இந்தியாவின் சிங்கம்: ஆங்கிலேயர்களை அலறவிட்ட நேதாஜியின் அதிரடி வரலாறு!

ஜனவரி 23: சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்!
Subhas Chandra Bose
Subhas Chandra Bose
Published on

இந்திய சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் தலைவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (Subhas Chandra Bose). இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை அகற்ற அகிம்சை வழியை காந்தி தேர்ந்தெடுக்க நேதாஜியோ வன்முறை வழியைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் 23 ஜனவரி (1897) ஒடிசாவின் கட்டக் நகரில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே கல்வியறிவில் சிறந்தவராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பின் இங்கிலாந்தில் இந்திய சிவில் சர்வீஸ் (ICS) தேர்வில் வெற்றி பெற்றார்.

ஆனால் அப்போதிருந்த ஆங்கிலேய ஆட்சியில் பணிபுரிய விரும்பாமல் அதிலிருந்து வெளியேறி முழுமையாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரது அதீத ஈடுபாடு அவரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் (1938, 1939) உயர்த்தியது. ஆனால் ஆங்கில அரசுக்கு எதிராக அகிம்சை போராட்டத்தை விரும்பிய காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸிலிருந்து விலகினார். அகிம்சை எவ்விதத்திலும் தீர்வு தராது என்ற நோக்கில் 'ஆயுதப் போராட்டமே சுதந்திரத்திற்கு வழி' என நம்பிய சுபாஷ் சந்திர போஸ் அதற்கான தேடலில் இறங்கினார்.

பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய தேசிய ராணுவம் (INA) அமைப்பை உருவாக்கினார்.

'தில்லி சலோ', 'நீங்கள் இரத்தம் தாருங்கள்; நான் சுதந்திரம் தருகிறேன்' (Give me blood, and I will give you freedom) என்ற முழக்கம் மூலம் இளைஞர்களையும் போராட்டத்திற்கு தூண்டினார். இவரது இடி போன்ற முழக்கங்கள் மக்களிடையே பெரும் உற்சாகத்தையும் சுதந்திர போராட்டத்தில் எழுச்சியையும் ஏற்படுத்தின.

இந்திய தேசிய இராணுவத்தின் (INA) நிறுவனராக துணிச்சலான தேசியவாத தலைவராக மக்களிடையே கம்பீரமாக வலம் வந்த இவரே ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய முதல் முக்கிய இந்திய தலைவராவார். இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிய அச்சத்தை நீக்கியதுடன் எதிரிக்கு தண்ணீர் காட்டியவர்.

இதையும் படியுங்கள்:
Nethaji Subash Chandra Bose Quotes: நேதாஜி கூறிய 15 பொன்மொழிகள்!
Subhas Chandra Bose

சிங்கப்பூரில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உருவாக்கி செயல்பட்ட வீரர். இவரது தனித்தன்மை வாய்ந்த தலைமைத் திறன், பல மொழிகளில் புலமை, தெளிவான திட்டமிடல், தைரியமான முடிவுகள் போன்ற பல விஷயங்கள் இவரை சிறந்த தலைவராக உருவாக்கின.

உயர் பதவி (ICS) விட்டு விலகி முழுமையாக நாட்டுக்காக அர்ப்பணித்து தியாகமும் தன்னலமற்ற வாழ்வும் வாழ்ந்தவர். மதம், சாதி, மொழி வேறுபாடுகள் இன்றி அனைவரையும் ஒருங்கிணைத்தது இவரது சிறப்பு.

குறிப்பாக சாதிக்கத் துடித்த பெண்களுக்கு ஆதரவு தந்தவர். பெண்களுக்கு இராணுவத்தில் இடம் அளித்து பெருமை படுத்தியவர்.

INAவில் ராணி ஜான்சி படை (Rani of Jhansi Regiment) அமைத்து பெண்களுக்கு தன்னம்பிக்கை சுயமரியாதை தந்து சம வாய்ப்பு வழங்கி இந்திய பெண்களின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியவர்.

ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியுடன் சர்வதேச ஆதரவினைத் திரட்டி இந்திய சுதந்திரப் போராட்டத்தை உலகளவில் முன்னிறுத்தியவர் என்ற பெருமைக்குரியவராக இன்றும் உலக நாடுகளின் மரியாதையைப் பெறுபவர். வெளிநாட்டு ஆதரவைப் பயன்படுத்தினாலும், இந்திய சுதந்திரத்தையே தனது இறுதி இலக்காக கொண்டு பாடுபட்டவர்.

இதையும் படியுங்கள்:
ஜெய்ஹிந்த் முழக்கமளித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!
Subhas Chandra Bose

இருப்பினும் ஆயுதப் போராட்ட வழி வன்முறையால் சுதந்திரம் பெற முயன்றது சரியா? இது பொதுமக்கள் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என பலவிதமான விமர்சனங்களை சந்தித்தார். நாசி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்தது நெறிமுறைக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

INA ராணுவ வலிமை பிரிட்டிஷ் படைக்கு சமமல்ல என்றும் உண்மையில் வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகம் மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகு அவரது ஆட்சி அதிகார மையமாக இருக்குமோ என்ற அச்சம் காரணமாக இவர் மீதான கடும் விமர்சனங்கள் வைத்து உள் அரசியல் நிகழ்ந்தது என கூறப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்டாலும், அதைப் பற்றிய மர்மம் இன்றும் தொடர்வது கவனிக்கத்தக்கது. எனினும் அவரது வாழ்க்கை இன்றும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக துணிச்சல், ஒழுக்கம், தியாகம், தேசபக்தி ஆகியவற்றின் சின்னமாக நினைவு கூரப்படுகிறார்.

வன்முறை எக்காலத்திலும் தீர்வல்ல எனினும், முறையான ராணுவக்கட்டுடன் கூடிய எதிர்ப்பு நிச்சயம் எதிரிகளுக்கு அச்சம் தந்து விலக வைக்கும் என்று உணர்த்திய சுபாஷ் சந்திரபோஸ் புகழ் என்றும் இந்திய சுதந்திர வரலாறு பேசும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com