யோகக் கலையை ஒத்த ஒரு பயிற்சியாக விளங்கி வரும் தியானம், அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, அமைதிப்படுத்த உதவும் ஒரு முறை.
பிரபஞ்ச ஒளியை உள்வாங்கி தியானம் செய்வதின் மூலம், ஆன்மீக ரீதியாக மேம்படலாம். அதுவே "உள் ஒளி பிரபஞ்ச தியான" முறையாகும்.
கண்களை மூடியவாறே, மனதில் ஓடும் தேவையற்ற எண்ணங்களை திசை திருப்பி, மனதை ஒரு நிலைப்படுத்தலாம். இதில், பலவகையான பயிற்சிகள் உள்ளன. மிக உன்னதமான மனித வளக்கலைகளில் "தியானம் மற்றும் பிரபஞ்ச தியானம்" முக்கியமானவை எனலாம்.
இத்தகைய உயரிய கலையான "தியானம்" குறித்து, த்யான குரு திரு குமார் கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்தில் அருமையாக எழுதிய " Inner Light Cosmic Meditation" என்கிற ஆங்கிலப் புத்தகம், கோவை- திரு மணிமோகன் R. என்பவரால், "உள் ஒளி ப்ரபஞ்ச தியானம்" என்கிற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இருவரைப் பற்றிய சிறு அறிமுகம் :-
த்யான குரு திரு குமார் கிருஷ்ணமூர்த்தி, தன்னுடைய எட்டாவது வயதிலேயே, தியான முறையைத் துவங்கியவர். இத்தாலியன் ஷிப்பிங் கம்பெனியில் Country Head ஆக பணி புரிந்தவர்.
INNER LIFE FOUNDATION" இன் நிறுவனர்/தலைவர். தியானம் குறித்து நிறைய வருடங்கள் ஆராய்ச்சி செய்துள்ளார். தியானம் குறித்த அநேக பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். கார்ப்பரேட் உலகில் இவரை அனைவருக்கும் தெரியும். மிகவும் எளிமையான இவர் ஒரு வித முன்னேற்பாடுமின்றி எந்த பொருளிலும் பலவித மொழிகளில் சரளமாக பேசும் திறன் படைத்தவர்.
பள்ளி செல்லும் குழந்தையாக இருப்பினும், மற்றவர்கள் ஆனாலும், அவர்களின் "AURA" வைப் பார்த்து விபரம் கூறும் திறமை கொண்டவர். சமீபத்தில் தியானம் குறித்து இவரால் விபரமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "INNER LIGHT COSMIC MEDITATION" புத்தகம் மிகவும் அருமையாகவும், உபயோகமுள்ளதாகவும் இருக்கிறது என பலரும் பாராட்டியுள்ளனர்.
திரு மணிமோகன் ஆர். , Central GST Department -இல் IRS அதிகாரியாக பணி புரிபவர். கோயம்புத்தூர் பள்ளியில் படிக்கையிலேயே, தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சிறந்தவராக விளங்கியவர். கல்லூரி படிப்பு முடிந்தபின், AG's அலுவலகத்தில் வேலை பார்த்தபோதும், கல்வி சம்பந்தப்பட்ட சேவைகள், நுகர்வோர் விழிப்புணர்வு போன்ற பல சமூக சேவைகளில் ஈடுபட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "திருக்குறள் 108" எனப் பெயரிட்டு, இளைய சமுதாயம் பயில வழி வகுத்தவர்.
திரு மணிமோகன் ஆர்., "தியான குரு திரு குமார் கிருஷ்ணமூர்த்தி" யின் ஆங்கில புத்தகத்தை, "உள் ஒளி பிரபஞ்ச தியானம்" என்று பெயரிட்டு அருமையாக தமிழாக்கம் செய்துள்ளார். சமீபத்தில் இப்புத்தக வெளியீடும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
"உள் ஒளி ப்ரபஞ்ச தியானம்"-- புத்தகம் கூறும் விபரம்:-
தியானம் செய்வதால் கிடைக்கும் சக்தியையும், பலன்களையும் எடுத்துரைக்கும் நூலாக மட்டுமன்றி, உள் ஒளியை உணரும் வழி முறைகளையும் தெளிவு படுத்துகிறது உள் ஒளி பிரபஞ்ச தியானம் புத்தகம்.
தியானம் குறித்த பல விபரங்கள், அதாவது, மனித வாழ்க்கையில் தியானம், தியானப் பயிற்சி, தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், தியானத்தின் குணாதிசயங்கள் ஆகியவை குறித்து, துணைத் தலைப்புக்களில், புத்தகத்தினுள் அளிக்கப் பட்டிருக்கின்றன.
அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தும் முறையை புலப்படுத்துகிறது. தொழில் சார்ந்த முன்னேற்றம், கற்பனைத் திறன், படைப்பாற்றால் போன்றவை தியானத்தினால் ஏற்படுத்த முடியும். தியானம், மனிதனின் முன்னேற்றப் பாதைக்கு வழி வகுப்பதோடு, பிரபஞ்சத்துடன் இணையவும் உதவுகிறது.
தியானத்தை ஒரு குறிப்பிட்ட செயல் முறையாக மட்டுமல்லாது, கவனம் செலுத்தும் எந்தவொரு செயலையும் "தியானமாக" கருதலாம் என்பதை, "உள் ஒளி பிரபஞ்சம்" புத்தகம் பிரதி பலிக்கிறது.