தி, மைய நரம்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதித்து, பின்னர் மூளையையும் பாதித்து இறுதியில் மரணத்தை விளைவிக்கும் இந்த தீநுண்மம், விலங்குகளின் உமிழ்நீரில் அதிகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் கடிக்கும் போதோ, ஏற்கனவே உள்ள ஆறாத காயத்தில் உமிழ்நீர் படுவதாலோ மிக எளிதாக மனிதரின் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இந்தத் தீநுண்மம் அதிக அளவாக ஐந்து ஆண்டுகள் வரை 'உறக்கத்தில்' இருந்துவிட்டுப் பின்னர் கூடத் தாக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் வளர்க்கும் நாயை இந்த நோயிலிருந்து பாதுகாப்பதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கலாம். எனவே நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் அந்நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும்.
நாய்க்கடிக்குப் பின் முதல் மூன்று நாட்கள் கழித்து, காயத்தில் வலி அல்லது அரிப்பு, காய்ச்சல், 2 முதல் 4 நாட்கள் நீடிக்கும் தலைவலி, நீரைக் கண்டு அஞ்சுதல், பிரகாசமான ஒளி அல்லது சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமை, சித்தப்பிரமை, நடத்தை மாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
பொதுவாக, விலங்கு கடித்துவிட்டால், காயத்தை 10 முதல் 15 நிமிடங்களுக்குச் சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரைப் பீய்ச்சிக் கழுவ வேண்டும். 70% ஆல்ஹகால் / எத்தனால் அல்லது பொவிடோன் – ஐயோடின் பயன்படுத்தியும் காயத்தைக் கழுவ வேண்டும். அதன் பிறகு உடனடியாக, ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இருக்கின்றன. இந்த நோய்த் தடுப்பூசி விலங்கு கடித்த பின் 0, 7, மற்றும் 21 அல்லது 28 வது நாட்களில் அளிக்கப்படுகிறது.
உலகளவில் ஆண்டுதோறும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இத்தகைய வெறிநாய்க்கடியால் மரணமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் சிறுவர்களாகவே இருக்கின்றனர். நாய்க்கடி மற்றும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாத 5 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளேப் பெரும்பான்மையாக, நாய்க்கடிக்கும், அதன் தொடர்பான நோய்க்கும் பலியாகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரக் குறிப்பு தெரிவிக்கிறது.
நாய்க்கடியைத் தவிர்க்க, பொது மக்களுக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்கு, நாயின் நடத்தை மற்றும் அதன் உடல் பாவனைகள் (கோபம், சந்தேகம், நட்பு போன்றவை) பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். விலங்கு கடித்தால் அல்லது கீறினால் அதை மறைக்காமல் கூற வேண்டுமென்று, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
எனவே, இந்நாளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், வெறிநாய்க்கடி நோயால் மரணம் கூட ஏற்படலாம் என்றும், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.