மகளிர் தின ஸ்பெஷல்: 'வீட்ல சும்மாதானே இருக்கா'னு சொல்றவங்களுக்கு ஸ்பெயின் நாட்டுல வெச்ச பதிலடி!

La Mujer del Detergente
La Mujer del Detergente
Published on

இன்று சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள் என்று நாம் மேடைகளில் பெருமையாகப் பேசிக்கொள்கிறோம். ஆனால், இன்றும் நம் வீடுகளில் எந்த ஒரு சம்பளமும் இல்லாமல், எந்த ஒரு விடுமுறையும் இல்லாமல் 24 மணி நேரமும் உழைத்துத் தேயும் ஒரு ஜீவன் இருக்கிறது. 

அவர்களைப் பார்த்து மிகச் சாதாரணமாக, 'நீ வீட்ல சும்மாதானே இருக்க, உனக்கு என்ன கஷ்டம்' என்று சொல்லும் வழக்கம் இன்றும் மாறவில்லை. இப்படி 'சும்மா' இருக்கிறார்கள் என்று முத்திரை குத்தப்படும் பெண்களின் மாபெரும் தியாகத்தைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிலையைப் பற்றி இந்த மகளிர் தினத்தில் நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதுகில் ஒரு குடும்பத்தைச் சுமக்கும் சிலை!

ஸ்பெயின் நாட்டின் டோரேலவேகா (Torrelavega) என்ற ஒரு அழகான நகரத்தில் ஒரு அற்புதமான வெண்கலச் சிலை கம்பீரமாக நிற்கிறது. அந்தச் சிலையைத் தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு பெண் மிக பாரமான ஒரு சுமையை முதுகில் சுமந்து கொண்டு நடப்பது போலத் தெரியும். அருகில் சென்று பார்த்தால் தான் அதன் உண்மையான வலியும் அர்த்தமும் புரியும். அந்தப் பெண்ணின் முதுகில் இருப்பது வெறும் மூட்டை கிடையாது. 

ஒரு வீட்டை நிர்வகிக்கத் தேவையான வாஷிங் மெஷின், துடைப்பம், வாளி, இஸ்திரி பெட்டி என ஒட்டுமொத்த வீட்டு உபயோகப் பொருட்களையும் அவள் ஒற்றை ஆளாகத் தன் முதுகில் சுமந்து கொண்டிருக்கிறாள். மெர்சிடிஸ் பிமேனியா (Mercedes Fimenia) என்ற புகழ்பெற்ற கலைஞர் தான் இந்தச் சிலையைத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். காலையில் எல்லோருக்கும் முன்பாக எழுந்து, இரவு அனைவரும் தூங்கிய பிறகு தூங்கச் செல்லும் அந்த மெஷின் போன்ற வாழ்க்கையை இந்தச் சிலை மிகக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.

மறைக்கப்பட்ட தியாகத்தின் வலி!

இந்தச் சிலைக்கு ‘La Mujer del Detergente' அதாவது துப்புரவுப் பெண் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இது வெறும் பார்வைக்கு வைக்கப்பட்ட ஒரு சாதாரண கலைப்படைப்பு அல்ல. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தாய்மார்கள், குடும்பத்தலைவிகள் தினமும் செய்யும் அந்தப் பிரம்மாண்டமான உழைப்பிற்கான ஒரு சின்ன அங்கீகாரம் இது. 

இதையும் படியுங்கள்:
முட்டை வேகவைத்த நீரை இனி கீழே கொட்டாதீர்கள்!
La Mujer del Detergente

சமையல் செய்வது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என ஒரு வீட்டின் ஒட்டுமொத்த ஆணிவேராக இருப்பவர்கள் பெண்கள் தான். ஒரு ஆபீஸில் வேலை பார்த்தால் கூட வாரத்தில் ஒரு நாள் லீவு கிடைக்கும். ஆனால், இந்த வீட்டு வேலைக்கு ரிடையர்மென்ட் என்பதே கிடையாது. உடம்பு சரியில்லாத நேரங்களில் கூட ஓய்வெடுக்காமல் உழைக்கும் அவர்களின் இந்த மாபெரும் தியாகத்திற்கு எந்த ஒரு கைம்மாறும் கிடைப்பதில்லை.

அவள் வீட்டில் ஒன்றும் செய்வதில்லை என்ற வார்த்தைக்குப் பின்னால், அவள் தான் இந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் பாரத்தையும் சுமக்கிறாள் என்ற மிகப்பெரிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்வமான தூணாக இருக்கும் அவர்களை இனியாவது நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில் நாம் எடுக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு உறுதிமொழி இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
Breastfeeding: தாய்ப்பாலை எப்படி தந்தால் குழந்தைக்கும், தாய்க்கும் வசதியாக இருக்கும்?
La Mujer del Detergente

குடும்பத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களைப் பார்த்து 'நீ ஒன்றும் செய்வதில்லை' என்று சொல்வதை இன்றோடு நிறுத்திக்கொள்வோம். 'நீ தான் எங்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறாய்' என்று பெருமையோடு சொல்லப் பழகுவோம். 

ஒவ்வொரு தாய்க்கும், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் இது ஒரு சிறப்பான தினமாக அமையட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com